தேடுதல்

அறுசுவைகள்  அறுசுவைகள்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 63-2, ஆண்டவர் அருளும் அறுசுவை விருந்து!

அறுசுவை உணவும், தனது இறக்கைகளின்கீழ் நிரந்தர பாதுகாப்பும் தரும் இறைவனை நாம் எப்போதும் பற்றிக்கொள்வோம்..
விவிலியத் தேடல்: திருப்பாடல் 63-2, ஆண்டவர் அருளும் அறுசுவை விருந்து!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘உயிரினும் மேலான கடவுளின் பேரன்பு!’ என்ற தலைப்பில் 63-வது திருப்பாடலில் முதல் நான்கு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகளைக் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அந்த இறைவார்த்தையை அமைதி நிறைந்த மனதுடன் வாசிப்போம். "அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. என்னை அழித்துவிடத் தேடுவோர் பூவுலகின் ஆழத்திற்குள் செல்வர். அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர். அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்" (வச 5-11)

அறுசுவை விருந்து எனப்படுவது நமது நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் சுவைகளை துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம் உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைத்  தொடர்புபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. உடலானது இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இனிப்பு தசையை வளர்க்கின்றது, புளிப்பு கொழுப்பினை வளர்கின்றது. கார்ப்பு எலும்புகளை வளர்க்கின்றது, உவர்ப்பு உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது, துவர்ப்பு இரத்தத்தைப் பெருக்குகின்றது, கசப்பு நரம்புகளை பலப்படுத்துகின்றது. அக்கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்து வந்தன. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர்.

இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று நம் முன்னவர்கள் கூறினர். இதனடிப்படையில், "அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்" என்று தாவீது கூறும் வார்த்தைகளில் முக்கியமான கருத்தொன்றையும் நாம் கற்றுக்கொள்வோம். அதாவது, அறுசுவை விருந்தில் ஆறு சுவைகள் கலந்திருப்பதுபோல, கடவுள் நமக்கு வழங்கியுள்ள இந்த வாழ்வில், இன்பம், துன்பம், பொறுமை, சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, நிறைவு என ஆறு விடயங்கள் கலந்துள்ளன. ஆக, இவற்றை ஏற்றுக்கொண்டு தனது வாழ்வை கடவுளின் அன்பில் ஊன்றி வாழ்வோர்தான் இறுதியில் வெற்றிபெற முடியும். அவ்விதத்தில் பார்க்கும்போது நமது தாவீது அரசர் இப்படிப்பட்டதொரு வாழ்வை வாழக் கூடியவராக இருந்திருக்கிறார். அதனால்தான் "அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்" என்று கூறுகின்றார்.

அண்மையில் இணையத்தில் காணொளி ஒன்றைக் கண்டு வியந்தேன். ஒரு மரத்தில் குருவி ஒன்று அழகிய கூடு ஒன்றைக் கட்டி அதில் முட்டையிட்டு குஞ்சுகளைப் பொரித்துப் பாதுகாத்து வருகிறது. அது தனது குஞ்சுகளுக்காக இரைதேடச் சென்ற வேளையில்ஸ பெரிய காக்கையொன்று அக்கூட்டிற்குள் புகுந்து அக்குஞ்சுகளில் ஒன்றை கொத்தித்தின்ன தொடங்குகிறது, திடீரென்று அங்கு வரும் தாய்ப்பறவை இக்காட்சியைக் கண்டதும் ஒலியெழுப்பி அலறித்துடிக்கிறது. தாய்ப்பறவையைக் கண்டதும் அந்தக் காக்கை சட்டென பறந்தோடிவிடுகிறது. உடனே அந்தத் தாய்ப்பறவை அதன் குஞ்சுகளைத் தனது சிறகுகளுக்குள் பத்திரமாகப் பாதுகாக்கத் தொடங்குகிறது. இதில் இன்னொரு வியப்புக்குரிய காரியம் என்னவென்றால், அந்தக் காக்கை திரும்பவும் அக்கூட்டிற்குள் வருகிறது. உடனே பெரும்கோபம் கொண்டு அந்தத் தாய்ப்பறவை அதனை விடாது துரத்திச் சென்று கடுமையாகத் தாக்கிக் கொல்கிறது.

