தடம் தந்த தகைமை - சகோதர சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்து
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவர்களுக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? (மத் 5:47) என கேட்கிறார் இயேசு.
இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் ஏனையோரைப் போலன்றி தனித்தன்மைகொண்டு துலங்கிடல் வேண்டும். அதுவே அவரைப் பின்பற்றுவோருக்கான தகுதி. யூதர்கள் தமக்குச் சமமாக வாழும் யூதர்களுக்கோ, தம்மைவிட உயர்பதவி, பணம், செல்வாக்கு மிக்கவருக்கோ வாழ்த்துச் சொல்லும் வழக்கம் கொண்டிருந்தனர். தமக்குக் கீழானவர் எனக் கருதுபவருக்கோ, பிற இனத்தாருக்கோ வாழ்த்தளிப்பது சமூக மரபிற்கெதிரானது என எண்ணினர். இது அடைபட்ட இருட்டு சமூகத்தின் அடையாளம் என இயேசு எதிர்த்தார்.
ஒருவர் இன்னொருவரை வாழ்த்துவது வெறும் வார்த்தையல்ல, அது வாழ்வைப் பங்கிடுவதாகும். அது உள்ளத்தோடு உள்ளம் கொள்ளும் உறவாடல். உயிர்வாழும் உணர்வலைகளின் பாசப் பரிமாற்றம். அந்த வாழ்த்து தெரிவிப்பதில்கூட கஞ்சத்தனம் மிஞ்சியக் குறுகியப் பார்வையை இயேசு கேள்வியாக்கினார். நாம்கூட பலவேளைகளில் பிடித்தவர், பிடிக்காதவர் எனப் பகுத்து வாழ்த்துவதையும், பாராமுகமாகச் செல்வதையும் கையாண்டிருக்கிறோம் என்பது உண்மைதானே! வாழ்த்து – பெறுபவரைவிட வழங்குபவருக்கே வாழ்வை அளிக்கிறது.
இறைவா! பிறரை வாழ்த்தும் பொழுதெல்லாம் உம்மையே வாழ்த்துகின்றேன். இதனை வழுவாமல் கடைபிடிக்கும் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்