தேடுதல்

கடவுளே என்றும் நிலையானவர் கடவுளே என்றும் நிலையானவர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-2, கடவுள் அருளும் வாழ்வே நிலையானது!

வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போன்று நிலையற்றது என்பதை உணர்ந்து, இவ்வுலகில் கடவுள் நமக்கு அருளியுள்ள இந்த வாழ்க்கையை அவர் விரும்பும் வகையில் அர்த்தமுடனும் அழகுடனும் பொறுப்புடனும் வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-2, கடவுள் அருளும் வாழ்வே நிலையானது!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளே நமது அரணும் கேடயமும்!’ என்ற தலைப்பில் 62-வது திருப்பாடலில் முதல் ஏழு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 8, 9 ஆகிய இரண்டு இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை இறை ஒளியில் வாசிப்போம். “மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்” (வச 8-9).

இன்று நாம் தியானிக்கும் இறைவசனங்களில் இரண்டுவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றார் தாவீது அரசர். முதலாவதாக, "மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம்" என்கின்றார். இன்று மக்களை ஆளும் தலைவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலானவர்கள் என்று காட்டிக்கொள்கின்றனர். மேலும், கடவுள்மீது நம்பிக்கை வைத்துள்ளதாக வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளத்திலும் தங்களின் செயல்பாடுகளிலும் கடவுலற்றவர்களாக வாழ்வதைப் பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக, அண்மையில் நடைபெற்ற நமது இந்தியப் பாராளுமன்றத் தேர்தலின்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாரதப் பிரதமர் மோடி, “நான் பயோலாஜிக்கலாக (உயிரினங்களுக்குரிய இயற்கை செயல்முறைகளுடன்) பிறக்கவில்லை, என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியது அந்தப் பரமாத்மா தான்” என்றும், “ஏதோ ஒரு விடயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” (நன்றி: தி இந்து). என்று பேசியிருந்தார். இச்செய்தி இந்தியா முழுவதும் பெருமளவில் பரவி பல்வேறு வகையான கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, ‘மோடி தான் கடவுளால் அனுப்பட்டவர்  என்றால் இப்படியெல்லாம் பிரிவினை பேச்சுகளைப் பேசுவாரா? இந்தளவுக்குத் தேர்தல் பத்திர ஊழல் நடைபெற அனுமதித்திருப்பாரா? நாட்டில் தலைவிரித்தாடும் பல பிரச்சனைகளுக்குக் காரணமாகியிருப்பாரா, குஜராத், ஒடிசா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் மதக் கலவரங்கள் இடம்பெற அனுமதித்திருப்பாரா என்றெல்லாம் எதிர்க்கட்சியினரும், சமூக நலன்விரும்பிகளும், பல்வேறு தன்னார்வத் தொண்டு இயக்கத்தினரும் கேள்விகள் எழுப்பினர். மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றபோது பாராளுமன்றத்திலும் இக்கருத்து வெகுவாக எதிரொலித்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பல்வேறு தலைவர்களும் இப்படித்தான் தங்களை கடவுளுக்கும் மேலானவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் நிகழ்ந்து வரும் சில வேண்டத்தகாத செயல்களைக் காணும்போது நம்மை இப்படித்தான் நினைக்க வைக்கின்றது. பொதுவாக, நாம் எல்லாருமே கடவுளால் இவ்வுலகிற்குப் பல்வேறு நற்காரியங்களைப் புரிய அனுப்பப்பட்டவர்கள்தாம். அதில் நமக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆனால் நாம் கடவுளுக்குக் கீழானவர்களாகப் பணிபுரியதில்லை, மாறாக, அவருக்கு மேலானவர்களாகவே பணிபுரிய விரும்புகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை. குறிப்பாக, நம்மை ஆளும் தலைவர்கள் இக்கருத்தினை நன்கு மனதில் நிறுத்திகொள்ள வேண்டும். ஏனென்றால், தங்களைக் கடவுளுக்கும் மேலாக நினைத்துக்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்தம் உழைப்பை உறிஞ்சிக் குடித்த ஆட்சியாளர்களின் வாழ்வு இறுதியில் சரித்திரத்தில் அல்ல சரிவில்தான் முடிந்தது என்பதையும் உலக வரலாற்று நிகழ்வுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்தவிதத்தில் தாவீது அரசரின் வாழ்வைப் பார்க்கும்போது, தனது ஆட்சியின்போது, கடவுளுக்கு எதிராக சில பாவ காரியங்களை செய்தபோதும் அவர் ஒருபோதும் கடவுளுக்கும் மேலானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதே இல்லை. தான் இஸ்ரயேல் மக்களை ஆளும் மாபெரும் அரசராக இருந்தபோதும், என்றும் வாழும் கடவுளை மட்டுமே தனது ஒப்பற்ற அரசராகப் போற்றினார் அவர். "நீரே என் அரசர்; நீரே என் கடவுள்! யாக்கோபுக்கு வெற்றி அளிப்பவர் நீரே. 5எங்கள் பகைவர்களை உமது துணையால் தாக்கி வீழ்த்துவோம்; எங்களுக்கு எதிராய் எழுந்தோரை உமது பெயரால் மிதித்துப் போடுவோம். என் வில்லை நான் நம்புவதில்லை; என் வாள் என்னைக் காப்பாற்றுவதுமில்லை. நீரே பகைவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றினீர்; எங்களை வெறுப்போரை வெட்கமுறச் செய்தீர்" (காண்க திபா 44:4-7) என்ற தாவீது அரசரின் வார்த்தைகள் இதனை உறுதி செய்கின்றன. மேலும் இதே கருத்தை, தனது திருப்பாடல்களில் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்துகிறார் தாவீது.

