அன்னைமரியா ஓர் அதிசயம் – இலங்கை மடு அன்னை திருத்தலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
“காட்டில் குடியிருக்கும் கானகச் செல்வியாம் மடு அன்னைக்கு மடுப்பதியில் மகோன்னத விழா. தேசிய இன ஒன்றிப்புக்கு களமாக அமையும் மடுத் திருப்பதி!” என்று இலங்கையின் மன்னார் மறைமாவட்ட அருள்பணி தமிழ் நேசன் இணையத்தளத்தில் எழுதியுள்ளார்.
“கேட்ட வரம் அளிக்கும் கீர்த்திபெற்ற சீமாட்டி, காட்டில் குடியிருக்கும் கருணையுள்ள என் தாயே, பாட்டில் மலர் தொடுத்தேன் பாலோடு தேன் எடுத்தேன், நாட்டில் அமைதி என்ற நதியைத் திரும்பவிடு” என்று மடு அன்னைக்கு பாமாலைச் சூட்டினார், சொல்லின் செல்வர் இளவாலை அமுது என்ற ஈழத்துப் புலவர்.
வனவிலங்குகள் வாழும் அடர்ந்த காட்டின் மத்தியில், எழில்மிகு அன்னையாக, கானகச் செல்வியாக மடு அன்னை கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றார். அவ்வன்னையை அண்டிவரும் அனைவருக்கும் அவர் அடைக்கலம் கொடுத்து, அருள்மழை பொழிகின்றார். இந்த மடு அன்னை திருவிழா, ஆகஸ்ட் 15 மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இலங்கையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் சிங்களவர், தமிழர் என்ற இனப்பாகுபாடின்றி, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், புத்தம் என்ற சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் மடு அன்னைத் திருத்தலம் வந்து அன்னையின் அருளாசீர் பெற்றுச் செல்கின்றனர். “தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை” என்ற உணர்வோடு மக்கள் இந்த மடுத் திருத்தலத்துக்கு வருகின்றனர்.
மடு அன்னை திருத்தலம், 468 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. 16ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம், யாழ்குடாப் பகுதிகள், மாந்தை பெருநிலப்பரப்பு, மன்னார்தீவு போன்றவை யாழ்ப்பாண அரசாக விளங்கின. அக்காலத்தில் இந்தியாவின் தென்கரையோரங்களில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள் யாழ்ப்பாண அரசில் கிறிஸ்துவைப் பற்றி அறிந்திராத மக்களுக்கு இறைவார்த்தையைப் போதிக்கத் தொடங்கினர். இவர்கள் மூலமாக தூய பிரான்சிஸ் சவேரியாரின் மறைப்பணி ஆற்றலையும், புதுமைகளையும் கேள்வியுற்ற மன்னார் மக்கள், 1544ம் ஆண்டில் இப்புனிதரை மன்னார்த் தீவுக்கு வருமாறு ஓர் தூதுக்குழுவினர் மூலமாக ஒலை அனுப்பினர். அச்சமயத்தில் புனித சவேரியாரால் வரமுடியாத காரணத்தினால், தனது பிரதிநிதியாக, சவேரியார் என்ற அருள்பணியாளரை அனுப்பி வைத்தார் அவர். இந்த அருள்பணியாளர் மன்னார் தீவுக்கு, குறிப்பாக, பட்டிமுக்கு வந்து போதித்தார். 600க்கும் அதிகமான மக்கள் கிறிஸ்தவர்களானார்கள். அச்சமயத்தில் யாழ்ப்பாண அரசராக இருந்த சங்கிலியன் என்பவர், மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்குத் தொல்லை கொடுத்து அவர்களைக் கொலை செய்தார்.
