தேடுதல்

மறைநூல் அறிஞருடன் உரையாடும் இயேசு மறைநூல் அறிஞருடன் உரையாடும் இயேசு  

பொதுக் காலம் 31-ஆம் ஞாயிறு : கடைப்பிடிப்போம் செயல்படுத்துவோம்!

மறைநூல் அறிஞரைப் போல நாமும் நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம். கடவுளை அன்பு செய்வது மட்டுமே நமது தலையாயக் கடமையாகட்டும்.
பொதுக் காலம் 31-ஆம் ஞாயிறு : கடைபிடிப்போம் செயல்படுத்துவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்     I. இச 6:2-6      II. எபி 7:23-28      III.  மாற் 12:28b-34)

அதுவொரு புத்த மடம். அங்கே சீடரகள் தன் குருவுடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சீடர் ஒருவர், “குருவே கடவுள் நம்பிக்கை, கட்டளைகள் இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா” என்று கேட்டார். அப்போது அந்த ஆசிரமத்தின் பசு ஒன்றரை மேய்ச்சல் முடித்து தொழுவத்தில் கட்டிகொண்டிருந்தார் அச்சீடர். உடனே குரு, “இப்போது பசு உன்னுடன் வருகிறதா அல்லது நீ பசுவுடன் செல்கிறாயா” என்று கேட்டார். குழம்பிய சீடர், “சாமி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” என்றார். “பல ஆண்டுகளாக நீதானே இந்தப் பசுவைப் பராமரித்து வருகிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? பின்னர் ஏன் அதைக் கயிற்றுக்கட்டி இழுத்துச் செல்கிறாய்?” என்று கேட்டார் குரு. “அய்யய்யோ கயிற்றை விட்டால் பசு ஓடிவிடும் சாமி” என்றார் அச்சீடர். “அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டியில் இல்லை என்றுதானே அர்த்தம்?” எனக் கேட்டார் குரு. “இந்தப் பசு எனக்கு நன்கு பழக்கம்தான். பன்னிரண்டு ஆண்டுகளாக இதனை நான் பராமரித்து வருகிறேன். இருந்தாலும் அது எங்கும் ஓடிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதனை நான் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறேன் குருவே” என்று பதில்மொழி தந்தார் சீடர். அப்போது குரு, “உன்னைப்போலத்தான் இறைவனும். நாம் அவரது கட்டுப்பாட்டிலிருந்து விலகிப்போய் தவறுகள் இழைத்து சீரழிந்துபோய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இறைநம்பிக்கைகள், கட்டுப்பாடுகள் என்னும் கட்டளைகள் வழியாக நம்மைக் கட்டுபடுத்தி வைத்திருக்கிறார்” என்று மொழிந்தார். உண்மையை உணர்ந்துகொண்ட அச்சீடர் அமைதியானார்.

அன்புக்குரியவர்களே, பொதுக்காலத்தின் முப்பத்தொன்றாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிகின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளை அன்பு செய்வதும், நமக்கு அடுதிருப்போரை அன்பு செய்வதும் கிறிஸ்தவ வாழ்வில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், "நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே" என்று தொடங்கும் இன்றைய முதல் வாசகம், அவற்றைக் கடைப்பிடிக்கவும் செயல்படுத்தவும் அழைப்பு விடுகிறது. அதாவது, "நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்" என்றும், இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்" என்றும் உரைக்கிறார் மோசே. அதுமட்டுமன்றி, "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது" என்று எடுத்துக்காட்டி அவற்றை எவ்வாறு உள்ளத்தில் பதியவைப்பது என்பதையும் எடுத்துக் கூறுகின்றார் மோசே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார் என்றுதான் பதிவு செய்கின்றார் மாற்கு நற்செய்தியாளர். இயேசுவை சோதிக்க விரும்பி அவரை சிக்கலில் மாட்டிவிட எண்ணி, 'சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?' என்று பரிசேயர் எழுப்பிய கேள்விக்கும், 'உயிர்த்தெழுதல் உண்டா இல்லையா' என்று சதுசேயர் எழுப்பிய கேள்விக்கும் சிறப்பாக இயேசு பதிலளித்ததைக் கேள்வியுற்ற மறைநூல் அறிஞர், “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று  கேள்வி எழுப்புகின்றார். முதலாவதாக, அவருக்கு இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கூறிய,  “‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’ என்பதை முதன்மையான கட்டளையாக எடுத்துக் கூறி அவற்றை கடைபிடிக்க அழைப்புவிடுகின்றார்.

