தேடுதல்

அழகிய இயற்கை அழகிய இயற்கை  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் - இயற்கையை போரிலிருந்து காத்தல்

கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு இயற்கை வளங்களோடு தொடர்புடையது என்பது உண்மை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மனிதன் அமைதியில் வாழவிரும்புவது அவனின் அடிப்படை உரிமை. குறைந்தபட்சம் நம் வருங்காலத் தலைமுறையாவது அமைதியில் வாழவேண்டும் என ஆவல் கொள்வது பேராசையல்ல, இயல்புதான். ஆனால், இன்றைய மோதல்களால் நாமும் அமைதியில் இல்லை. அந்த மோதல்களின் சுற்றுச்சூழல் அழிவால் வருங்காலத் தலைமுறையும் அமைதியில் வாழும் நிலை இல்லை. ஆயுதங்களின் நவீனத்தன்மை என்பது சுற்றுச்சூழலையும் மனிதர்களையும் அழிவுக்குள்ளாக்கி வருகின்றது.

புவியில் மனித இனம் நிலைத்திருப்பதற்கும், வளமானதொரு வாழ்வை வாழவும் முதன்மை ஆதாரமாக இருப்பது இயற்கையும், அது அள்ளித்தரும் வளங்களும்தான்.

இயற்கையின் அழிவு என்பது மனிதகுலத்தின் அழிவு தான், ஏனெனில் இயற்கை வளங்களை எந்த தொழில்நுட்பத்தினைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது என்பது நாம் அறியாததல்ல. இயற்கை அழிவிற்கு இன்று எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமாதல், தவறான நிர்வாகம், உணவை வீணாக்குதல், பல்லுயிர்களின் பன்மைத்தன்மை இழப்பு, பிளாஸ்டிக் கழிவுகள், காடுகள் அழிதல், காற்று மாசுக்கேடு, பனி உருகுதலும் கடல் நீர்மட்ட உயர்வும், கடல் அமிலமாதல், விவசாய இழப்புகள், உணவு நீர் பாதுகாப்பின்மை, அளவுக்கதிகமாக மீன்களை பிடித்தல், கனிமங்களுக்காக பூமியை சுரண்டல், மண்வள குறைபாட்டிற்கு காரணமாதல் என பால காரணங்கள் இருந்தாலும் இன்று நாம் மனித குலத்தால் இயற்கைக்கு ஏற்படும் அழிவுகள் குறித்து நோக்குவோம் அதிலும் குறிப்பாக, போரால் இழக்கப்படும் இயற்கை வளங்கள் குறித்து நோக்குவோம்.

போர் என்றவுடன் அதற்கு பலியாகின்றவர்களாக நாம் மனித உயிர்களையும், அழிவுக்குள்ளாகும் நகர்களையும் கட்டிடங்களையும்தான் எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு என்பது, போரினால் பாதிக்கப்பட்ட, அதேவேளை மறைக்கப்பட்ட ஒரு பலிகடாவாகத்தான் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஆயுத மோதல்களால் எத்தனை இழப்புக்களை நாம் சந்தித்து விட்டோம். நாம் எனும்போது உலகைச் சொல்கிறோம். நீர் மாசடைந்துள்ளது, பயிர்கள் தீக்கிரையாகியுள்ளன, காடுகள் அழிவுக்குள்ளாகியுள்ளன, மண் விஷமாகியுள்ளது, எண்ணற்ற விலங்கினங்கள் கொல்லப்பட்டுள்ளன. இதனால் போர் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் வாழ்வு அச்சுறுத்தலிலேயே இருந்துவருகிறது. வருங்காலத் தலைமுறையினருக்கு ஓர் அழிந்துபோன உலகையா விட்டுச் செல்லப் போகிறோம்? இது தவிர, வரலாற்றை நாம் ஆழமாக உற்று நோக்கினோமென்றால், கடந்த 60 ஆண்டுகளில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு இயற்கை வளங்களோடு தொடர்புடையது என்பது உண்மை. இது மேலும் இரு மடங்காகுமோ என்ற அச்சத்தையே வல்லுனர்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

