அன்றாட செபத்திலிருந்து பிறப்பெடுக்கும் மேய்ப்புப்பணிக்கான ஊற்று
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிறிஸ்துவின் அன்பு திருஅவைக்காக, திருஅவையின் நம்பிக்கை இயேசுவிற்காக என்றும், மேய்ப்புப்பணியின் ஊற்று என்பது நமது அன்றாட செபம், தியானம், திருநற்கருணை ஆராதனை, இறைவார்த்தையை எடுத்துரைத்தல் போன்றவற்றிலிருந்து வருகின்றது என்றும் கூறியுள்ளார் ஆயர் Giuseppe Shen Bin.
அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மறைமாவட்டப் பொதுநிலையினர் என 230க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஷாங்காய் மறைமாவட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் இவ்வாறு கூறியுள்ளார் ஷாங்காய் மறைமாவட்ட ஆயர் Giuseppe Shen Bin.
அருள்பணியாளர்களின் மேய்ப்புப்பணி வளர்ச்சிக்கான சில செயல்பாடுகளையும் திட்டங்களையும் எடுத்துரைத்த ஆயர் Shen Bin அவர்கள், தலத்திருஅவைகளில் மேய்ப்புப் பணிகளை வலுப்படுத்தவும், பெருநகரங்கள் மற்றும் மறைமாவட்டம் முழுவதும் நற்செய்தி அறிவிப்பை புதுப்பிக்கவும் வலியுறுத்தினார்.
15 குறிப்பிட்ட தலைப்புகளைப் பற்றி திறந்த மனதுடன் விவாதிப்பதற்காக 23 பணிக்குழுக்களாகப் பங்கேற்பாளர்கள் மதிய அமர்வின்போது பிரிக்கப்பட்டார்கள்.
கத்தோலிக்க சமூகத்தின் சொத்து மேலாண்மை அமைப்பின் சீனமயமாக்கல், பங்குத்தளங்களில் மேய்ப்புப்பணி வாழ்க்கை, கிறிஸ்தவக் குடும்பங்களில் நிலவும் தற்போதைய பிரச்சனைகள், குருத்துவம் மற்றும் துறவற வாழ்க்கைக்கான அழைப்பு, என்னும் நான்கு முக்கியமான தலைப்புக்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடல்கள் வழியாகக் கிடைத்த ஆலோசனைகள், ஆக்கப்பூர்வமான நுண்ணறிவுகள் அனைத்தும் ஷாங்காய் தலத்திருஅவையின் வளர்ச்சிக்காகவும் எதிர்காலப்பயணத்தில் தலத்திருஅவை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய செயல்களாகவும் இருந்தன. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்