தேடுதல்

புத்தாண்டு 2025 புத்தாண்டு 2025  (2024 Getty Images)

நன்றியோடு கூடிய எதிர்நோக்கு - புத்தாண்டு செய்தி

இவ்வுலகில் மிகவும் துன்புற்று வாழும் மக்கள் மத்தியில் நம்மை இறைவன் எக்குறையும் இல்லாமல் காத்து வருகின்றார் என்று நாம் உணர்ந்தாலே போதும் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறவே நாம் அடிக்கடி ஆலயம் செல்வோம்
புத்தாண்டு செய்தி - ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து

மெரினா ராஜ் - வத்திக்கான்

நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! (திபா. 100:4). என்ற திருப்பாடலின் வரிகளுக்கு ஏற்ப 2024ஆம் ஆண்டு முழுவதும் இறைவன் நமக்குச்செய்த எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்வோம். ஆண்டில் இறுதி நாளில் இருக்கக்கூடிய நாம் இந்த ஆண்டில் நாம் தனிப்பட்ட அளவிலும், குடும்ப, சமூக அளவிலும் பெற்ற ஏராளமான ஆசீருக்காக இறைவனுக்கு சிறப்பாக நன்றி கூறுவோம்.

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் என வேண்டா – நின்று

தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால் என்ற மூதுரைப் பாடல் நமக்கு நன்றியுணர்வின் மேன்மையினை எடுத்துரைக்கின்றது. நற்பண்புகளை உடைய ஒருவருக்கு நாம் உதவி செய்யும் போது அவ்வுதவிக்கு பதில் உதவியை அவர் எப்போது நமக்கு செய்வார் என்று நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் நற்பண்புகளை உடையவர் பெற்ற நன்மைக்கு நன்றி கூற ஒருபோதும் மறக்க மாட்டார். எவ்வாறு தென்னை மரமானது தனது வேரினால் நீரினை உறிஞ்சி உச்சியில் இளநீர் வழியாக சுவையான நீரைத் தருகின்றதோ அது போல அவர் பெற்ற நன்மைக்கு நன்மையை மட்டுமே தருவார் என்று எடுத்துரைக்கின்றது மூதுரை. இத்தகைய நற்பணுகளை உடையவர்களாக இறைவனிடம் இருந்தும் நம் உடன் வாழ்பவர்களிடமிருந்தும் நாம் ஏராளமான நன்மைகளை இவ்வாண்டில் பெற்றிருப்போம். உலக அளவிலும் இந்திய அளவிலும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கொண்டிருந்தது இந்த 2024 ஆம் ஆண்டு. அரசியல், சமூக, திருஅவை, உலகம் என எல்லா நிலைகளிலும் பல்வேறு மாற்றங்களையும் சவால்களையும் கொண்டிருந்தது இவ்வாண்டு. புயல் மழை, வெள்ளம், சூறாவளி என இயற்கைச்சூழல்கள் ஒருபுறம் மக்களை வாட்டிவதைக்க மனிதர்களின் பேராசையும் வன்மமும் போரில்  வெளிப்பட்டு பல பகுதிகள் பாதிப்புக்குள்ளாக்கின. இன்னல்கள் பல இருந்தாலும் இன்று வரை நம்மை இவ்வுலகில் பாதுகாப்பாக பராமரித்து வந்த இறைக்கரத்திற்கு நன்றி கூறுவது மிகவும் முக்கியமானது. இவ்வுலகில் மிகவும் துன்புற்று வாழும் மக்கள் மத்தியில் நம்மை இறைவன் எக்குறையும் இல்லாமல் காத்து வருகின்றார் என்று நாம் உணர்ந்தாலே போதும் நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூறவே நாம் அடிக்கடி ஆலயம் செல்வோம் என்பார்கள் முன்னோர்கள். பெற்ற நன்மைகளை நாம் பல நேரங்களில் நினைத்துப் பார்க்கவே தவறி விடுகின்றோம். ஆண்டில் இறுதி நாளில் இருக்கும் நாம் இந்த ஆண்டு ழுழுவதும் இறைவன் செய்த நன்மைகளுக்காக நன்றி கூறுவோம். நன்றி என்பது வெறும் வார்த்தையல்ல வாழ்க்கை. ஏனெனில் அது உதட்டிலிருந்து அல்ல மாறாக உள்ளத்திலிருந்து வரவேண்டும். அருள்புரிந்து நம்மை அனுதினமும் காத்திடும் ஆண்டவனுக்கு நன்றி துதிப்பாடிடுவோம். இனிமையான சூழலைக் கொடுத்த இறைவனின் பதம்பணிந்திடுவோம். ஈரமுள்ள இரக்க குணம் கொண்டவர்களாக வாழ்வதற்கான அருளினை வேண்டுவோம். உள்ளத்தில் எண்ணுபவை எல்லாம் உருப்பெற்றிடவும், ஊருணியாய் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஊற்று பெருகிடவும் அருள்வேண்டுவோம்.  எண்ணங்கள் ஈடேற்றம் அடைந்திட, ஏற்றம் பெற்று எங்கும் செழித்திட, ஐம்புலன் அடக்கி, ஐம்பூதம் வணங்கி இயற்கையை காத்திட வேண்டுவோம்.

