பாலஸ்தீனப் பகுதியில் வாழ்வு, கடவுள் நம்பிக்கையுடன் தொடர்கிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் புனித பூமி பகுதியில் மனிதாபிமானமற்ற நிலைகளையும், ஈவிரக்கமற்ற செயல்பாடுகளையும் காண்பதோடு, பாலஸ்தீனிய மக்களின் பொறுமையுடன் தாங்கும் தன்மையையும் நோக்க முடிகிறது என்றார் புனித பூமியிலிருந்து அண்மையில் திரும்பிய அனைத்துலக காரித்தாஸ் பொதுச்செயலர் Alistair Dutton.
இஸ்ராயேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் துவங்கியதில் இருந்து, காசா, வெஸ்ட் பேங் மற்றும் லெபனோனில் நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கிவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் டட்டன் அவர்கள், தன் அண்மை பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், காசாவில் இன்றைய பதட்டநிலைகளின் மத்தியில் காரித்தாஸ் பணியாளர்களின் சேவை மிகவும் சிரமமானது என்று உரைத்ததுடன், இன்றைய அவசரத் தேவை, அப்பகுதிக்கான ஆயுத விநியோகம் நிறுத்தப்படுவதேயாகும் எனவும் கூறினார்.
பாலஸ்தீனப் பகுதியில் பெரும் சிரமங்களின் மத்தியிலும் மக்கள் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பது, அவர்கள் கடவுள் மீது கொண்டிருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கையே என மேலும் கூறினார் காரித்தாஸ் அமைப்பின் பொதுச் செயலர் டட்டன்.
புனித தலங்களை தரிசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாகவும், மக்களின் அச்சம் கலந்த ஒருவித அமைதியே அங்கு நிலவுவதாகவும், உதவிப் பொருட்களை பெரிய அளவில் எடுத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகத்தின்போது எடுத்துரைத்தார் டட்டன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்