இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர் இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-1, கடவுளே நமது அரணும் கேடயமும்!

கோட்டையும் அரணுமாக விளங்கும் நம் கடவுளாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவர் வழங்கும் மீட்புக்காகவும் மேன்மைக்காகவும் காத்திருப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-1, கடவுளே நமது அரணும் கேடயமும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளே நமது புகலிடம்!’ என்ற தலைப்பில் 61-வது திருப்பாடலில் 6 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அதனை நிறைவு செய்தோம். இவ்வாரம் 62-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 12 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. 'பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு; தாவீதின் புகழ்ப்பா' என்றும் துணைத்தலைப்பிடப்பட்டுள்ளது. இங்கே ஒருசாரார் கடவுளையே பாடகர் தலைவர் என்று கருதினர். மறுசாரார் தாவீதின் காலத்தில் பாடகர் குழுவை வழிநடத்தும் நபரை தலைவராகக் கருதினர். (காண்க 1 குறிப்பேடு 6:33, 16:5-7, 25:6). அடுத்து எதுத்தூதன் குறித்து இங்கே கூறப்பட்டுள்ளது. இவர் தாவீது அரசரால் ஏற்படுத்தப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பதையும் நாம் காண முடிகிறது. இதற்கு முதலாம் குறிப்பேடு நூலில் சான்று காணக்கிடக்கிறது.

குரு சாதோக்கும் அவர் உறவின் முறைக் குருக்களும் கிபயோன் தொழுகைமேட்டில் ஆண்டவரின் திருக்கூடாரத்தின்முன் பணிசெய்ய வேண்டும். இஸ்ரயேலுக்கு ஆண்டவர் கட்டளையாகத் தந்த திருச்சட்டத்தில் எழுதியுள்ளபடி, காலையிலும் மாலையிலும் தவறாமல் எரி பலிபீடத்தின் மேல் அவர்கள் எரிபலிகளைச் செலுத்த வேண்டும். இவர்களோடு ஏமானையும் எதுத்தூனையும் பெயர் சொல்லித் தேர்ந்து கொள்ளப்பட்ட சிலரையும் ‘ஆண்டவரின் பேரன்பு என்றென்றும் உள்ளது’ என்றுரைத்து அவருக்கு நன்றி செலுத்துமாறு கட்டளையிட்டார்; இவர்களோடு ஏமான், எதுத்தூன் ஆகியோரை எக்காளங்களையும், கைத்தாளங்களையும், இறைப்பாடலுக்குரிய இசைக் கருவிகளையும் இசைக்க ஏற்படுத்தினார்; எதுத்தூனின் புதல்வரை வாயில் காவலராக நியமித்தார் (காண்க 1 குறி 16:39-42).

மேலும் தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்தூன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு: ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர். எதுத்தூனும், கெதலியா, செரீ, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்தூனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்தூனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர் (காண்க 1 குறி 25:1-3)

இந்தத் திருப்பாடலில் நேரடியாக இறைவேண்டல் அல்லது புகழ்ச்சிப் பாடல் குறித்து எதுவும் இல்லை, மேலும் எந்தச் சூழலில் இது எழுதப்பட்டது என்பது குறித்தும் செய்தி இல்லை. அத்துடன் இத்திருப்பாடலில் துயரம் அல்லது மகிழ்ச்சி குறித்தும் எடுத்துக்காட்டப்படவில்லை. ஆனால் தாவீது மிகுந்த மகிழ்ச்சியுடன் கடவுள் மீது கொண்டுள்ள தனது சொந்த நம்பிக்கை குறித்தும், அவரை முழுமையாகச் சார்ந்திருப்பது குறித்தும் வெளிப்படுத்துகிறார், மேலும் அவருக்காகத் தொடர்ந்து காத்திருக்கும்படி தன்னை ஊக்கப்படுத்திக்கொள்கின்றார் (வச 1-7). அத்துடன் பேரார்வமுடன் அவர் மற்றவர்களையும் கடவுள் மீது மட்டுமே மிகுந்த நம்பிக்கை கொள்ளும்படி உற்சாகப்படுத்துகிறார் மற்றும் ஊக்குவிக்கிறார் (வச. 8-12). ஒட்டுமொத்த இந்தத் திருப்பாடலையும் வாசிக்கும் போது, அதனை மூன்று பகுதிகளாகப் பார்க்க முடிகிறது. முதல் பகுதியில் கடவுள்மீது தான் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் (வச 1-2;5-7). இரண்டாவது பகுதியில் தீயவர்களின் செயல்களைக் குறிப்பிட்டு அவர்களின் அழிவு குறித்து உலகப் பொருள்களுடன் ஒப்பிட்டுப்பேசுகிறார் (வச 3-4). மூன்றாவதாக, மானிடருக்கு அறிவுரைகள் வழங்கி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார்.