புதிய ஆண்டு திருஅவையில் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் வாழ கொடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு.  இந்த ஆண்டு முழுவதும் நாளைய  பொழுது நமக்கென விடிய நாயகன் அருளை நினைத்து மகிழ வேண்டும். இதயம் திறந்து இருவிழி மூடி இறையருள் கிடைத்திட இறைஞ்சி நிற்கவேண்டும். மானிட வாழ்வின் மகத்துவம் உணர்ந்து மனதில் புதுப்புது மாற்றம்  கொள்ள வேண்டும். தானென்ற அகந்தை தாழ்ப்பாள் உடைத்து தரணியில் வாழ்ந்திட சபதம் ஏற்றிட வேண்டும். நாடு செழித்திட வளங்கள் காத்திட காடு மலையென பயணம் செய்திட வேண்டும். வயது முதிர்ந்து வாழும் பெரியோர் காலில் விழுந்து பாவம் கழித்திட வேண்டும். தடம்மாறா வாழ்வில் திடமனத் தோடு செய்வதை எல்லாம் திருந்த செய்திட வேண்டும். உறவுகள் எல்லாம் ஒன்று  சேர்ந்திட உறுதி கொள்ள வேண்டும். உண்மை சொல்ல வேண்டும். நிறைந்த மனதில் நிம்மதி கொண்டு நாளையப் பொழுதை நாம் வரவேற்க வேண்டும்.  இத்தகைய  மனதோடு நாம் புத்தாண்டைக் கொண்டாட நமக்கு வாழ்த்துச்செய்தி கூற இருப்பவர் தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்ட ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து.

செங்கல்பட்டு மறைமாவட்டத்தை சார்ந்த ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் நவம்பர் 9 அன்று வேலூர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்  நியமிக்கப்பட்டார். டிசம்பர் 9 திங்கள்கிழமையன்று வேலூர் மறைமாவட்ட ஆயராகத் திருப்பொழிவுபெற்று தனது பணியினை ஏற்ற ஆயர் அம்புரோஸ் அவர்கள், திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குனர் மற்றும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்பு பணிக்குழு செயலராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப்பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்ற ஆயர் அவர்கள், சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகவும், செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற இடங்களில் பங்குத்தந்தையாகவும் சிறப்புடன் பணியாற்றியுள்ளார்.     

மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்க பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (JEEVAN JYOTHI INDIAN ADMINISTRATIVE SERVICE) பூவிருந்தவல்லி திருஇருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் என பல பணிகளை திறம்பட ஆற்றியவர். 7ஆண்டுகளாக செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய வேலூர் மறைமாவட்ட ஆயர் அவர்களை 2025ஆண்டிற்கான புத்தாண்டு செய்தியினை வழங்க எம் வத்திக்கான் நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

கடந்தவைகள் நம் வாழ்வில் நடந்தவைகள் என முடிந்து போன எதையும் நம்மால் மாற்ற முடியாது. இயற்கை பேரிடர்கள் தந்த இழப்புகளிலிருந்து இயற்கையைக் காக்கவேண்டும், பராமரிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்ற நாம் கற்றதை வாழ்வில் செயலாக்க முயல்வோம். மனஅழுத்தத்தோடு இருந்துவிட்டு இறுதிவரை மனம் விட்டு பேசாமல் மனதுக்குள்ளே காயத்தை சுமந்தவர்களாய் இல்லாமல் எல்லாரிடத்திலும் இயல்பாக இருக்க முயல்வோம். நாளை நம் கையில் என்ற துணிவோடு மனதில் இருக்கும் பாரத்தை இறைவனிடம் இறக்கிவைப்போம். இன்பம் வந்தால் தலைகனத்தோடு இருப்பதும் துன்பம் வந்தால் நொறுங்கிப் போவதும் அடுத்தவர் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவதும் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அழகல்ல என்பதை உணர முயல்வோம். வரும் ஆண்டு நம் வாழ்வில் வசந்தத்தை அள்ளித்தரும் என்ற நல்லெண்ணத்தில் நம் கவனத்தை செலுத்துவோம். நன்மையை எதிர்நோக்குவோம் நன்மையைப் பகிர்வோம், நன்மையானவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்வோம். அன்பாய் இருப்போம்.  அயலாரை அரவணைத்திடுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2025 நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 December 2024, 13:18