மண், நன்னீர், கடல் என இயற்கை அமைப்புகள் தொடங்கி புழு, பூச்சி இனங்கள், ஊர்வன, மீன்கள், பறவைகள், பாலூட்டிகள் என பல்வகை உயிர்களில் இருந்து பழங்குடிகள் வரை அழிவை சந்திக்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கான முதன்மை காரணம், மனிதர்களின் முறையாக திட்டமிடப் படாத வளர்ச்சி தொழில் நுட்பங்களும், மீநுகர்வு போக்கும், இயற்கை வளங்களை நியாயமாக பகிர்ந்து கொள்ளாத சுரண்டல் மனப்பான்மையும் தான் என்ற வெளிப்படைக் காரணங்கள் இருக்கின்றபோதிலும், மோதல் என்பது இன்றைய முக்கியக்காரணமாக இருக்கின்றது. போரால் இன்று இயற்கை அழிவுகளின் அளவு மிக அதிகமாகவே இருக்கின்றது. இதையெல்லாம் உற்றுக் கவனித்த ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 6ஆம் தேதியை, ஆயுத மோதல்களில் சுற்றுச்சூழல் அழிவதை தடுக்கும் உலக நாளாக சிறப்பிக்க வேண்டும் என 2001ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

சுற்றுச்சூழல் குறித்த அனைத்துலக அளவிலான சட்டம் இயற்றுவதற்கான முயற்சிகள் 1970ஆம் ஆண்டுகளிலேயே, அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. 1972ல் ஸ்டாக்ஹோம் அறிக்கை, அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அறிக்கை ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு ஐ.நா.வால் உருவாக்கப்பட்டது. ஏனெனில் உலக மக்கள் தொகையில் 20 விழுக்காட்டிற்கும் மேல் அதாவது ஏறக்குறைய 150 கோடி மக்கள் ஆயுத மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வாழ்ந்துவருவது இன்னும் வேதனை தரும் ஒரு விடயம்.  

மோதல்கள் இடம்பெற்றுவரும் ஆப்கானிஸ்தான், கொலம்பியா, ஈராக், மத்தியகிழக்குப் பகுதி, உக்ரைன் போன்றவற்றில் இயற்கை வளங்களின் அழிவுகளை நாம் என்று கணக்கிடப் போகிறோம்? ஆப்கானிஸ்தானில் மட்டும் 1990ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானின் சிலபகுதிகளில் காடுகளின் அழிவு 95 விழுக்காடு அதிகரித்துள்ளது. போர்கள் இடம்பெறும் சூழலைப் பயன்படுத்தி தேசவிரோதிகள், மரங்களை வெட்டி விற்பது, கனிம வளங்களைத் தோண்டுவது, அரிய வகை விலங்குகளைப் பிடித்து வியாபாரம் செய்வது என்பவை இடம்பெற்று இயற்கையின் அழிவுகள் ஆப்கானிஸ்தானில் தொடர்கின்றன.

மோதல்கள் இடம்பெற்ற மத்திய ஆப்பிரிக்க குடியரசை எடுத்துக் கொண்டோமானால், ஆயுத மோதல்களால் யானை இனமே அந்நாட்டில் அழிந்துவிட்டது. உக்ரைனை எடுத்துக்கொண்டோமானால் அதன் முக்கிய நதியின் நீர் பயன்படுத்த முடியாத அளவு மாசுகேடடைந்துள்ளது. காசாவிலும் ஏமனிலும் ஆயுத மோதல்களால் தண்ணீர் மாசுகேடடைந்து சுற்றுச்சூழலுக்கும் நலவாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, போர் விமானங்கள், பீரங்கிகள், வெடிகுண்டுகள், வேதியியல் ஆயுதங்கள் போன்றவைகளால் காற்று மாசுக்கேடு இடம்பெறுவதும் நாம் கண்ணால் காணும் ஒன்றாக இருக்கிறது. காற்று மாசுக்கேடு என்பது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கும் வழிவகைச் செய்கிறது. இதனால் மழை குறைவதும், வெப்பம் அதிகரிப்பதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

