இயற்கையின் நல்ல பொறுப்பாளர்களாக இருக்க மறக்கிறோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைவா உமக்கும் உம்மால் படைக்கப்பட்ட பிற படைப்புகளுக்கும் எதிரான எங்கள் பாவங்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்றும், இயற்கையின் நல்ல பொறுப்பாளர்களாக இருக்கவில்லை, பூமிக்கு அடிபணியும் உமது கட்டளைகளைப் பற்றி நாங்கள் குழப்பமடைகின்றோம் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது பிலிப்பீன்சில் உள்ள கார்லோ மறைமாவட்டம்.
டிசம்பர் 9 திங்கள்கிழமை பிலிப்பீன்சில் உள்ள கன்லால் எரிமலை வெடித்து ஏறக்குறைய 5000 மீட்டர் உயரத்திற்கு சாம்பலையும் புகையையும் வெளிவிடுவதைக் குறித்து இயற்கையின் இந்த சூழலுக்குக் காரணம் மனிதர்களாகிய நாம் தாம் என்று சுட்டிக்காட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளது தூய கார்லோ மறைமாவட்டம்.
புவி வெப்பமடைதலுக்குக் காரணம் நாமே, சூறாவளி, வெள்ளம், எரிமலை வெடிப்பு மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தீவிரத்திற்கும் நாமே பொறுப்பு என்று வலியுறுத்தும் அவ்வறிக்கையானது இயற்கைக்கு எதிரான இச்சூழலுக்காக மனவருந்தி மன்னிப்பு வேண்டுவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 9 திங்கள்கிழமை மதியம் தொடங்கிய எரிமலை வெடிப்பினால் அப்பகுதியைச் சுற்றி வாழ்ந்துவந்த 9,403 குடியிருப்பாளர்கள் அதாவது ஏறக்குறைய 2,880 குடும்பங்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிலிப்பீன்சில் உள்ள எரிமலை ஆய்வு நிறுவனத்தாரால் எச்சரிக்கை எண் இரண்டிலிருந்து மூன்றாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆபத்தான பகுதிகளில் வாழ்பவர்களை உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளது என்றும், எரிமலை வெடிப்பினால் ஏறக்குறைய 6 கிமீட்டர் தொலைவிலுள்ள நீக்ரோஸ் தீவில் வாழும் 80,000 மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1866 ஆம் ஆண்டு முதல் 40 முறைக்கு மேல் விஸ்யாஸ் பகுதியில் உள்ள கன்லான் எரிமலை வெடித்துள்ளது. மிக மோசமான எரிமலை வெடிப்பு 1911 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தால் எரிமலை வெடித்ததில் ஏறக்குறைய 1,335 பேர் இறந்தனர்.
1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் பினாடுபோ மலையின் வெடிப்பில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் மற்றும் ஏறக்குறைய 1,00,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள பிலிப்பின்ஸ் உலகின் 75 விழுக்காடு எரிமலைகளைக் கொண்டுள்ளது அவற்றில் 24 எரிமலைகள் இயக்கத்தில் இருக்கும் எரிமலைகளாகும். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்