தேடுதல்

அருள்பணி முனைவர் மைக்கேல் ராஜ் - சிவகங்கை மறைமாவட்டம் அருள்பணி முனைவர் மைக்கேல் ராஜ் - சிவகங்கை மறைமாவட்டம் 

நேர்காணல் – எதிர்நோக்கின் திருப்பயணிகள் புத்தக விளக்கம் – பகுதி 2

திருப்பயணம் வாழ்வு மாற்றத்தின் மனமாற்றத்தின் வெளிப்பாடாகவும், ஒருவரின் தனிமனித இருப்பை இறைவனின் தூய்மையை நோக்கிப் பயணிக்கவும், உயர்த்தவும், நம்மை அழைக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே கடந்த வாரம் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற புத்தகத்தின் விளக்கம் பற்றி அதன் ஆசிரியர் அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ் அவர்களின் கருத்துக்களைக் குறித்துக் கண்டோம். இன்று அதன் தொடர்ச்சியை நம் நேர்காணலில் காணலாம்.

நேர்காணல் - அருள்பணி செ. மைக்கேல் ராஜ்

எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற புத்தகத்திலிருந்து

யூபிலியின் சிறப்பு நிகழ்வுகள்

திருஅவையின் வரலாற்றில் யூபிலி ஆண்டு அல்லது புனித கொண்டாட்டங்களில் உரோமையில் அமைந்துள்ள புனித பேதுரு பசிலிக்காப் பேராலயம் மற்றும் புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்திற்கு திருயாத்திரை மேற்கொண்டு அந்தத் திருத்தலங்களை தரிசித்து மன்றாடும் சிறப்பு நிகழ்வுகளாக அமைந்தன. அதன் பிறகு அந்தத் திருத்தலங்களில் புனித நுழைவாயில் (Holy Dor) எனப்படும் கதவுகள் அருளின் அடையாமாக இறை அருளுக்குள் நுழையும் அடையாளங்களாகத் திறந்து வைக்கப்பட்டன. புனித ஆண்டில் திருஅவை அறிவிக்கும் புனிதத் தலங்களைத் திருப்பயணிகளாகச் சந்தித்து, புனித நுழைவாயிலில் நுழைந்து அங்கே மன்றாடும் இறைமக்களுக்கு 'பேறுபயன்' 'பாவத்தண்டனை நீங்கச் சலுகை" எனப்படும் சிறப்பு ஆசியும் வழங்கப்படத் தொடங்கியது. எனவே அருளின் ஆண்டு, புனித ஆண்டு என்று அறிவிக்கப்பட்ட யூபிலி ஆண்டுகளில் திருப்பயணங்களும், புனித நுழைவாயிலும், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக மன்னிப்பும், இறைவேண்டலும்,சிறப்பு திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களும், நம்பிக்கை அறிக்கையை உறுதியுடன் அறிக்கையிடுதலும் அதன் பயனாக அருளின் சலுகை எனப்படும் சிறப்பு ஆசியும் திருப்பயணிகளுக்கு இறைமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த யூலிலி ஆண்டின் சிறப்புப் பண்புகளை அல்லது அருளின் செயல்பாடுகளைக் கீழே சற்று விரிவாகக் காண்போம்.

திருப்பயணம்

 யூபிலி ஆண்டின் சிறப்பு நிகழ்வான திருப்பயணம் எல்லைகளைக் கடந்து பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது கடந்து செல்லும் பயணம் என்பது நம் இருப்புகளை மட்டும் அல்ல, நம் வாழ்வையும் மாற்றும் நோக்கம் கொண்டது. நம் பாதைகளைத் திட்டமிடவும் நம் இலக்கைப் பற்றிய தெளிவு திருப்பயணங்கள் பல்வேறு எல்லைகளை கடந்து செல்ல பயணிக்க நம்மைத் தூண்டுகின்றன. எல்லைகளை மட்டும் அல்ல. நம்மை இன்று மற்றவரிகளிடமிருந்து பிரிக்கும் தடைக்கற்களான மொழி, நிறம், இனம், சாதியம் இவற்றையும் கடந்து நம் இலக்கை நோக்கிப் பயணிக்கும் திருப்பயணத்திற்கு இது நம்மை அழைக்கின்றது. திருயாத்திரை அல்லது திருப்பயணம் என்னும் சொல் இலத்தின் வார்த்தையான "per ager என்ற மூலச் சொல்லிலிருந்து across the field" என்ற வயல்களைக் கடந்த, நிலங்களைக் கடந்த, புவிப்பரப்பைக் கடக்கும் நிலையை எடுத்துச் சொல்கிறது. மற்றொரு இலத்தின் சொல்லான "per ager" என்ற மூல வார்த்தை border crossing எனப்படும் எல்லைகளைக் கடந்து செல்வதனைக் குறித்துக் காட்டுகிறது. இரண்டுமே கடந்து செல்லும் ஒரு பயணத்தை இங்கே குறித்துக் காட்டுகின்றன.

