பொதுக் காலம் 33-ஆம் ஞாயிறு : நிலைவாழ்வு தரும் மானிட மகன்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. தானி 12:1-3 II. எபி 10:11-14,18 III. மாற் 13:24-32)
ஒரு நாள் விவசாயி ஒருவர் சொர்க்கம், நரகம் இரண்டையும் பார்க்க ஆசைப்பட்டார். அன்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது, கடவுள் அவருக்குத் தோன்றினார். அவர் கையை பற்றியபடி, “சொர்க்கம், நரகத்தை பார்க்க, ஆசைப்பட்டாய் அல்லவா... வா போய் பார்ப்போம்..” என்று அழைத்தார். “ஆஹா... எவ்வளவு நாள் ஆசை...” என்று கூறி, முதலில் நரகத்தை பார்க்கச் சென்றார். அங்கு உணவு நேரம் தொடங்கி இருந்தது; பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு, மற்றும் சுவைக்க பதார்த்தங்கள் வைத்திருந்தனர் நரகவாசிகள். தட்டில் உணவு பரிமாறப்பட்டது. நாவில் எச்சி ஊற, தட்டில் இருந்த உணவு வகைகளை எடுத்தனர் நரகவாசிகள். 'ஆஹா... என்ன வாசனை... இப்போதே சுவைக்கலாம்...' கையை மடக்க முயன்றனர். எவ்வளவு முயற்சித்தும் உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. வலது கை ஒத்துழைக்கவில்லை. 'ச்சே... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே...' ஆத்திரத்தில், கையில் வைத்திருந்த உணவை கீழே போட்டனர் நரகவாசிகள். தாங்க முடியாத பசி, உணவை வாய்க்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை பற்றி விவாதித்தனர். அப்போது நரகவாசிகளின் நிலை பார்த்து வருந்தினார் விவசாயி. புன்னகைத்த கடவுள், “வா சொர்க்கத்திற்குப் போவோம்...” என அழைத்தார்.
அங்கும் அண்டாக்கள் நிறைய சுவைமிக்க உணவை பறிமாறினர். சொர்க்கவாசிகள், கையை நீட்டி உணவை எடுத்தனர். ஆனால், கையை மடக்கி வாய் அருகே எடுத்துச் சென்றும் உண்ண முடியவில்லை. அதில் ஒருவர் நீட்டிய கைகளால் இனிப்பு பதார்த்தம் ஒன்றை எடுத்து எதிரே இருந்த சொர்க்க வாசிக்கு ஊட்டினார். 'கையை மடக்கத்தானே முடியாது; நீட்டி, எதிரே இருப்பவரின் வாயில் ஊட்ட முடியும் அல்லவா...' எனக் கூறிகொண்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊட்டிக்கொண்டனர். சொர்க்கவாசிகள் வயிறு நிரம்பியது. அதை பார்த்த விவசாயி, “கடவுளே, நரகத்தில் உணவை உண்ண முடியாமல் தவித்தவர்களைப் பார்த்தபோது, எனது மனதில் வருத்தம் ஏற்பட்டது. சொர்க்கத்தில், அவர்கள் செய்த காரியம் என்னை இன்புறச் செய்தது. நாம் ஆற்றும் காரியம் நல்லதா... கெட்டதா... என்பதை பொறுத்தே, வாழ்க்கை சிறப்பாகிறது என்பதை நான் அறிந்தேன்” என்றார். அதிகாலை கண்ட கனவுக்குப் பின் விழித்தவர், 'இனி ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதுதான் சொர்க்கம்' என நினைத்து செயல்பட்டார். இயன்ற உதவியை செய்து நல்வாழ்வு வாழ்ந்தார் அந்த விவசாயி.