இரண்டாவதாக, லேவியர் நூலிலிருந்து, 'பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!' (காண்க. லேவி 19:18) என்ற இறைத்தந்தை மோசே வழியாக இஸ்ரேயல் மக்களுக்கு வழங்கிய கட்டளையை எடுத்துக்காட்டி அதனை வாழ்ந்துகாட்ட அம்மறைநூல் அறிஞருக்கு அழைப்புவிடுக்கின்றார் இயேசு. கடைப்பிடிதலும் வாழ்ந்து காட்டலும் கிறிஸ்தவ வாழ்வின் மையம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதனைத்தான், “என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச் சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும். ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன்” (யாக 2:14-28) என்கிறார் புனித யாகப்பர். பழைய ஏற்பாட்டைப் புரட்டிப் பார்க்கும்போது இஸ்ரயேல் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள் 613 உண்டு என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. யூதர்களைப் பொறுத்தவரை இவை எல்லாமே மிக முக்கியமானவை மற்றும் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்கள் கட்டளைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க நினைத்தார்களே தவிர அவற்றை வாழ்ந்துகாட்ட அதாவது, அவற்றை செயல்படுத்த முன்வரவில்லை. ஆனால் அதேவேளையில், இந்தச் சட்டங்களைக் கடைப்பிடிக்க அழைப்புவிடுக்கும் இயேசுவுடன் பரிசேயர்கள் அதிகம் மோதலில் ஈடுபடுவதைக் காண்கின்றோம். ஆக, சட்டத்தைக் கடைப்பிடிக்க காட்டும் அதே அளவு ஆர்வத்தை அதனைச் செயல்படுத்துவதிலும் காட்ட வேண்டும். இல்லையேல் நல்ல நிலத்தில் விதைக்கப்படாமல் பாறைநிலத்தில் விதைக்கப்பட்ட  நிலத்திற்கு ஒப்பாகிவிடும் நமது கிறிஸ்தவ வாழ்வு என்பதை நமது மனதில் நிறுத்துவோம். அதுமட்டுமன்றி, இம்மாதிரியான செயல்கள் நம்மை வெளிவேடம், சுயநலம், மனிதத்தன்மையற்ற நிலை, கொலை, கொள்ளை, பழிபாவம் போன்ற செயல்களை நம்மில் உருவாக்கிவிடும் என்பதையும் நமது கவனத்தில் கொள்வோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் லேவியர் குலத்தைச் சேர்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர் என்று கூறுகின்றார் புனித பவுலடியார். அப்படியென்றால், ஆண்டவரின் அன்புப் பணியை ஏற்று அவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டிய லேவியர் இனத்தைச் சேர்ந்த குருக்கள் துர்மாதிரியான வாழ்வை மேற்கொண்டு அவர்தம் மக்களுக்கும் ஆண்டவராம் கடவுளுக்கும் எதிராகப் பாவம் செய்ததாலேயே அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர் என்பதையும் பார்க்கின்றோம். இங்கே துர்மாதிரிகை என்பது வெளிவேடம், சுயநலம் மற்றும் கடவுளுக்கு எதிரான தான்தோன்றித்தனமான வாழ்க்கையைக் குறிக்கிறது. ஆனால் அதேவேளையில், இயேசு என்னும் தலைமைக்குரு என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்" என்று உரைக்கின்றார்.