திருவிவிலியத்தில் தொடக்க நூலில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி பின்வருமாறு கூறுகிறார். உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொ.நூ 12 ). இந்த வார்த்தைகளுக்கு ஆபிரகாம் கீழ்படிந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் பயணித்தார். அலைத்து திரிந்த அரமேயன்' எனவும் "நிரந்தரக் குடியற்ற அரமேயர் எனவும் ( இச 20:5) ஆபிராம் அழைக்கப்படுகிறார். இயேசுவின் இறையாட்சிப் பணியும் ஒரு திருப்பயணமே எனலாம். கலிலேயாவில் தொடங்கி எருசலேமில் நிறைவுபெறும் ஒரு பயணமாகவே இயேசுவின் பணி பார்க்கப்படுகிறது. இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லதை தீர்மானித்து (லூக்: 9: 51) என இயேசுவின் பணியை ஒரு பயணமாக நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். இதே போன்ற பயணத்தை மேற்கொள்ள "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீராக்குங்கள் எனவும் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர் எனவும் நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும், யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் எனவும் தம் சீடர்களுக்கு இயேசு பணித்ததும் ஓர் எல்லையை நோக்கிய பணியின் பயணமாகவே பார்க்கப்படுகிறது. புனித பவுலும் எருசலேம் தொடங்கி இல்லிரிக்கம் மாநிலம் வரை (ஏறக்குறைய 1000 மைல் 16004 கிமீ) எங்கும் சுற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியை முடித்து விட்டேன் (உரோ 15:19) என்றார்.

பயணம் என்பது படிப்படியாகச் செய்யப்படுகிறது. பாதைகள் தெளிவாகி பயணிக்கும் முறைகள் தெளிவாகி, சரியான பாதையில் வாழ்வில் பயணிக்கத் திருப்பயணம் நமக்கு வழிகாட்டுகிறது. இந்தப் பாதையில் மறைக்கல்வியும் மறையறிவும் பெறுகிறோம். புனித வழிபாடுகளும் வாழ்வுடன் இணைத்துத் திருச்சடங்குகளும் வாழ்வுப் பயணத்தில் நடந்தேறுகின்றன. நாம் யாரோடு இணைந்துப் பயணிக்கின்றோமோ அவர்களும் நமது வாழ்வையும் உறவையும் விரிவுபடுத்துகின்றனர். வாழ்வும் செயல்பாடுகளும் பயணத்தில் மலர்கின்றன. பயணத்தின் போது இயற்கையைப் பற்றிய பாராட்டும், சிந்தனைகளும் உள்ளத்தில் உதிக்கின்றன. இயற்கையைப் பேணவும், பாதுகாக்கவும் இந்தப் பயணம் நமக்கு உதவுகிறது. இவ்வாறு இயற்கையின் மூலமாக வாழ்வுப் பயணத்தில் கடவுளில் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடும் அவரின் திட்டங்களுக்கான நமது கீழ்ப்படிதலும் வெளிப்படுகின்றன' என்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் யூபிலி 2025க்கான தன் கடிதத்தில் அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு திருப்பயணம் வாழ்வு மாற்றத்தின் மனமாற்றத்தின் வெளிப்பாடாகவும், ஒருவரின் தனிமனித இருப்பை இறைவனின் தூய்மையை நோக்கிப் பயணிக்கவும், உயர்த்தவும், நம்மை அழைக்கின்றது. இந்தத் திருப்பயணத்தில் தங்களுடைய நாடுகளை இழந்த ஏலியரோடும், புலம்பெயர்ந்து வாடும் மக்களோடும், பொருளாதார முன்னேற்றம் தேடி வேறு நாடுகளுக்கு குடிபெயர்ந்து வாடும் மக்களோடும் அதன்மூலம் பரந்து விரிந்த மனித இனத்தோடும் உறவு பாராட்டத் திருப்பயணம் அழைக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 December 2024, 14:01