அன்னை ஓர் அதிசயம் – தமாஸ்கு அன்னைமரியா திருத்தலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மிர்னா(Myrna) என அறியப்படும் Mary Kourbet Al-Akhras என்பவர் 1964ம் ஆண்டில் சிரியா நாட்டு தமாஸ்கு நகரில் பிறந்தவர். இவரது குடும்பம் புலம்பெயர்ந்த வாழ்வு வாழ்ந்ததால், இவர் தனது குழந்தைப்பருவம் மற்றும் வளர்இளம் பருவத்தை லெபனோன் நாட்டின் பெய்ரூட்டிலும் தமாஸ்கிலும் செலவழித்தார். இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளுடன் சாதாரண அமைதியான வாழ்வு வாழ்ந்தவர் மிர்னா. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரான Nicolas Nazzour என்பவரை மணந்தார் மிர்னா. நிக்கோலாஸ் 1980ம் ஆண்டு ஜூலையில் பல்கேரிய நாட்டுக்குச் சென்றபோது, சோஃபியா நகரிலுள்ள Alexander Nevsky ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆலயத்தை தரிசித்தார். அங்கு Kazan அன்னைமரியா திருவுருவப் படத்தின் பத்து சிறிய பிரதிகளை வாங்கி வீட்டில் கொண்டுவந்து வைத்தார். அன்னைமரியாவும் இயேசுவும் இருக்கும் அப்படங்கள் மூன்று இன்ஞ் உயரமுடையவை. மிர்னா, கடும் நோய்வாய்ப்பட்டிருந்த தனது நாத்தனார் Laylaவின் படுக்கையின் அருகிலிருந்துகொண்டு அப்படத்தின் முன்பாக 1982ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதியன்று செபித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் Mayada Kowzaly என்ற முஸ்லீம் பெண்ணும் அவரருகில் இருந்தார். திடீரென மிர்னாவின் உடம்பு நடுங்கியது. ஏதோ ஒரு வல்லமை தனது உடலிலிருந்து வெளியேறுவதுபோன்று மிர்னா உணர்ந்தார். அப்போது மிர்னாவின் கரங்களிலிருந்து ஒரு விசித்திரமான ஒளி சுடர்விடுவதையும், சிறிதுநேரத்தில் எண்ணெய் போன்ற பொருள் மிர்னாவின் தோலிலிருந்து வடிவதையும் பார்த்தார் அந்த முஸ்லீம் பெண் Mayada. இதைப் பார்த்ததும் வியப்பில் கத்த ஆரம்பித்தார் Mayada. ஆனால் மிர்னா என்ன நடக்கின்றது என்றே தெரியாமல் முற்றிலும் குழம்பிப்போய் இருந்தார். உடனே Mayada, மிர்னாவிடம், அவரின் கரங்களை நோயுற்றிருந்த அவரின் நாத்தனார்மீது வைக்கச் சொன்னார். மிர்னாவும் அவ்வாறு செய்யவே, எல்லாரும் வியக்கும்வண்ணம் அவரின் நாத்தனார் அற்புதமாய்க் குணமடைந்தார்.
அன்று மாலை மிர்னா தனது கணவர் நிக்கோலாசிடம் நடந்த அற்புதத்தை விவரித்தார். ஆனால் நிக்கோலாஸ் அந்த நிகழ்வை அவ்வளவாக நம்பவில்லை. ஆயினும் இதே அற்புதம் மீண்டும் நவம்பர் 25ம் தேதி நடந்தது. மிர்னாவின் தாயும் குணமடைந்தார். பின்னர் நவம்பர் 27ம் தேதியன்று, அன்னைமரியாவும் இயேசுவும் இருக்கும் 8 செ.மீ. உயரமுடைய அந்தப் படத்திலிருந்து எண்ணெய் வடியத் தொடங்கியது. அது நிக்கோலாஸ்-மிர்னா தம்பதியரின் படுக்கைக்கு அருகில் வடிந்தது. அதேசமயம் மிர்னாவின் கரங்களிலிருந்தும் எண்ணெய் வடிந்தது. நிக்கோலாஸ் தனது உறவினர்களை அழைத்து அங்கு நடப்பதைப் பார்க்கச் சொன்னார். அனைவரும் வந்து அந்தப் புதுமையைக் கண்டு செபிக்கத் தொடங்கினர். அந்தப் படத்திலிருந்து வடிந்த எண்ணெய்யை ஒரு மணி நேரத்துக்குள்ளாக நான்கு குப்பிகளில் நிரப்பினர். திடீரென மிர்னா கேட்கும் திறனை இழந்தார். ஒரு சிப்பியிலிருந்து மெல்லிய குரல் வருவதுபோன்று ஒரு பெண்ணின் மென்மையான குரலைக் கேட்டார். "அஞ்சாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கதவுகளைத் திற. என்னைப் பிறர் பார்ப்பதைத் தடுக்காதே. எனக்காக மெழுகுவர்த்தியை ஏற்று" என்று அப்பெண் மிர்னாவிடம் சொன்னார். இந்த அனுபவம் ஒரு கற்பனை என நினைத்து இது குறித்து யாரிடமும் சொல்வதற்கு அஞ்சினார் மிர்னா. இக்காட்சி 1982ம் ஆண்டு டிசம்பரிலும், 1983ம் ஆண்டு சனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களிலும் இடம்பெற்றது.
