தேடுதல்

விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே என்ற செபத்தை கற்பித்த இயேசு விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே என்ற செபத்தை கற்பித்த இயேசு 

தடம் தந்த தகைமை – விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே

தான் கற்பித்ததை எழுத்து விடாமல் மனனம் செய்து கடவுளிடம் ஒப்பிக்க வேண்டும் என்பதல்ல இயேசுவின் நோக்கம். அன்புத் தந்தையோடு உறவாட அவரது வேண்டல் ஒரு வழித்துணை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்; விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! (மத் 6:9) என செபிக்கக் கற்றுக்கொடுத்தார் இயேசு.

யூத மறைநூல் அறிஞர்கள், ரபிக்கள் தங்களுக்கேற்ற விதத்தில் ஒரு வேண்டுதலை வடிவமைத்து தங்களிடம் மறை கற்க வந்த மாணவர்களுக்கும், சீடர்களுக்கும் போதித்தனர். இயேசு ஒரு ரபி. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிலவிய உறவையும், மனிதத் தேடலையும் ஒருங்கிணைத்து வேண்டலாக்கிக் கற்பித்தார். தான்

கற்பித்ததை எழுத்து விடாமல் மனனம் செய்து கடவுளிடம் ஒப்பிக்க வேண்டும் என்பதல்ல அவரது நோக்கம். அன்புத் தந்தையோடு உறவாட அவரது வேண்டல் ஒரு வழித்துணை.

கடவுளோடு கொண்ட இயேசுவின் ஆழ்ந்த அனுபவச் செயல்பாடே இவ்வேண்டல். தான் பெற்ற அனுபவ அடிப்படையிலேதான் கடவுளைத் 'தந்தையே' என உறவோடு அழைத்தார். அவர் தனக்கு மட்டுமின்றி தரணி வாழ்வோர்க்கெல்லாம் தந்தை என்றுணர்த்தவே 'எங்கள்' என்ற பன்மைத்தன்மையைக் கையாளுகின்றார். அதுகாறும் கடவுள் தூர வாழும் பெரும்சக்தி எனப் பார்க்கப்பட்ட சூழலில் அவரை ஆளாகப் பார்த்து, அவர் தூயவர், அவர் பொதுவானவர், அவரை எல்லாரும் போற்றலாம் என்ற புதுச் செய்தியைத் தன் வேண்டல் வழியாக விளம்புகின்றார். விண்ணகம் என்பது மேலோ கீழோ இல்லை, அது நம்முள் உள்ளது. அப்படியென்றால் கடவுள் நம்முள்ளே.

இறைவா! நீர் என்னுள் எளியராய் வாழும் தூய தந்தை. உம் பிள்ளையாகிய நானும் தூய உணர்வோடு வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2024, 15:39