பொதுக் காலத்தின் 33-ஆம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். பொதுக் காலத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம். வரும் வாரம் கிறிஸ்துவை அனைத்துலகிற்கும் அரசர் என்று கொண்டாடிவிட்டு, அதற்கடுத்த வாரம் திருவருகைக் காலம் என்ற புதியதொரு திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்கவிருக்கிறோம். இறுதிப்பகுதி என்று சொன்னாலே, இறுதிக்காலம், இறுதித்தீர்ப்பு, எச்சரிக்கை, விழிப்புணர்வு, ஆகிய சொற்றொடர்களும் நம் நினைவுக்கு வருகின்றன. இன்றைய வாசகங்கள் இறுதித் தீர்ப்புக் குறித்துதான் பேசுகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் 'இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்' என்ற வார்த்தைகள் இறுதிநாள் உயிர்த்தெழுதலையும், இறுதித்தீர்ப்புக்குக் காத்திருத்தலையும் குறிக்கின்றது. மேலும் 'அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்' என்ற இறைவார்த்தைகள் இறுதித் தீர்ப்பில் அவரவர் செய்த செயல்களுக்கேற்ற பலனை பெறுதலை எடுத்துக்காட்டுகின்றது. குறிபபாக, ‘முடிவில்லா வாழ்வு பெறும் நீதிமான்கள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதனை மத்தேயு நற்செய்தியில் 'மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு' என்ற பகுதியில் பார்க்கின்றோம். இங்கே நல்லவர்கள் செம்மறி ஆடுகளாகப் போற்றப்படுகின்றனர். அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறும் இயேசு, அதற்கான அவர்களின் தகுதிகளாக முன்வைப்பது, "நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" (காண்க மத் 25:31-46) என்பவையே. அதேவேளையில் தீயவர்கள் அதாவது, இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றாதவர்கள் (வெள்ளாடுகள்), மேற்கண்ட நற்காரியங்களை செய்யாதவர்களாகக் கூறும் இயேசு, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்" என்று உரைப்பதைப் பார்க்கின்றோம். இறுதியில் இவர்களுக்கு முடிவில்லாத தண்டனையும் அதாவது எரிநெருப்பும் நேர்மையாளர்களுக்கு நிலைவாழ்வும் பரிசாகக் கிடைக்கும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார் இயேசு.
இன்று நாம் தியானிக்கும் நற்செய்தியில், “மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.,பின்பு, அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இறுதி காலத்தில் நிகழவிருக்கும் இறுதித்தீர்ப்புக் குறித்து பேசுகின்றன. குறிப்பாக இங்கே 'மானிட மகன்' என்ற வார்த்தையை இயேசு மீண்டும் பயன்படுத்துகிறார். இதுவரை தன் துன்பங்களுடன் மட்டுமே ஒன்றிணைந்து வெளிப்படுத்திய இந்த 'மானிட மகன்' என்ற வார்த்தையை தற்போது தனது வெற்றியுடன் இணைத்துக் கூறுகின்றார். எருசலேமில் இயேசு அனுபவித்த பாடுகளை 'மானிட மகன்' என்கிற நிலையில்தான் அவர் ஏற்றதாகத் தெரிவித்திருந்தார் மாற்கு நற்செய்தியாளர். ஆனால் இப்போது அதே மானிட மகனின் வல்லமை, மாட்சி, மேகங்களில் பயணம் செய்யும் பெருமை, வானதூதரைப் பணிக்கும் ஓர் அதிகாரம் ஆகிய சிறப்புகளை இங்கே தருகிறார். துன்பங்களும், வேதனைகளும், இன்னல்களும், அச்சுறுத்தல்களும் அடங்கிவிட்ட நிலையில் தம் மக்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அவர்கள் அனைவருக்கும் வெற்றியைப் பரிசாகத் தருவதுதான் மானிட மகனின் செயலாக இருக்கும் என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறார் நற்செய்தியாளர். துன்புறும் மக்களுடன் தன்னையே இணைத்துக்கொண்டு மக்கள் படவேண்டிய துன்பங்களையும் வெளிப்படுத்தி இறுதியில் தம் வெற்றி முகத்தைக் காட்டும் இயேசுவுக்கு முன்னோடியாக விளங்குவது மானிட மகன் என்ற வார்த்தை என்பதை இறைவாக்கினர் தானியேலும் எடுத்துரைக்கின்றார். அவர் இரவில் கண்ட காட்சியில் வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது (காண்க தானி 7:13-14).