1582ஆம் ஆண்டில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த கத்தரீனா என்ற இளம்பெண் கிறஸ்தவத்தைத் தழுவினார். இப்பெண் மன்னாரில் சிறிதுகாலம் தங்கி கிறிஸ்தவத்தைப் பரப்பினார். இதனால் 1583ஆம் ஆண்டில் 26 ஆலயப் பங்குகளில் 43 ஆயிரம் கிறிஸ்தவர்கள் மறைந்திருந்து கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாய் விளங்கினர். இவ்வாறு ஏற்பட்ட 26 பங்குகளில் மன்னார், தள்ளாடி, திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள மாந்தை அன்னைமரி ஆலயமும் உள்ளடங்கும். செபமாலை அன்னைமரி என்று தற்போது அழைக்கப்படும் மடு அன்னையின் திருவுருவம் மாந்தை பிட்டியில் அமைந்துள்ள தற்போதைய லூர்துகெபியில்தான் முதலில் இருந்தது. 1658ஆம் ஆண்டில் மாந்தையில் உள்ள ஆரோக்கிய அன்னைமரி ஆலயம், டச்சுக்காரரின் ஆட்சியின்கீழ் வந்ததால் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் செபமாலை அன்னையின் திருவுருவத்தை வன்னிக்கு எடுத்துச்சென்றனர். 1669ஆம் ஆண்டில் டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவை மீண்டும் கைப்பற்றியபோது, அவர்கள் கத்தோலிக்கரை அடக்கி ஒடுக்கி நசுக்கினர். இந்தக் கலவரத்திலிருந்து தங்களையும், செபமாலை அன்னை திருவுருவத்தையும் பாதுகாக்கும் பொருட்டு அதற்கு அடுத்த ஆண்டில் மாந்தை மக்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அருள்பணியாளர்களின் துணையில்லாத அந்த வேளையிலும், மாந்தையில் இருந்த 20 பக்தியுள்ள குடும்பங்கள் செபமாலை அன்னையின் திருவுருவத்தைத் தூக்கிக்கொண்டு, அடர்ந்த வன்னிக் காட்டினுள் புகுந்தனர். திசை தெரியாது அங்கும் இங்கும் அலைந்தனர். இறுதியாக ‘மருதமடு’ என்ற இடத்திற்கு எவ்வித ஆபத்தும் இன்றி அன்னையின் வழிநடத்தலோடு வந்து சேர்ந்தனர்.
அதேசமயம், யாழ்ப்பாண நகரில் டச்சு நாட்டினரின் கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையும் தொடர்ந்துகொண்டிருந்தது. எழுநூறு கிறிஸ்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்காட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் பூநகரியைக் கடந்து பயத்தோடும் பதட்டத்தோடும் அடர்ந்த காட்டினுள் அலைந்துகொண்டிருந்தனர். ஏற்கனவே அங்கு வந்திருந்த மாந்தைக் கிறிஸ்தவர்களோடு இவர்களும் சேர்ந்து அன்னையின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து தப்பிவந்தவர்களில் போர்த்துக்கீசிய தளபதியின் மகளாகிய ‘எலேனா’ என்பவரும் ஒருவர். இவர்தான் முதன்முதலில் மடு அன்னைக்கு சிறிய ஆலயம் அமைத்தார். அவருடைய இந்த நற்செயலுக்காக கிறிஸ்தவர்கள் இந்த இடத்தை ‘சிலேனா மருதமடு’ என்று அழைத்தனர். இந்த இடம்தான் இன்றைய மடுத்திருத்தலப் பகுதியாகும்.
இந்த மடு அன்னையின் பரிந்துரையால் அன்றுமுதல் இன்றுவரை பல அற்புதங்கள் நடைபெற்று வருகின்றன. மடு அன்னை திருவுருவம், இப்பகுதிக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் அதன் சுற்று வட்டாரத்தில் நச்சு உயிரினங்களின் ஆபத்துக்கள் வெகுவாகக் குறைந்தன. காலப்போக்கில் மடு அன்னை எழுந்தருளியிருக்கும் இடத்து மண்ணை மக்கள் நம்பிக்கையுடன் எடுத்துச்சென்று தங்களது தீராத நோய்களைத் தீர்த்ததாக வரலாறு சொல்கின்றது. இத்திருத்தலத்தின் வளாகத்திலிருந்து பெறப்படும் மண் ஆசீர்வதிக்கப்பட்டு, ஆலயத்தின் ஒரு மூலையில் அதற்கென அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் வைக்கப்படுகின்றது. இந்த மண்ணை மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று குணமளிக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். ‘கோயில் மருந்து’ என்று இது அழைக்கப்படுகின்றது. நோய்க்கு மருந்தாகவும், தீய சக்திகளில் இருந்து பாதுகாப்புப் பெறும் கவசமாகவும் மக்கள் இதைக் கருதிப் பயன்படுத்துகின்றனர். இந்த மண்ணை நீரில் கரைத்து நோயாளிகளுக்கு குடிக்கக் கொடுக்கின்றனர். நெற்றியிலும், நெஞ்சிலும் பூசுகின்றனர். தீமைகள் தங்களை அணுகாவண்ணம் தங்கள் வீட்டு மூலைகளில் தெளிக்கின்றனர். இச்செயல் இன்றுவரை நிலைத்து நிற்கின்றது. பாம்பு தீண்டிய நிலையில் இங்கு கொண்டுவரப்படும் மக்கள் இத்திருத்தலத்தை அடைந்ததும் குணம் பெறுகின்றனர் என்பதும் மக்களின் ஆழமான விசுவாசமாகும். “சொந்த சுமையைத் தூக்கித் தூக்கி சோர்ந்து போனேன்” என்ற விரக்தியோடு இத்திருத்தலம் வரும் மக்கள் சுமை இறங்கிய உணர்வோடு வீடு திரும்புகின்றனர்.
