தடம் தந்த தகைமை – கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் (மத் 7:7) என்றார் இயேசு.
கேட்டல் - உறவின் வெளிப்பாடு. கேட்டலில் உரிமை நிறைந்திருக்கிறது. அதேவேளையில் கடமையும் கலந்துள்ளது. மகனோ மகளோ தன் தந்தை - தாயிடமோ அல்லது நெருக்கமானவரிடமோ, சில நேரங்களில் அறிமுகமற்றவரிடமோ கேட்டலும் பெறுதலும் மானுடக் கூட்டு வாழ்வின் முதிர்வு. கேட்டுப் பெறுதல் பணிவின் துணிவும் கூட. கேட்டல் என்பது வெறுமனே பொருளுக்காக மட்டும் எனப் பொருள் கொள்ளக் கூடாது. வாழ்வில் பெற ஏராள நலன்கள், வழிகாட்டல்கள், தெளிவுகள் என இன்னும் எவ்வளவோ உள.
கேட்பதில் உள்ள சிக்கல் யாதெனில் எதை, எப்படி, எத்தனை முறை, எவ்வளவு, எவரிடம் கேட்பது என்ற கேள்விகளெல்லாம் அதோடு சேர்ந்து எழுவதே. ஒருவர் தன் அடிப்படைத் தேவைக்காக நல்வாழ்விற்கென நம்பிக்கையோடும், நன்மனதோடும், யாரிடமும் எத்தனைமுறை வேண்டுமானாலும் கேட்கலாம். நம் தேவைகளைக் கேட்கவும், அதைக் கொடுக்கவும் கடவுள் காத்திருக்கின்றார். பெறுவோம் என்ற நம்பிக்கை நிறைந்த உறுதிப்பாட்டுடன் கேட்போமே! ஒருவர் தனக்காக அன்றி பிறருக்காகக் கேட்பது மேலான தவம்.
இறைவா! நான் கேளாமலே எல்லாம் தரும் உம் கொடைமன உணர்வை எனக்கும் தயவாய்த் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்