தேடுதல்

தமஸ்குவில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை தமஸ்குவில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள்கள் விற்பனை  

சிரியாவில் வழிபாட்டு விழாக்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன!

ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு, 2011-ஆம் ஆண்டு முதல் சிரியாவின் கிறிஸ்தவச் சமூகத்தை ஆதரித்து வருவதுடன், இந்த நிச்சயமற்ற காலகட்டத்தில் அவர்களுக்கு உதவ தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிரியா ஒரு புதிய ஆட்சியின் கீழ் அதன் முதல் வாரத்தைத் தொடங்கும் வேளை, நம்பிக்கை மற்றும் நிச்சயமற்ற நிலையில் ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டுள்ளது என்றும், குறிப்பாக ஹோம்ஸ் மற்றும் அலெப்போ போன்ற நகரங்களில், மக்கள் வளர்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கிறது ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பு.

அங்குச் சவால்கள் இருந்தபோதிலும், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்றும், இது ஒரு நிலையற்ற முன்னேற்றத்தைக் குறித்துக் காட்டுகிறது என்றும் தெரிவிக்கிறது அவ்வமைப்பு.

ஹோம்ஸ் நகரத்தில், நிலவும் சூழல் ஓர் எச்சரிக்கையாகவே இருக்கும் என்றும், உணவு மற்றும் எரிபொருள் கிடைக்கிறது என்றாலும், அவற்றின் ​​விநியோகம் குறைவாக உள்ளது மற்றும் விலைகள் அதிகரித்து வருகின்றன என்றும் கவலை தெரிவிக்கிறது இவ்வமைப்பு.

இங்குள்ள கிறிஸ்தவர்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் கவலைகளைக் குறித்து  வெளிப்படுத்துகின்றனர் என்றும், மதத்தின் பெயரால் மாறி மாறி நிகழும் ஆட்சி மாற்றம் குறித்து அதிகம் அஞ்சுகின்றனர் என்றும் உரைக்கும் ACN அமைப்பு, மத சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகள் மீதான வரம்புகள் காரணமாக கிறிஸ்தவர்களை வெளியேறும்படி கட்டாயப்படுத்தும் ஷரியா அடிப்படையிலான அரசியலமைப்பை நோக்கி (Sharia-based constitution) சிரியா நகரக்கூடும் என்ற பரவலான கவலை உள்ளது என்றும் குறிப்பிடுகிறது.

அலெப்போ நகரில் நிலவும் சூழல் சற்று தணிந்த நிலையில் உள்ளது என்றாலும், எச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கை கொண்டதாக உள்ளது என்றும், நகரத்தை சுற்றி கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் உருவாக்கப்பட்டு, எதிர்வரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை மகிழ்வுடன் கொண்டாடக் கூடிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகிறது அவ்வமைப்பு. 

மேலும் அலெப்போ நகரில் தொடக்கத்தில் பொருள்களின்  விலைகள் உயர்ந்தாலும், பின்னர் அவை நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், வெளிநாட்டு பொருள்ள், குறிப்பாக துருக்கியில் இருந்து, இப்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன என்றும் கூறும் இவ்வமைப்பு,. கிறிஸ்தவப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்றும், உள்ளூர் மருந்து உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறது.

கிறிஸ்தவச் சமூகம் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில், குறிப்பாக 13 ஆண்டு போருக்குப் பிறகு, இரு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள்  எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிகழ்ந்தன என்றும் கூறுகிறது ACN அமைப்பு.

மதப் பாகுபாடு பற்றி அவ்வப்போது அறிக்கைகள் வந்தபோதிலும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டதாக  ஆதாரப்பூர்வமான  செய்திகள் ஏதும் இல்லை என்று குறிப்பிடும் இவ்வமைப்பு, இங்குள்ள தலத்திருஅவைத் தலைவர்கள் மற்றும் துணைவர்களுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பைப் பேணுகிறது என்றும், மத சுதந்திரம் நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்ய அனைத்துலகச் சமூகம் மாற்றத்தைக் கண்காணிக்கும்படி வலியுறுத்துகிறது என்றும் தெரிவிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 13:09