தேடுதல்

ஆமான் தூக்கிலிடப்படல் ஆமான் தூக்கிலிடப்படல்  

தடம் தந்த தகைமை : ஆமான் கொல்லப்படல்!

'வினைவிதைத்தவன் வினையறுப்பான்' என்ற பழமொழிக்கேற்ப, மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய தூக்கு மரத்திலேயே அவன் தூக்கிலிடப்பட்டான்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மன்னர் அகஸ்வேர், அரசி எஸ்தரை நோக்கி, “இப்படிச் செய்தவன் எவன்? தன் இதயத்தில் செருக்குற்று இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே?” என வினவினார். “எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே; இவனே அந்தத் தீயவன்!” என்று எஸ்தர் பதிலுரைத்தார். இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான். மன்னர் கடுஞ்சினமுற்று, விருந்தில் திராட்சை மது அருந்துவதை விட்டுவிட்டு, எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார். தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான் அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான். மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து விருந்து நடைபெற இடத்திற்குத் திரும்பிய பொழுது, எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார். “என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?” என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட, காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.

அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த அர்போனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி, “அதோ! ஆமானின் வீட்டெதிரே மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்!” என்றார். அதற்கு மன்னர், “அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்!” என்றார். மொர்தக்காயைத் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். மன்னரின் சீற்றமும் தணிந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2024, 12:03