சங்க இலக்கியத்தில் நானூறு அகப் பாடல்களின் தொகுப்பான அகநானூற்றின் இரண்டு பாடல்கள், நாட்டை ஆண்ட மன்னர் ஒருவர் பறவைகளின் பாசத்திற்குரியவராக இருந்திருக்கிறார் என்ற செய்தியைத் தருகின்றன. அந்த இரண்டு பாடல்களும் சங்கக் கவி பரணர் பாடியதாகும். ஆய் எயினன் என்பவன், முருகனை ஒத்த வலிமையோடு பகைவர் பாதுகாத்து நிற்கும் கோட்டைகளை வென்ற வெற்றிச் சிறப்பினையுடைய பெரிய படைகளைக் கொண்டவனும், போரிடுவதில் வல்லவனுமான மிஞிலி என்பவனோடு போர்க் களமெல்லாம் குருதியால் குருதி நிறம் அடையுமாறு கடுமையாகப் போரிட்டு, முடிவிலே தானும் தோற்று மடிந்தான். எயினன் பறவைகளின் பாதுகாவலன் என்பதால், அப்பகுதியில் இருந்த பறவைகளும், வேற்றுப் பகுதியிலிருந்து வந்த புதிய பறவைகளும் சேர்ந்து சூரியக் கதிர்களின் வெம்மையானது அவன் உடலின்மீது படாது இருக்குமாறு, பெருந்திரளாகக் கூடி வட்டமிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன. இங்கே, பறவைகள் போர்க்களத்தில் இறந்துகிடந்த மன்னருக்கு இறகால் நிழலமைத்துக் கொடுத்திருக்கும் என்ற புலவரின் குறிப்பை முழுவதுமாக ஏற்கமுடியாது. என்றாலும், ஆய் எயினன் பறவைகளை நேசித்துப் பாதுகாத்திருக்க வேண்டும், அதைப் புலவர் கற்பனையில் மிகைப்படுத்திப் பாடியிருக்க வேண்டும் என்று நம்மை சிந்திக்கச் செய்து அச்செய்தியை ஏற்கச் செய்கிறது. இல்லையேல், ஒன்றுமில்லாமல் புலவரால் பாடியிருக்க முடியாது.(நன்றி : கீற்று)

நமது வீடுகளில் வளர்க்கும் கோழிகளைக் குறித்துச் சிந்திப்போம். அங்கே என்ன நிகழ்கிறது? முட்டைகளிலிருந்து குஞ்சுகளைப் பொரிந்தவுடன் ஒருசில நாள்கள் கழித்து அவற்றை வெளியே கூட்டிச் செல்கிறது தாய்ப்பறவை. குஞ்சுகளைப் பார்த்ததும் மூக்கில் வியர்த்ததுபோல் அவற்றைக் கொத்தித் தூக்குவதற்கு வந்துவிடும் பருந்துகள். உடனே இதனை அறியும் தாய்க்கோழி ஒரு சிறப்பு ஒலியெழுப்பி அந்தக் குஞ்சுகள் அனைத்தையும் தனது இறக்கைகளுக்குள் பாதுகாத்துக்கொள்ளும். தன் வாழ்நாள் முழுதும் கடவுள் தன்னை தனது எதிரிகளிடமிருந்து காப்பாற்றி வருவதால், "நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது" என்று பாடுகின்றார். மேலும் "அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்” (திபா 91:4) என்றும், "உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்" (திபா 17:8) என்று வேறுசில திருப்பாடல்களிலும் பாடுகின்றார் தாவீது.

