வன்முறைச்சுழலைத் தூண்டும் ஆயுத வர்த்தகத்தை நிறுத்தவேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கொடூரமான வன்முறைச்செயல்களை நிறுத்துங்கள். அவை நாட்டுக்கோ, மக்களுக்கோ, அவற்றைச் செய்பவர்களுக்கோ நல்லதல்ல என்றும், வன்முறைச் சுழலை மேலும் தூண்டும் ஆயுத வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளையும் பன்னாட்டுச் சமூகத்தையும் கேட்டுக்கொண்டுள்ளனர் ஹெய்ட்டி தலத்திருஅவை ஆயர்கள்.
டிசம்பர் 9 திங்கள் கிழமை நாட்டில் அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு தங்களது 142 வது முழுமையான பேரவையையின் நிறைவில் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்புவிடுத்து அனுப்பிய செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் ஹெய்ட்டி தலத்திருஅவை ஆயர்கள்.
டிசம்பர் 29 ஆம் தேதி ஹெய்ட்டியில் தொடங்கும் யூபிலி ஆண்டை எதிர்நோக்கின் அடையாளமாக முன்மொழியும் ஆயர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளின் கீழ் ஹெய்ட்டி மக்கள் அனைவரும் எதிர்நோக்கின் சாட்சிகளாக இருக்கவேண்டும் என்றும், நாட்டில் நிலவும் வன்முறைச் சூழலால் சோர்வடைய வேண்டாம் எனவும் அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள்.
போர்ட் ஓ பிரின்சில் கடந்த வார இறுதியில் ஏறக்குறைய 184 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்த ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் ஹெய்ட்டிக்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்.
ஆயுதமேந்திய கும்பல்களின் வன்முறையை நிறுத்த புதிய வேண்டுகோளை விடுத்துள்ள ஆயர்கள், "ஒவ்வொரு நாளும் நம் சமூகத்தை ஆட்டிப்படைக்கும் இந்த கண்மூடித்தனமான வன்முறையைத் தூண்டுவதை நிறுத்துவோம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளனர். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்