மியான்மார் புலம்பெயர்ந்தோரின் கிறிஸ்துபிறப்பு பெருவிழா
மெரினா ராஜ் - வத்திக்கான்
குளிர் நிறைந்த மாட்டுத் தொழுவத்தில் மனுவுரு எடுத்த குழந்தை இயேசு அனுபவித்த உணர்வை மியான்மார் மக்கள் இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவன்று அனுபவித்தார்கள் என்றும், குண்டுவெடிப்புக்களுக்கு அஞ்சி மக்கள் தங்கியிருந்த குகையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது என்றும் கூறினார் லொய்கோ மறைமாவட்ட ஆயர் Celso Ba Shwe
டிசம்பர் 28 சனிக்கிழமை பீதேஸ் எனப்படும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தியில் புலம்பெயர்ந்த மியான்மார் மக்கள் சிறப்பித்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாப் பற்றி எடுத்துரைத்தார் கிழக்கு மியான்மாரின் லொய்கோ மறைமாவட்ட்ட ஆயர் Celso Ba Shwe.
குண்டுவெடிப்புக்களுக்கு அஞ்சி உயிர்பிழைப்பதற்காக மக்கள் பதுங்கியிருந்த மலைகளின் குகைப்பகுதியில் கிரிஸ்துபிறப்பு பெருவிழா திருப்பலிக்கான ஏற்பாடுகளை அருள்பணியாளர்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஏற்பாடு செய்தனர் என்றும், நூற்றுக்கணக்கான மக்கள் இத்திருப்பலியில் பங்கேற்று அன்று பாலனாக பிறந்த இயேசு அனுபவித்த குளிரையும் சூழலையும் தாங்களும் அனுபவித்தனர் என்றும் கூறினார் ஆயர் செல்சோ.
1754 ஆம் ஆண்டு புனித அல்போன்சஸ் மரியா தெ லிகுவோரி இயற்றிய நட்சத்திரத்தில் இருந்து இறங்கி வாரும் இயேசுவே என்ற பிரபலமான கிறிஸ்து பிறப்பு பாடலில் இடம்பெறும் வரிகளாக குளிரும் உறைபனியும் நிறைந்த குகையில் பிறந்தவர் என்ற வரிகளுக்கு ஏற்ப குகையில் புலம்பெயர்ந்த மக்கள் குளிரையும் உறைபனியையும் உணர்ந்தார்கள் என்றும் கூறினார் ஆயர்.
போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய மறையுரையில் “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என்ற இறைவார்த்தைகளை மையப்படுத்தி எதிர்நோக்காம் கிறிஸ்துவிற்காக நமது இதயங்களைத் திறப்போம் என்றும் கூறினார் ஆயர் செல்சோ.
ஜூபிலி ஆண்டின் கருப்பொருளான எதிர்நோக்கு, 2025 ஆம் ஆண்டில் லோய்காவில் உள்ள கிறிஸ்து அரசர் பேராலயத்திற்கு மக்கள் அனைவரும் திரும்ப முடியும் என்று நம்புவதாக எடுத்துரைத்த ஆயர் செல்சோ அவர்கள், கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அப்பேராலயம் இராணுவத்தாரால் இராணுவத் தளமாக மாற்றப்பட்டது என்றும் கூறினார். (FIDES)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்