தேடுதல்

நம் மனக் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் இயேசு நம் மனக் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும் இயேசு 

தடம் தந்த தகைமை : இடுக்கமான வாயில் வழியாக

இறையாட்சி என்பது போதிப்பதிலும், புனைதலிலும், சட்டமியற்றுதலிலும், கண்காணிப்பதிலும் இல்லை. அது தியாகமிக்க, நேயம் நிறைந்த, இழக்கின்ற, வெறுமைப் படுத்துகின்ற வாழ்வில் புலர்வது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? என ஒருவர் கேட்க, இயேசுவோ, ‘இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்’, (லூக் 13:23&24) என பதிலுரைத்தார்.

சட்டங்களை உற்பத்திச் செய்து அவற்றைக் கடைபிடிக்கக் கற்பித்தால் போதும், மறைநூலை புள்ளி மாறாமல் விளக்கிப் போதித்தால் போதும், விண்ணுலகம் சேர்ந்துவிடலாம் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தனர் யூத சமயத் தலைவர்கள். இறையாட்சி என்பது போதிப்பதிலும், புனைதலிலும், சட்டமியற்றுதலிலும், கண்காணிப்பதிலும் இல்லை. அது தியாகமிக்க, நேயம் நிறைந்த, இழக்கின்ற, வெறுமைப் படுத்துகின்ற வாழ்வில் புலர்வது. அது அலங்கார ஆடம்பரங்களைக் கடந்த அர்த்த வாழ்வு - அதுவே இடுக்கமான வாயில்.

மண்ணில் செல்வமுள்ளவரே விண்ணில் சேர முடியும் எனத் திட்டமிட்டுப் போதிக்கப்பட்டு வந்த சூழலில் இயேசுவின் போதனை ஒரு திருப்புமுனை. நம்மில் பலர் பல உதவிகள் செய்தாலும் நம்மை வருத்தி, தியாகித்துச் செய்யும் உதவியே உயர்வானது, உன்னதமானதும் கூட. அவ்வாறே இறையாட்சியின் வழி எளிதானதன்று. அது கற்பனைக் கதையுமன்று. இயேசுவின் கோதுமை மணிக் கதையை மனம் சுமந்து அதனைப்போல் தங்களை இழக்கத் துணியும் பணியாளர்களே இன்றைய சமூகத் தேவை. நம் யாகங்களுக்குத் தேவை உண்மையான தியாகம்.

இறைவா! என் தியாக நெருப்பில் எழும் ஒளியே உம் அருள். அதைப் புரிந்து என்னை வேள்வியாக்கும் வழி தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2024, 11:06