இப்போது இத்திருப்பாடலின் முதல் ஏழு இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளை அமைந்த மனதுடன் வாசிப்போம். “கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே; உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்? நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர். அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்; பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்; அவர்களது வாயில் ஆசிமொழி; அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா) நெஞ்சே, கடவுளுக்காக  மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே” (வச 1-7)

இங்கே காத்திருப்பு என்பது பொறுமையைக் குறிக்கிறது. கடவுளின் காரியத்தில் காத்திருப்பவர்கள்தாம் அவர் வழங்கும் அருள்கொடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதனைத்தான் பொறுத்தவர் பூமியாள்வார் என்று நம் முன்னவர்கள் கூறினர். மேலும் "கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் கடமை இருந்தால் வீரன் ஆகலாம் பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம், இவை மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்" என்று கவிஞர் வாலியும் எழுதினார். "நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது" என்கிறது இனிமைமிகு பாடல் (காண்க 5:2) இங்கே விழித்திருந்தது என்பதைக் காத்திருந்தது என்றும் நாம் பொருள்கொள்ளலாம். கருவுற்று தன் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் 10 மாதம் விழிப்போடும் பொறுமையோடும் காத்திருந்தால்தான் அவர் அழகியதொரு குழந்தையைக் பெற்றெடுக்க முடியும். அவ்வாறே விதை விதைத்துவிட்டு அதன் விருட்சத்திற்காகப் பொறுமையுடன்  காத்திருக்க வேண்டும் விவசாயி. ஆக, ஆன்மிகத்திலும் இந்தக் காத்திருப்பு என்பது மிகவும் முக்கியமானதாக அமைகின்றது. நம்மைப் படைத்த கடவுளுக்காக நமது ஆன்மா எப்போதும் காத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இங்கே "கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்" என்கின்றார் தாவீது. இவ்விடத்தில் செயல் என்பது மீட்பு என்றும் பொருளாகிறது. மேலும் "உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன்" என்கிறார். கற்பாறை என்பது மிகவும் உறுதியானது என்பது நமக்குத் தெரியும். அவ்வாறே கோட்டை என்பது மன்னரையும் மக்களையும் பாதுகாக்க கூடிய அரணாக அமைகிறது. எனவேதான் தாவீது இவ்வாறு கூறுகின்றார். மேலும் நெஞ்சே, கடவுளுக்காக  மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அரணும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே” என்றும் மீண்டுமாக உரைக்கின்றார். அதாவது கற்பாறை, அரண், கோட்டை, புகலிடம் ஆகிய வார்த்தைகளை தாவீது வேறு சில திருப்பாடல்களிலும் பயன்படுத்துகின்றார். "ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்" (காண்க திபா 18:2). அவ்வாறே, ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது, “ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்" (காண்க 2 சாமு 22:1-4) என்று உரைக்கின்றார். அப்படியென்றால், தாவீது பெற்ற வெற்றி அனைத்திற்கும் அவர் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருந்ததும் மிக முக்கிய காரணமாக அமைகின்றது.

ஒருமுறை 10 மனிதர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கடவுள் வந்தார். "உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்” என்றார். அவரிடம் அந்தப் பத்து பேரும் தம் தேவைகளைக் கேட்டனர். “எனக்கு கணக்கிலடங்கா பணமும், பெரிய வியாபாரமும்  வேண்டும்” என்று முதல் மனிதன் கேட்டான். “நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்” என்று இரண்டாம் மனிதன் கேட்டான். “உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்” என்று கேட்டான் நான்காமவன். இந்த உலகில் நான் மட்டுமே அறிவில் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று கேட்டான் ஐந்தாமவன். இப்படியாக ஒன்பது பேரும் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டனர். பத்தாமவன் அப்படியே அமைதி காத்தான். கடவுள் அந்த 9 பேர் கேட்ட ஒவ்வொன்றையும் சற்றும் தாமதிக்காமல் உடனே கொடுத்துவிட்டார். பின்னர் அந்தப் பத்தாவது மனிதனை நோக்கி, “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். அதற்கு அவன், "கடவுளே! “உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்...” என்று கேட்டான். உடனே மற்ற ஒன்பது பேரும் அவனைத் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்தனர். "மனநிம்மதி, மன நிறைவு..." நாங்களும் அதுக்கு தானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?” என்று நகைத்தனர். கடவுள் அந்த ஒன்பது பேரிடமும், “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன். நீங்கள் போகலாம்” என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து, "நீ கொஞ்ச நேரம் இரு... நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்... சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர். கடவுள் அந்தப் பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; அவனுக்கு என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது. துடித்தது! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும் கூட, இன்னும் எதுவுமே கிடைக்காத அந்தப் பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர். நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர். தாம் விரும்பியது கையில் இருப்பதை உணர்ந்து அதை அனுபவிக்க மறந்தனர். அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது. மனநிறைவு இல்லாமல் போனது. பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான். கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவும் கிடைத்து விட்டது.

ஆகவே, கோட்டையும் அரணுமாக விளங்கும் நம் கடவுளாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து அவர் வழங்கும் மீட்புக்காகவும் மேன்மைக்காகவும் காத்திருப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2024, 15:11