தேடுதல்

அலெப்போ நெடுஞ்சாலையில் அலெப்போ நெடுஞ்சாலையில்   (AFP or licensors)

அலெப்போ நகர் கத்தோலிக்கர் அச்ச நிலையிலேயே தொடர்கின்றனர்

அலெப்போ நகரை விட்டு வெளியேறாமல் மக்களுடனேயே இருப்போம் என கத்தோலிக்க ஆயர்களும் அருள்பணியாளர்களும், துறவிகளும் மக்களுக்கு உறுதி கூறியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சிரியாவின் அலெப்போ நகரை அண்மையில் ஜிகாத் இஸ்லாமிய புரட்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நகரில் கத்தோலிக்க சமூகம் அச்சம், பதட்டநிலை, நிச்சயமற்ற நிலை ஆகியவைகளை அனுபவித்துவருவதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் கர்தினால் மாரியோ செனாரி.

கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் போராலும், தீவிர ஏழ்மையாலும், பன்னாட்டு தடைகளாலும், ஒரு நில அதிர்வாலும், வன்முறைகளின் அலைகளாலும் நம்பிக்கையை தொலைத்து மக்கள் அங்கிருந்து தப்பிக்கவே விரும்புகிறார்கள் என மேலும் கூறினார் கர்தினால்.

16 ஆண்டுகளுக்கு மேலாக சிரியாவிற்கான திருப்பீடத்தூதுவராக பணியாற்றிவரும் கர்தினால் செனாரி அவர்கள், நவம்பர் 30ஆம் தேதி புரட்சியாளர்களால் அலெப்போ நகர் கைப்பற்றப்பட்டது குறித்து கவலையை வெளியிட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் இறந்தும், பல ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்தும் உள்ள நிலையில் அந்நாடு புதிய அவசரகால நிலையையும் இன்னுமொரு போரையும் எதிர்நோக்கியிருப்பதாக வருத்தத்தை தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கமாட்டோம் என புரட்சியாளர்கள் அறிவித்துள்ளபோதிலும், மக்கள் இன்னும் அச்சத்திலேயே வாழ்வதாக உரைத்த கர்தினால் செனாரி அவர்கள், மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயன்றுவருவதைக் காணமுடிகிறது என்றார்.

அலெப்போ நகரை விட்டு வெளியேறாமல் மக்களுடனேயே இருப்போம் என கத்தோலிக்க ஆயர்களும் அருள்பணியாளர்களும், துறவிகளும் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் கூறினார் கர்தினால்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2024, 13:39