அடுத்து, “தனது எதிரிகள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர்” என்கின்றார் தாவீது. எதிரிகள் போர்தொடுக்கும்போது வீரர்கள் வாளுக்கு இரையாவர் என்பது நாமறிந்த ஒன்றுதான். ஆனால் அவர்கள் 'நரிகளுக்கு விருந்தாவர்' என்றதொரு வார்த்தையைப் பயன்படுத்துகின்றார் தாவீது. இதன் பொருளை இரண்டு வழிகளில் நாம் புரிந்துகொள்ளலாம். ஒன்று, அவர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டு நரிகளுக்கு விருந்தாகலாம், மற்றொன்று, நரிகளே அவர்களைத் தாக்கிக் கொல்லலாம். எப்படியோ தனது எதிரிகள் அழித்தொழிக்கப்படுவர் என்பதை உறுதியாக நம்புகிறார் தாவீது. இங்கே நரிகள் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம். நரிகள் கிராமத்தின் புற பகுதிகள், வேளாண்மைப் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள், ஆற்றங்கரைகள், பள்ளங்கள் போன்ற பகுதிகளை இருப்பிடமாகக் கொண்டு வாழ்கின்றன. நரி வெப்பத்தை தாங்கும் திறனுடையது. நரி, தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு. பிற விலங்குகள் உண்டதுபோக, மீதமுள்ள கழிவுமாமிசங்களை உண்பதும் உண்டு. எனவே, நரிக்கு, எப்போதும் உணவுப்பிரச்சினை ஏற்படுவதே கிடையாது. அதனால்தான், ‘’நரியிற் கூண் நல்யாண்டும் தீயாண்டும் இல்’’  என்ற பழமொழி ஒன்று கூறப்படுகிறது.  நரிக்கு உணவு நிறைய கிடைக்கின்ற நல்ல காலமும், உணவு கிடைக்காத பஞ்சகாலம் கிடையாது என்பதுதான் இதன் பொருள். முன்னர் கிராமங்களில் மனிதர்கள் குறிப்பாக குழந்தைகள் இறந்தால் ஊருக்கு தொலைவிலுள்ள இடுகாட்டிலும் சிலர் தங்கள் வேளாண்மை புரியும் காட்டிற்குள்ளேயும் புதைத்து விடுவர். இரவு நேரங்களில் நரிகள், புதைத்த உடலினைப் பறித்துத் தின்னும். கால மாறுபாட்டாலும் மனிதர்கள் நடமாட்டம் அதிகமானதாலும் தற்போது இந்நிகழ்வுகளைக் காண முடிவதில்லை. பொதுவாக, மனிதர் ஒருவர், ஒரு நரியிடம் மாட்டிக்கொண்டால் அவர் எளிதாகத் தப்பிவிட முடியும். அதேவேளையில், இரண்டு மூன்று நரிகள் என்றால் அம்மனிதரை அவைகள் கொன்றுவிடும் என்பது உறுதி. இதன் அடிப்படையில் தனது எதிரிகளின் வீழ்ச்சிக் குறித்துக் குறிப்பிட, ‘அவர்கள் நரிகளுக்கு விருந்தாவர்’ என்று தாவீது அரசர் கூறியிருக்கலாம்.

இறுதியாக, "அரசரோ கடவுளை நினைத்துக் களிகூர்வார்; அவர்மேல் ஆணையிட்டுக் கூறுவோர் அனைவரும் பெருமிதம் கொள்வர்; பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்"  என்று கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இங்கே, 'பொய் சொல்வோரின் வாய் அடைக்கப்படும்' என்பது தனது மகன் அப்சலோம் மற்றும் அவனது ஆதரவாளர்களின் நம்பகத்தன்மையற்ற செயல்களை எடுத்துக்கூறியிருக்கலாம். ஆனாலும், கடவுளை மிகவும் உறுதியாக நம்பி அவரைப் பற்றிக்கொண்டுள்ள இஸ்ரயேல் மக்களின் அரசராகிய தனக்கு பாதுகாப்பும் நிறைமகிழ்வும் உண்டு என்பதை அவர் உறுதியாக நம்புவதைப் பார்க்கின்றோம். ஆகவே, அறுசுவை உணவும், தனது இறக்கைகளின்கீழ் நிரந்தர பாதுகாப்பும் தரும் இறைவனை நாமும் எப்போதும் பற்றிக்கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2024, 11:59