இரண்டாவதாக, "மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை; துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள்” என்று கூறுகின்றார் தாவீது. இங்கே மனித வாழ்வின் நிலையாமையைக் குறித்துப் பேசுகின்றார். அதாவது, மனிதர் நிலையற்றவர்கள், கடவுள் மட்டுமே எக்காலத்திற்கும்  நிலையானவர் என்று குறிப்பிடுகின்றார். மேலும் இதே வார்த்தையை சற்றும் மாற்றமால் 62-வது திருப்பாடலில் 9-வது இறைவசனத்திலும் எடுத்துரைக்கும் தாவீது அரசர், ‛ஆண்டவரே! என் முடிவு பற்றியும் என் வாழ்நாளின் அளவு பற்றியும் எனக்கு அறிவுறுத்தும். அப்போது, நான் எத்துணை நிலையற்றவன் என உணர்ந்து கொள்வேன். என் வாழ்நாளைச் சில விரற்கடை அளவாக்கினீர்; என் ஆயுட்காலம் உமது பார்வையில் ஒன்றுமில்லை; உண்மையில், மானிடர் அனைவரும் தம் உச்ச நிலையிலும் நீர்க்குமிழி போன்றவரே! அவர்கள் நிழலைப்போல நடமாடுகின்றனர்; அவர்கள் வருந்தி உழைப்பது வீண்; அவர்கள் சேமித்து வைக்கின்றனர்; ஆனால் அதை அனுபவிப்பது யாரென அறியார்” (திபா 39:4-6) என்று மற்றொரு திருப்பாடலிலும் கூறுகின்றார்.

