தேடுதல்

செபிக்கும் மக்கள் செபிக்கும் மக்கள்  (ANSA)

தடம் தந்த தகைமை - நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது

உள்ளறைக்குள் மட்டுமல்ல, உள்ளத்துக்குள் நடத்தும் மௌன உரையாடல்தான் மகத்தான வாழ்வுக்கு மாசக்தியூட்டும் மன்றாட்டு. இறைவேண்டல் - ஒரு திறப்பு மனநிலை, உள்நோக்கிய பயணம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டு மறைவாய் உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார் (மத் 6:6) என்றார் இயேசு.

நாம் பல விதங்களில், பல்வேறு நேரங்களில் பற்பல நோக்கங்களோடு பலரோடு இறையை வேண்டுகிறோம். குடும்பமாக, இயக்கமாக, பக்த சபையாக, திரு அவையாக, பெருங்கூட்டமாக வேண்டுவதைப் பொது வேண்டல் எனலாம். இது ஒருவகை என்றால் இன்னொருவகை வேண்டல் உண்டு. அதுவே தனி வேண்டல். பொதுவேண்டல் கிளைகள் என்றால் தனிவேண்டல் வேர். அந்தத் தனிவேண்டல் யூத ரபிகளால் பாசாங்கு போர்த்திய பகட்டுத்தனமாக அரங்கேற்றப்பட்டதைப் பார்த்த இயேசு காட்டிய நெறியே 'உள்ளறை வேண்டல்.'

ஒரு பாமர மனிதர் தினந்தோறும் கோயில் வந்து ஓரமாக ஒருமணி நேரம் அமர்ந்து செல்வதைக் கோயில் புத்தக நிலைய மேலாளர் கவனித்துக் கொண்டு அவரிடம் கேட்டார்: “தினமும் வருகிறீர்களே, கடவுள் எதுவும் சொல்வாரா?” “இல்லை, எதுவும் பேசமாட்டார், கேட்டுக் கொண்டிருப்பார்” என்ற பதிலுக்கு மீண்டுமாக “நீங்கள் என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்க “எதுவும் சொல்லமாட்டேன், கேட்டுக் கொண்டிருப்பேன்” என்றார் அப்பாமரர். உள்ளறைக்குள் மட்டுமல்ல, உள்ளத்துக்குள் நடத்தும் மௌன உரையாடல்தான் மகத்தான வாழ்வுக்கு மாசக்தியூட்டும் மன்றாட்டு. இறைவேண்டல் - ஒரு திறப்பு மனநிலை, உள்நோக்கிய பயணம்.

இறைவா! பகட்டுத்தன வேண்டுதலை விடுத்து அகத்துள் வாழும் உம்மோடு உரையாடும் உறுதியைத் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2024, 10:29