தேடுதல்

அருள்சகோதரி ஜான்சி நம்பிக்கை ராஜ் அருள்சகோதரி ஜான்சி நம்பிக்கை ராஜ்  

அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது

மெரினா ராஜ் – வத்திக்கான்

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என புள்ளி விவரங்கள் காட்டுகின்றன என்றும், பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கின்றன. ஏனெனில் அவற்றில் பெரும்பாலானவை வீட்டில் நிகழ்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி ஜான்சி நம்பிக்கை ராஜ்.

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் கூடலூர் என்ற பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 50 சிறுமிகளை தன்னுடைய உடன் சகோதரிகளோடு பராமரித்துவரும் மரிய பம்பினா சபையைச் சார்ந்த அருள்சகோதரி ஜான்சி நம்பிக்கைராஜ் அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் முறைகேடுகள் நிறைந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, 2024ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஒரு புதிய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்தது என்று எடுத்துரைத்துள்ள அருள்சகோதரி ஜான்சி அவர்கள், இச்சட்டம் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் வழியாக வழக்குகளை விரைவாகச் செயலாக்க வழிவகுக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது என்றும், 2023ஆம் ஆண்டு உரோமில் உள்ள கிரிகோரியன் பல்கலைக்கழகத்தின் ஐஏடிசி நிறுவனத்தில் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்புப் பயிற்சியில் தான் கற்றதை இந்தியாவில் தனது பணியில் தற்போது இணைத்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் அருள்சகோதரி ஜான்சி.

அதிக ஆபத்துகளுக்கு ஆளாகும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அருள்சகோதரி ஜான்சி அவர்கள், இப்பணியில் சில முன்னேற்றங்கள் இருப்பதாகவும், குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் இதைக் குறித்து பேசுவதற்கு துணிவையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2024, 15:32