ஒரு காட்டில் துறவி ஒருவர் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவரிடம் பலர் சீடர்களாகப் பாடம் கற்று வந்தனர். துறவி எப்போதுமே மௌன விரதத்தில்தான் இருப்பார். ஆனால் ஆண்டிற்கு ஒருநாள் மட்டும் அவர் தன் சீடர்களிடம் உரையாற்றுவார். ஒரே ஒரு சீடரின் கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளிப்பார். ஒருநாள் அந்த ஆசிரமத்திற்குப் புதிதாக ஒரு சீடன் வந்து சேர்ந்தான். அவனுக்கு ஆசிரமத்தின் நடைமுறைகள் சுத்தமாகப் புரியவில்லை. மேலும் ‘துறவி ஆண்டு முழுக்கவும் எதுவும் பேசாதபோது அவரிடம் சீடர்கள் எதற்காக இருக்க வேண்டும்’ என்ற கேள்வி அவனைக் குடைந்துகொண்டே இருந்தது. ஒருநாள் துறவி மௌனம் கலைந்தபோது, அந்தச் சீடன் ஒரு மண் பாத்திரத்தில் பழரசம் எடுத்துச் சென்று அவருக்குக் கொடுத்தான். பழரசத்தை அருந்திவிட்டு அந்த மண் பாத்திரத்தை அப்படியே கீழே போட்டு உடைத்தார் துறவி. பின் சீடர்களை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். அனைத்துச் சீடர்களும் புரிந்தது போல தலையை ஆட்டினர். ஆனால் புதிய சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பிற சீடர்களிடம் இதுகுறித்து வினவினான். அவனையே சுயமாகச் சிந்திக்குமாறு அவர்கள் அவனிடம் கூறினர். ‘மண் பாத்திரத்தைக் கீழேபோட்டு உடைப்பதில் என்ன பாடம் இருக்க முடியும்?’ என அவன் சிந்திக்க ஆரம்பித்தான். பல மாதங்கள் ஆகியும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. துறவி மௌனத்தைக் கலைத்துப் பேசக்கூடிய அந்த ஒருநாள் வந்தது. அப்போது துறவியிடம் கேள்வி கேட்க மற்ற சீடர்கள் அவனுக்கு வாய்ப்பு அளித்தனர். "குருவே, நீங்கள் அந்த மண் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்ததன் மூலம் எங்களுக்கு என்ன கூற விரும்பினீர்கள்?" என்ற தனது சந்தேகத்தினை அவன் அவரிடம் கேட்டான். அதனைக் கேட்ட துறவி மென்மையாகச் சிரித்துக்கொண்டே, "இந்த உலகில் நிலையானது எதுவுமே இல்லை என்பதை விளக்கவே நான் அன்று அவ்வாறு செய்தேன்" என்று கூறிய அவர், "சீடர்களே, நிலையாமைத் தத்துவத்தை ஒருவன் புரிந்துகொள்வதில்தான் வாழ்க்கையின் அடிப்படையே அடங்கியிருக்கிறது. மனித வாழ்க்கையில் இளமை, செல்வம் மற்றும் யாக்கை ஆகியன நிலைக்காதவை. நீர்க்குமிழி தோன்றிய சில நொடிகளிலேயே அழிந்துவிடும். அதைப் போன்றே மனித வாழ்க்கையின் இளமையும் நிலைக்காது சிறிது நாளில் அழிந்துவிடும். கடல் நீரில் ஆர்ப்பரித்து வரும் பெரிய அலைகள் கரைக்கு வந்து வந்து போகும். அதைப் போல மனிதர் வாழ்வில் செல்வமும் நிலைக்காமல் வந்து வந்து போகும். அவ்வாறே நீரில் எழுதும் எழுத்துகள் நிலைத்து நிற்காமல் எழுதும்போதே அழிந்துவிடும். அதைப் போலவே மனித உடலும் நிலைக்காமல் அழிந்துவிடும். மனித வாழ்க்கை நிலையற்றது என்றாலும் நாம் வாழும் காலம் வரை மனிதர் நேர்மையான வழியிலேயே வாழ வேண்டும். நீதி, நேர்மை, உண்மை, நியாயம், பகிர்தல், அன்பு, தியாகம் போன்ற மனிதனது ஆதார குணங்களை நாம் பிறருக்காக அன்றி, நம் மனசாட்சிக்குப் பயந்து நமக்காகக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் யாருக்கேனும் ஏதேனும் நற்செயல்கள் செய்வதற்கு விரும்பினால் அதனை நாளை நாளை என்று தள்ளிப்போடாமல் அந்தக் கணமே செய்து முடிக்க வேண்டும்" என்று கூறிப் புன்னகைத்தார் துறவி. அப்போது, "ஐயா, உங்களது ஒருநாள் விளக்கமே இத்தனை அற்புதமாக இருக்கிறதே! நீங்கள் தினமும் எங்களுக்கு விளக்கம் அளித்தால் அது எங்கள் அனைவருக்கும் பயனளிக்கும் தானே" என்று எதிர்பார்ப்புடன் கேட்டான் அந்தச் சீடன். அதற்கு குரு, "சீடர்களே! நமது அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக் கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் ஆகும். ஆனால் ஞானம் என்பது நமது ஆன்மிக வாழ்விற்கு  உதவாத எதையாவது ஒன்றை தினமும் கைவிடுவது ஆகும்" என்று புன்முறுவலுடன் கூறிய துறவி தனது மெளன விரதத்தினைத் தொடர ஆரம்பித்தார்!

ஆகவே, வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போன்று நிலையற்றது என்பதை உணர்ந்து, இவ்வுலகில் கடவுள் நமக்கு அருளியுள்ள இந்த வாழ்க்கையை அவர் விரும்பும் வகையில் அர்த்தமுடனும் அழகுடனும் பொறுப்புடனும் வாழ்வோம். இதற்கான அருளை நமக்கு வழங்கிட இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2024, 12:14