புலம்பெயர்ந்தோர் கடவுளைப் போன்றவர்கள் – பேராயர் ஜிரெல்லி
மெரினா ராஜ் - வத்திக்கான்
புலம்பெயர்ந்தோர் புகலிடத் திட்டமானது புலம்பெயர்ந்தோரின் மாண்பை அங்கீகரிப்பதற்கும் உயர்த்துவதற்குமான ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கை என்றும், "புலம்பெயர்ந்தோர் கடவுளைப் போன்றவர்கள், அவர்கள் மாண்புடன் வரவேற்கப்பட வேண்டும் என்றும் கூறினார் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.
டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூர் உயர் மறைமாவட்டம், மதிகெரே என்ற இடத்திற்கு அருகில் புலம்பெயர்ந்தோர்கான புகலிடம் ஒன்று தொடங்க இருப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் தொடக்கவிழாவின்போது இவ்வாறு கூறினார் இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் லெயோபோல்தோ ஜிரெல்லி.
இவ்விழாவின்போது பேராயர் பீட்டர் மச்சாடோ, துணை ஆயர் ஆரோக்கிய ராஜ் சதீஸ் குமார் ஆகியோர் முன்னிலையில், புலம்பெயர்ந்தோர் மையத்திற்கான அடிக்கல்லை ஆசீர்வதித்து வாழ்த்திய பேராயர் ஜிரெல்லி அவர்கள் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிறிஸ்து அரசர் பங்கு மக்களையும் வாழ்த்தினார்.
விருந்தினர்களைக் கடவுள் போல் பாவிக்கும் இந்திய கலாச்சாரமானது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வலியுறுத்தலான புலம்பெயர்ந்தோரின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை தொலைநோக்குப் பார்வையுடன் செய்து வருகின்றது என்றும், பெங்களுர் தலத்திருஅவையானது புலம்பெயர்ந்தோர்களை வரவேற்கும் பணியில் இந்திய கலாச்சார நெறிமுறைகளை உண்மையாகவே வாழ்ந்து வருகின்றது என்றும் கூறினார் பேராயர் ஜிரெல்லி.
பேராயர் ஜிரெல்லி அவர்களின் வருகைக்கு நன்றி தெரிவித்த பேராயர் பீட்டர் மச்சாடோ அவர்கள், பேராயரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் இந்நிகழ்வினை மறக்கமுடியாத தருணமாக மாற்றியது என்றும், புலம்பெயர்ந்தோர் மாண்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படுவதற்கும், அவர்களின் தேவைகளை ஆதரிப்பதற்கும் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் வலியுறுத்தினார்.
"புலம்பெயர்ந்தோர் தனிநபர்கள் அல்ல; நம்பிக்கையையும் வாய்ப்புகளையும் தேடும் அவர்களது பயணத்தில் திறந்த இதயத்துடனும் கரங்களுடனும் அவர்களை வரவேற்பது நமது கிறிஸ்தவக் கடமை என்றும், புலம்பெயர்ந்தோரின் மாண்பு மதிக்கப்படவும், ஆதரிக்கப்படவும் உருவாக இருக்கின்ற இப்புகலிடங்கள் நமது செயல்களின் வழியாக கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு காண்பிப்பதற்கான ஒரு படி என்றும் எடுத்துரைத்தார் பேராயர் பீட்டர் மச்சாடோ,
அன்பு, பணி மற்றும் நற்செய்தி விழுமியங்களை உள்ளடக்கிய பெங்களூர் உயர் மறைமாவட்டத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாக இத்திட்டம் விளங்குகின்றது என்றும், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனித்துக்கொள்வதற்கான திருஅவையின் பணியை நினைவூட்டுவதாகவும் இத்திட்டம் உள்ளது என்றும் எடுத்துரைத்தார் பேராயர் மச்சடோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்