மிர்னாவின் வீட்டில் நடந்த இந்த நிகழ்வு விரைவில் பல இடங்களுக்குப் பரவியது. பிரிந்த கிறிஸ்தவ சபையினர், முஸ்லீம்கள், ஆர்த்தடாக்ஸ், எல்லா வழிபாட்டுமுறைகளைச் சேர்ந்த கத்தோலிக்கர் என ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அன்னைமரியா படத்தைப் பார்ப்பதற்கு இரவு பகலாய் அங்கு வந்தனர். இந்த அற்புத எண்ணெய்யால் பல நோயாளிகள் குணமடைந்தனர். 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி முதல் 1990ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதிவரை இந்தப் படத்திலிருந்து முறைமையாய் எண்ணெய் வடிந்தது. பின்னர் 2001ம் ஆண்டு புனித வாரத்தில் இந்தப் படத்திலிருந்து மீண்டும் எண்ணெய் வடிந்தது. இப்படத்திலிருந்து வடிந்த எண்ணெய், சுத்தமான ஆலிவ் எண்ணெய் போல் இருந்ததென பத்திரிகையாளர் Brigid Keenan எழுதியிருக்கிறார். மருத்துவர்கள், மனநலமருத்துவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் மிர்னாவுக்கு நடந்த இந்த அற்புத நிகழ்வு உண்மையென சாட்சி சொல்லியிருக்கின்றனர். மிர்னாவுக்கு நெற்றியிலும், கரங்களிலும் பாதத்திலும், விலாவிலும் அற்புதக் காயங்கள் இருந்தன எனவும், அன்னைமரியா மிர்னாவின் இல்லத்துக்கு வெளிப்புறத்தில் காட்சி அளித்தார் என்றும் சொல்லப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் அமைதிக்காகச் செபிக்குமாறும், ஒருவர் ஒருவரை அன்புகூருமாறும், கிறிஸ்தவ சபைகளின் ஒற்றுமைக்காகச் செபிக்குமாறும் அன்னைமரியா காட்சியில் கூறியதாக மிர்னா சொல்லியுள்ளார்.
மிர்னா செபம் செய்யும்போது அல்லது இக்காட்சி அனுபவம் பற்றிப் பேசும்போது அல்லது காட்சிநிலையில் இருக்கும்போது அவரின் கரங்கள், முகம், கழுத்து, கண்கள், வயிறு ஆகிய பகுதிகளிலிருந்து எண்ணெய் வடிகிறது. அன்னைமரியா மிர்னாவுக்கு, ஐந்து தடவைகள் காட்சி கொடுத்துள்ளார். 1983ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியன்று கொடுத்த காட்சியிலும், அதே ஆண்டு மார்ச் 24ம் தேதியன்று அளித்த காட்சியிலும் அன்னை மரியா செய்தி சொல்லியிருக்கிறார். இவ்வன்னை தமாஸ்கு அன்னைமரியா எனப் போற்றப்பட்டு வருகிறார். உள்நாட்டுச் சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்காகச் செபிப்போம். சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகிலும் அமைதி நிலவ அவ்வன்னையிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்