பழைய ஏற்பாட்டில் மெசியாவைக் குறித்த நம்பிக்கை பரவலாகக் காணப்பட்டது. தானியேல் கண்ட காட்சியில் மெசியா கொடுக்கவிருக்கும் மீட்பு மானிட மகனோடு தொடர்புபடுத்தப்படுகிறது. ஆகவே மானிட மகன் என்ற இத்தகையதொரு உருவகத்துடன் தனது பணிவாழ்வு முழுவதும் இயேசு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்பதையும் நாம் காண முடிகிறது. துன்பத்தில் மட்டுமன்று வெற்றியிலும் மானிட மகன் நிலைத்து நின்று தன்னை அன்புகூரும், நம்பும், பின்பற்றும் அனைவருக்கும் தனது அரசில் இடமளிப்பார் என்பதும் திண்ணமாய்த் தெரிகிறது. தலைமைக் குரு, “போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம்
கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள்” (காண்க. மாற் 14:61-62). அவ்வாறே மக்களுக்கு அளிக்கும் இறுதித் தீர்ப்பிலும், "வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்" (காண்க மத் 25:31) என்று தன் நிலைகுறித்து உறுதிப்படக் கூறுகின்றார் இயேசு. ஆக, நமக்காக துன்பத்தை ஏற்றுக்கொண்ட இந்த மானிட மகனே வாழ்வின் இறுதியிலும் நம் செயல்களுக்கேற்ப நமக்குத் தீர்ப்பு வழங்குவார் என்பதையும் நம் நினைவில் நிறுத்துவோம்.
இதனைத்தான், இரண்டாம் வாசகத்தில், "ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே, பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை" என்று கூறுகின்றார் புனித பவுலடியார். அதாவது, மக்கள் அனைவருக்காகவும் ஒரே ஒருமுறை தன்னையே பலியாக்கும் இறைமகன் தந்தையின் வலப்புறம் முடிவற்ற காலத்திற்கும் அமர்ந்திருப்பார் என்பதையும், மக்களுக்குத் தீர்ப்பு வழங்கி அவர்களில் தகுதியானவர்களைத் தனது என்றுமுள்ள அரசுக்குக் கூட்டிச் செல்வார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.
இரண்டாவது காரியமாக, “அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால், என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா” என்று உரைக்கின்றார். இங்கே அத்திமரம் காட்டும் கோடைகால நெருக்கம் எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு கிறிஸ்தவ மக்களின் துன்பக் காலம் மானிட மகன் வருகைக்கு மிகவும் நெருக்கம் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அத்திமரத்தை ஓர் உவமையாக எடுத்துக்காட்டுகிறார் இயேசு. இதனை மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்களான மத்தேயுவும் லூக்காவும் எடுத்துக்காட்டுகின்றனர் (காண்க. மத் 24:32-35; லூக் 21:29-33). எனவே, இலைகள் உதிர்ந்த அத்திமரம் மீண்டும் துளிர்த்து வளர்வதைப்போல கிறிஸ்தவ மக்களின் துன்பங்களும் ஒரு நாள் முடிவடைந்து அவர்கள் புதியதொரு வாழ்வைப் பெற்றுக்கொள்வர் என்பதன் அடையாளமாக இவ்வாறு இயேசு கூறுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வோம்.
மேலும் இங்கே 'கற்றுக்கொள்ளுங்கள்' என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்துவதன் வழியாக இறுதிக்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் நமக்குப் படிப்பிக்கின்றார். முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மாட்சிமிகு வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளை, எதிர்பார்ப்புக் காலம் நீடித்துக்கொண்டே இருந்த காரணத்தால் அவர்கள் தங்கள் கிறிஸ்தவக் கடமைகளில் மிகவும் தளர்ந்துபோய் இருந்தார்கள். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்தகைய எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அத்துடன் பொறுமை, நம்பிக்கை, கடமை தவறாமை, எதிர்பார்ப்பு மனநிலை ஆகிய பண்புகளுடன் கூடியதாகத்தான் இந்த எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் அமைந்துள்ளன என்பதும் உணர்ந்துகொள்ளப்பட வேண்டும். மேலும் நாம் விழிப்பாய் இருக்கவும் தயார் நிலையில் இருக்கவும் இயேசு நம்மை அறிவுறுத்துகிறார் என்பதும் தெளிவுபடத் தெரிகிறது. இறுதியாக, "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால், என் வார்த்தைகள் ஒழியவேமாட்டர்" என்ற இயேசுவின் வார்த்தைகள் அவரின் நிலைவாழ்வுக்கான ஆதாரமாக அமைந்துள்ளன என்பதும் திண்ணம்.
ஆகவே, மானிட மகன் நம்மை சந்திக்க வரும் நாளில் அவருக்கு விருப்பமானவற்றை செய்து அவருக்காகக் காத்திருக்கும் மக்களாக வாழ்வோம். அப்போதுதான் அவருக்கான இறையாட்சியில் நாம் அவருடன் பங்குபெற முடியும். இத்தகைய வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்