தேடுதல்

செபிக்கும் மக்கள் செபிக்கும் மக்கள்  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - நீங்கள் கேட்குமுன்னரே உங்கள் தேவை

பிறருக்குப் புரியாத, பரிவற்ற, மூச்சுவிடாத, அடுக்குச் சொற்களை, அந்நிய மொழி என்ற பிதற்றலோடு நடத்தப்படும் செபங்கள் அருவருக்கத்தக்கவை, ஆண்டவரை ஓரம் கட்டுபவை.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது, பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம். மிகுதியான சொற்களை அடுக்கிக்கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப்போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்குமுன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார். (மத் 6:7,8) என்றார் இயேசு

ஒரு நாளின் விடியற்காலைக்கு முன், 9 மணி, 12 மணி, 3 மணி, ஆதவன் மறைவுக்கு முன் என 5 வேளைகளில் இறைவேண்டல் செய்யும் பழக்கத்தை யூதர்கள் கையாண்டனர். குறிப்பாக எருசலேம் சந்தை கூடும் 3 மணி நேரத்தில் தெரு நடுவில் கைகளை விரித்து நின்று நீண்ட வேண்டலைப் பிதற்றும் வேடத்தனத்தைப் பார்த்து இயேசு முகம் சுளித்தார். பற்றற்று, பாசாங்குத்தனத்தோடு, பிறர் பார்க்கப் பிதற்றும் வார்த்தைகள் வெறும் வெற்று வார்த்தைகள். அது தேவையற்ற கழுத்தறுப்பு வேலையும்கூட.

எங்க ஃபாதர் நன்றாகச் செபிப்பார் என்ற பாராட்டிற்காக, திருப்பலிக்கு முன், மன்னிப்பு மன்றாட்டுக்குமுன், வாசகங்களுக்கு முன், மறையுரைக்குப் பின், நம்பிக்கையாளர் மன்றாட்டுக்குப் பின், காணிக்கை ஒப்புக் கொடுக்கையில், நற்கருணை மன்றாட்டுக்கிடையே, சமாதானத்திற்கு முன், திருவிருந்துக்குப் பின் என நிறைய வேண்டல்கள் திரு அவை காட்டும் திருவழிபாட்டுக்கு முற்றிலும் முரணானது. நற்செய்திக் கூட்டப் போர்வையிலும் இதுபோன்று நிகழும். பிறருக்குப் புரியாத, பரிவற்ற, மூச்சுவிடாத, அடுக்குச் சொற்களை, அந்நிய மொழி என்ற பிதற்றலோடு நடத்தப்படும் செபங்கள் அருவருக்கத்தக்கவை, ஆண்டவரை ஓரம் கட்டுபவை. கடவுள் செவிடரல்ல, நாம் கத்திக் கதறிக் கூவி ஓலமிட்டு இரைச்சலிட.

இறைவா! எனக்கு என்ன தேவை என உமக்குதான் நன்கு தெரியும். அதை மட்டும் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2024, 11:35