தடம் தந்த தகைமை - எந்த அளவையால் அளக்கிறீர்களோ....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். (மத் 7:2)
பிறருக்குக் கொடுத்து மகிழும் குணத்தைவிடப் பிறரைக் கெடுத்து மகிழும் குணமே யூத சமூகத்தில் மேலோங்கி நின்றது. அப்பண்பாட்டிலிருந்து விடுபட்டுப் பிறரின் தேவையறிந்து பகிரும் பண்பில் ஒட்டுமொத்த மானுடம் தழைக்க இயேசு ஏங்கினார். அந்த ஏக்கத்தின் விடிவே இந்த அளவு சொல்லும் அழகுச் சொல். இது வெறுமனே பொருள் பகிர்வை மட்டும் குறிக்கவில்லை. எப்படி வாழ்கிறோமோ அப்படிதான் நம் மதிப்பும், மதிப்பீடுகளும் என்ற பரந்த பொருளும் தருகின்றது. வழங்கத் தெரிந்த மனிதனே வாழத் தெரிந்தவன். வழங்குவதை அளந்து நிற்க அல்ல. அளவில்லாமல் வழங்க வேண்டும் என்பதே இயேசுவின் அவா. 'கொடுப்பதால் மிகுதியாகப் பெறுகிறோம்' என்று மன்றாடிய புனித அசிசி அண்ணல் பிரான்சிஸின் நேர்நிலை எண்ணம் நமக்குள் விதையாகி விருட்சமாகட்டும். நாம் கொடுப்பதைவிட அதிகமாக எடுத்துக்கொண்டால், நம்மால் எடுத்துக்கொள்ள முடிந்ததைவிடக் குறைவாகவே பெறுவோம் என்பதே காலம் கற்றுத் தரும் கணிதப் பாடம். கடவுள் நமக்குக் கரங்களைக் கொடுத்தது… கொடுத்து நிறைவு காணவே.
இறைவா! உம் அன்பு அளவில்லாதது, அதுவே நான். என்னை பிறருக்கு அளவில்லாமல் வழங்க வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்