1658ஆம் ஆண்டு முதல் 1686ஆம் ஆண்டு வரை டச்சுக்காரரின் கொடுங்கோல் ஆட்சியினால் இலங்கையில் அருள்பணியாளர்கள் ஒருவரும் இல்லை. அக்காலத்தில் விசுவாசமுள்ள பொதுநிலையினரே கிறிஸ்தவத்தை வளர்த்து வந்தனர். பின்பு, 17ஆம் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில்(1687) இந்தியாவின் கோவாவிலிருந்து Oratorian சபையைச் சேர்ந்த அருளாளர் ஜோசப் வாஸ் போன்ற மறைப்பணியாளர்கள் கத்தோலிக்க விசுவாசத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்து இந்தச் சிறிய மடு அன்னை ஆலயத்தை விரிவுபடுத்தினர். இலங்கை முழுவதிலுமிருந்து பக்தர்கள் வரத் தொடங்கினர். அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த கொழும்புவின் முதல் பேராயர் Christophe Earnest Bonjean என்பவரால் புதிய மடு அன்னை ஆலயம் கட்டும் பணி 1872ல் துவக்கப்பட்டு பெருமளவில் ஊக்கம் வழங்கப்பட்டது. மடு அன்னைமீது சிறப்பு பக்தி கொண்டிருந்த அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த யாழ்ப்பாண ஆயர் Jules-André Brault என்பவர் 1920ஆம் ஆண்டில் திருத்தந்தையிடம் சிறப்பு அனுமதி கேட்டு எழுதினார். 1921ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட் அவர்கள் அனுமதி வழங்க, 1924ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி மடுமாதா திரு உருவத்துக்கு திருத்தந்தை 11ஆம் பயஸின் காலத்தில் ஆடம்பரமாக முடி சூட்டப்பட்டது. மரத்தாலான இத்திருத்தலம், நீலம் மற்றும் வெள்ளைப் பளிங்குக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது 1944ஆம் ஆண்டில் எவ்வளவோ கட்டுப்பாடுகள், போக்குவரத்துச் சிரமங்கள் இருந்தும், காட்டிலிருக்கும் இந்த மடு அன்னை திருத்தலத்துக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வந்து ஆலய அருள்பொழிவில் கலந்துகொண்டனர். இலங்கையில் சண்டை முடிவதற்காக மக்களைச் செபிக்கத் தூண்டும் நோக்கத்தில் 1948, 1974, 2001 ஆகிய ஆண்டுகளில் அந்நாடு முழுவதும் மடு அன்னை திருவுருவம் எடுத்துச் செல்லப்பட்டது. அமைதியை வேண்டி அணையாத் தீபம் ஒன்று மன்னார் மேனாள் ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு அவர்களால் மடு அன்னையின் உள்பீடத்தில் 2003ஆம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது.
திருத்தலத்தின் புனிதத்தைப் பேணுவதற்காக மதுபானம், புகைப்பிடித்தல், போதைப்பொருள், துர்நடத்தையில் ஈடுபடுதல், கேளிக்கைகள், களியாட்டங்கள் ஆகியவை முழுவதும் தடை செய்யப்பட்டு, மடுத்திருத்தலம் உணவு, உடை, உறையுள், பக்தி, பரவசம் போன்றவற்றிற்கு மாத்திரம் உட்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற கிராமங்களில் உள்ளவர்கள் நேர்த்திக்கடனுக்காக இரண்டு, மூன்று நாட்கள் கால் நடையாக நடந்து, கூட்டம் கூட்டமாக “ஆவே ஆவே மரியா” “வாழ்க வாழ்க மரியே” (மருதமடு மாதாவே) என்னும் பாடலைப் பாடிக்கொண்டு மடுத்திருப்பதியை வந்து அடைவதை எப்போதும் காணலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்