முதன்மையான கட்டளைக் குறித்து இயேசு பேசும் இந்தப் பகுதி மற்ற இரண்டு ஒத்தமை நற்செய்திகளிலும் வருகின்றது (காண்க. மத் 22:34-40; லூக் 10:25-28). ஆனாலும் இதில் சிறு வேறுபாடு இருப்பதைப் பார்க்கின்றோம். நாம் காணும் மாற்கு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் இயேசு கூறிய இந்த இரண்டு கட்டளைகளையும் நல்மனதுடன் ஏற்றுகொண்ட அம்மமறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும். எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறுகிறார்.  அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்று கூறுவதாக நிறைவு செய்கின்றார் மாற்கு. மத்தேயு நற்செய்தியில், அறிவுத்தெளிவுடன் இவ்விரு கட்டளைகளையும் ஏற்றுகொள்ளும் மறைநூல் அறிஞரின் மனநிலைக் குறித்து சுட்டிகாட்டபடவில்லை. ஆனால் லூக்கா நற்செய்தியில், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பும் திருச்சட்ட அறிஞருக்கு 'நல்ல சமாரியர்' உவமையை எடுத்துக்காட்டி விளக்குகிறார் இயேசு. அதாவது, கட்டளைகளைக் கடைபிடிப்பது மட்டுமன்றி அவற்றை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை அவருக்கு எடுத்துக்காட்டும் இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று அறிவுறுத்தியும் அனுப்புவதாக லூக்கா நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

ஒருநாள் நான்கு துறவிகள் ஏழு நாட்களுக்கு யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தியானம் செய்வது என்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். முதல் நாள். இரவு காற்றில் மெழுகுவத்திச் சுடர் படபடத்ததைக் கண்டு, “ஐயோ, மெழுகுவத்தி அணையப்போகிறது” என்றார் ஒருவர். “அட, நாம் பேசக் கூடாது என்பதை மறந்துவிட்டாயா?” என்றார் இரண்டாமவர். “எதற்காகத்தான் நீங்கள் பேசுகிறீர்களோ தெரியவில்லை?” என்றார் மூன்றாமவர். “ஹா... ஹா! நான்தான் எதுவும் சொல்லவில்லையே” என்றார் நான்காவது துறவி. ஆன்மிகப் படிப்பினைகளை அல்லது கட்டளைகளைப் பிறருக்கு வழங்குவதற்கு முன்பாக நாம் அதைக் கடைப்பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அதை கடைப்பிடிப்பதற்கு உண்டான வழிமுறைகளையும் நாம் முழுமையாகப் பயிற்சி செய்திருக்க வேண்டும். மனம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு இணைந்திருந்தால், குழப்பத்திற்கோ, போலித் தனத்திற்கோ அதாவது வெளிவேடத்திற்கோ அங்கே இடம் இருக்காது. இந்தப் பயிற்சிகளை சிறு வயதிலிருந்தே நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்வது கடினம். நாம் செய்யாததை செய்தது போலக் காட்டினால், அது நமது மேல் உள்ள நம்பிக்கை மற்றும் மரியாதையை வெகு காலத்திற்கு மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்யாது என்பதைப் புரிந்துகொள்வோம். அதுமட்டுமன்றி, இவ்வாறு ஊருக்கு மட்டுமே போதனை செய்பவர்களுக்கு மன நிம்மதியும் இருக்காது; ஏனெனில், அவர்களும் கடவுளின் சாயலாகத் திகழ்வதால், அந்த அம்சங்கள் அவர்களை எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஒருங்கிணைப்பு இல்லாததை நினைவு படுத்தும். ஆகவே, சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மூப்பர்கள், திருச்சட்ட அறிஞர்கள், தலைமைக் குருக்கள் போலன்றி, அறிவுத்தெளிவு பெற்று கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை வாழ்ந்து காட்டி இறையாட்சியை உரிமையாக்கிக்கொள்ள புறப்பட்ட இந்த மறைநூல் அறிஞரைப் போல நாமும் நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம். கடவுளை அன்பு செய்வது மட்டுமே நமது தலையாயக் கடமையாகட்டும். அதற்கான அருள்வரங்களுகாக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2024, 13:43