பிலிப்பீன்சில் எரிமலை வெடிப்பு, தலத்திருஅவை இறைவேண்டலுக்கு அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிலிப்பீன்சில் உள்ள கன்லான் எரிமலை வெடித்ததால், அதன் தலத்திருஅவை அதிகாரிகள் இறைவேண்டல் செய்ய அழைப்புவிடுத்துள்ளனர் என்றும், ஆபத்தான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது யூக்கான் செய்தி நிறுவனம்.
இந்தத் தீவை உள்ளடக்கிய சான் கார்லோஸ் மறைமாவட்டம், இயற்கைக்கு எதிராக இழைத்த தங்களின் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டியது என்றும், மக்களையும் அவர்தம் உடைமைகளையும் இயற்கை மற்றும் மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றும், இறைவேண்டல் செய்தது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இது குறித்து டிசம்பர் 9, இத்திங்களன்று, சான் கார்லோஸ் மறைமாவட்டம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிகரித்து வரும் இயற்கை சீற்றங்களுக்கு மனிதர்கள்தான் காரணம் என்றும், இதனால், புவி வெப்பமடைந்து சூறாவளி, வெள்ளம், எரிமலை வெடிப்பு மற்றும் பிற இயற்கை பேரழிவுகள் அதிக எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் நிகழ்கின்றன என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.
"கடவுளே, உமக்கும், உனது பிற படைப்புகளுக்கும் எதிரான எங்கள் பாவங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இயற்கையின் நல்ல பொறுப்பாளர்களாக இருக்கவில்லை. பூமியை அடிபணியச் செய்யும் உனது கட்டளையைப் பற்றி நாங்கள் உணர்ந்துகொள்ளவில்லை. எங்களது தவறுகளால் பாதிக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது, நாங்கள் செய்த முறைகேடுகள் மற்றும் அலட்சியத்தின் பயனை இப்போது அறுவடை செய்கிறோம்" என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள அந்நாட்டு அரசு அதிகாரிகள், மத்திய பிலிப்பீன்சிலுள்ள எரிமலை, டிசம்பர் 9-ஆம் தேதி திங்களன்று ,5,000 மீட்டர் உயரம் கொண்ட சாம்பல் தூண்களை வானில் கக்கத் தொடங்கியதாகவும், ஆபத்தான பகுதி ஆறு கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது நீக்ரோஸ் தீவில் 80,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்