மோதல் நிறைந்த பகுதிகளில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறும்போது, அவர்களின் நிலம் கைவிடப்பட்டு, அநாதையாகிறது. கவனிப்பாரின்றி விடப்படும் நிலம் தரிசாகிறது, இதனால் உலகின் உணவு உற்பத்தி குறைவுபடுகின்றது. இப்படி மோதல்களால் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ இழப்புக்கள். 1991ஆம் ஆண்டு ஈராக் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் திட்டமிட்டே தீவைக்கப்பட்டபோது, எவ்வளவு பெரிய மாசுக்கேட்டை அப்பகுதி சந்தித்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஈராக்கின் மோசூல் நகருக்கு அருகே எண்ணெய்க் கிணறுகள் எரிப்பாலும், சல்பர் தொழிற்சாலை ஒன்று எரிக்கப்பட்டதாலும், அமில மேகங்கள் உருவாகி மக்களையும் நிலங்களையும் பாதித்தது. இது போன்ற பிரச்சனைகள் முன்னாள் யுக்கோஸ்லாவிய குடியரசிலும், சிரியாவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளிலும் ஆயுத மோதல்களால் விவசாய நிலங்களும், குடிநீரும் பெருமளவில் மாசுகேடடைந்து மக்கள் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. காசா-இஸ்ராயேல் மோதலில் சுற்றுச்சூழல் அழிவு என்று பார்த்தோமானால் முதலில் குடிநீர் மாசுகேட்டைத்தான் குறிப்பிட வேண்டும். குழந்தைகளுக்கான ஐ.நா.வின் நிதி நிறுவனமான யுனிசெப்பின் கூற்றுப்படி, காசாவின் குடி நீர் விநியோகத்தில் 96 விழுக்காடு குடிப்பதற்கே தகுதியற்றதாக மாறிவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் யார்? நாம்தான், இயற்கையல்ல. நாம் மனிதர்களோடு, நாடுகளோடு மோதுகிறோம் என கூறிக்கொண்டு, இயற்கையை, மனிதகுல வருங்காலத்தை அழித்துக்கொண்டிருக்கிறோம். காற்று மாசுபாடு, உலக வெப்பமயமாதல்

மீன்களின் எண்ணிக்கையில் குறைவு, பல்லுயிர் இழப்பு, நீர் பற்றாக்குறை, கனிம நீர்த்தேக்கங்களில் குறைப்பு, வனப்பகுதி இழப்பு ஆகியவைகளில் மனிதனின் பங்கு எவ்வளவு என்பது தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டும்.

இயற்கை வளங்கள் குறைவதால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்பட வேண்டும். நலப்பிரச்சனைகளும் பொருளாதர இழப்புகளும் கொஞ்சமல்ல. இயற்கை வளங்கள் குறைவது மனிதனின் மீதும், இந்த வளங்கள் இருக்கும் சுற்றுச்சூழலின் கூறுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் நாம் செயல்படவேண்டும்.

நிலைத்தன்மையை ஆதரிக்கும் வாழ்க்கை முறைகள் கைக்கொள்ளப்படவேண்டும். காடு வளர்ப்பு மற்றும் காடுகள் பாதுகாப்பு,  நீர்வளங்களின் சட்டப் பாதுகாப்பு, நிலையான விவசாய நடைமுறைகள், சுற்றுச்சூழல் கல்வி, நுகர்வு குறைப்பு, கழிவுப்பொருட்களின் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, செயற்கை உரமற்ற தோட்டக்கலை என நம் பாதைகள் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.

மண்வளம் குறைந்துவருவதால் இன்றைய உலகில் ஏறக்குறைய 40 விழுக்காட்டு மக்கள், அதாவது 320 கோடி மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர் என வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மண்வள குறைபாட்டிற்கு மனிதன் பயன்படுத்தும்  பொருட்களும் காரணம். நாம் தனிப்பட்ட முறையில் இவைகளை நிவர்த்திச்செய்ய என்னச்செய்யப்போகிறோம்? சிந்திப்போம்.

பசுமையாக நினைவுகளையும், நிலத்தையும் உலகையும் வைத்துக்கொவோம். சுற்றுச்சூழல் தோழமையுடைய பொருட்களையே வாங்குவோம். மறுசுழற்சியில் நம்பிக்கை கொள்வோம். வீணாக்குதலை தவிர்ப்போம். விழிப்புணர்வை வளர்ப்போம், மற்றும் நாம் சந்திக்கும் நபர்களில் ஊட்டுவோம். நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டையும், நீர்தேக்கங்களில் குப்பை கொட்டுவதையும் தவிர்ப்போம், தடுப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மால் முடிந்த அளவு மரங்களை நடுவோம். மரம் நட ஊக்குவிப்போம். போர்களை நம்மால் தடுத்த நிறுத்த முடியாமல் இருக்கலாம். ஆனால் போரின் விளைவுகளை நம்மால் குறைக்க முடியும். அந்த நம்பிக்கையுடன் செயல்படுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2024, 15:37