திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு : சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. பாரு 5:1-9 II. பிலி 1:4-6,8-11 III. லூக் 3:1-6)
இன்று நாம் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய மூன்று வாசகங்களும் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று பண்புகளையும் வலியுறுத்தி கடவுள் வழங்கும் மீட்பு அனைவருக்குமானது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இப்போது முதல் வாசகத்தில் முதல் பகுதியை வாசிப்போம். 'எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். 'கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்து கொள்; என்றுமுள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின்கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். ‛நீதியில் ஊன்றிய அமைதி’, ‛இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’ என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். இங்கே கடந்ததை மறைத்துவிட்டு அதாவது கடவுளுக்கு எதிராக இழைத்த அனைத்துப் பாவ காரியங்களையும் மறந்துவிட்டு புதியதொரு வாழ்வைத் தொடங்க அழைப்புவிடுகின்றார் இறைவாக்கினர் பாரூக். ஆனால் முக்கியமான கருத்தொன்றையும் அவர்களுக்கு வலியுறுத்துகின்றார். அதுதான் ‛நீதியில் ஊன்றிய அமைதி’, ‛இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’. இதில்தான் நாம் மேலே கூறிய சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முப்பண்புகளும் ஒருசேர வெளிப்படுகின்றன. நீதியில் வெளிப்படும் அமைதிதான் இறைப்பற்றில் ஒளிரும் என்றும் இதற்கு நாம் பொருள்கொள்ளலாம். இஸ்ரேல் மக்களிடத்திலும் அவர்களை ஆட்சிசெய்த அவர்களின் அரசர்களிடத்திலும் இந்த மூன்று தலையாயப் பண்புகளும் இல்லாத காரணத்தால்தான் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு கடவுளால் சிதறடிக்கப்பட்டார்கள். அதாவது பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள். ஆனால் இப்போது அவர்கள் பெறப்போகும் புதுவாழ்வில் இம்மூன்று பண்புகளும் தழைத்தோங்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இவ்வாறு கூறுகின்றார். அடுத்து "பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்' என்கின்றார் பாரூக்.
இதே சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் எடுத்துக்காட்டும் திருமுழுக்கு யோவான் குறித்து இறைவாக்கினர் எசாயா கூறும் பகுதி இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகிறது. “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ‘ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்’.” இங்கே இறுதி வார்த்தையாக அமையும் 'மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்' என்பது நம் கவனத்தை ஈர்க்கிறது. God is inclusive, not exclusive! என்று சொல்லுவார்கள். அதாவது, கடவுள் வேறுபாடுகள் காட்டி எவரையும் விலக்கி வைப்பவர் அல்ல, மாறாக, வேறுபாடுகள் அகற்றி எல்லோரையும் தனக்குள் உள்ளடக்கிக்கொள்பவர் (இணைத்துக்கொள்பவர்). ஏனென்றால் கடவுளை நாம் எப்போதும் மதம், இனம், மொழி, நாடு என்று ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வைத்துவிட முடியாது. அவர் அனைத்தையும் கடந்தவர், எல்லாவற்றையும் கடந்து அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தக்கூடியவர் என்பதற்கு பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பல்வேறு எடுத்துக்காட்டுகளை நாம் கொள்ளலாம். குறிப்பாக, இயேசுவின் அணுமுறைகளைப் பாருங்கள். அவர் எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறார், எல்லோரும் அவரைத் தேடிவருகின்றனர். ஆனால் அதேவேளையில் அவர் தேங்கிய நீரோடையாக அல்லாமல், பாய்ந்தோடும் அருவியாக எல்லா இடங்களுக்கும் சென்று எல்லா மக்களுக்கும் பணியாற்றுகிறார். சீமோனும் அவருடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள். அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள். அதற்கு அவர், “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொன்னார் (காண்க மாற் 1:36-38) என்று மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இயேசுவைப் பொறுத்தமட்டில் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அதற்காகவே அவர் தனது உயிரைக் கையளித்தார். இதனை அறிவுக்கண் கொண்டு மட்டுமல்ல ஞானக்கண் கொண்டும் பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில்தான், "நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்" என்கின்றார் புனித பவுலடியார். ஆகவே, சமூக நீதியிலிருந்து சமத்துவமும், சமத்துவத்திலிருந்து சகோதரத்துவமும், சகோதரத்துவத்திலிருந்து ஒன்றிப்பும், ஒன்றிப்பிலிருந்து நிலையான அமைதியும் பிறக்கிறது. இதனை மையப்படுத்தியதுதான் கிறிஸ்துவின் திருவருவகை என்பதை நம் மனதில் நிறுத்துவோம்.
நாம் வாழும் இன்றைய உலகில் மனிதர் கடவுளுக்கு எல்லைகளை வகுத்து அவருக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அதனால்தான் மனிதர்களிடையே இத்தனை வேறுபாடுகளும் பிரிவுகளும் பிளவுகளும் மதக்கலவரங்களும். குறிப்பாக, இப்போது புனித பூமியான இஸ்ரயேலில் நடந்துகொண்டிருப்பது என்ன? அங்கே ஒரு மாபெரும் இன அழிப்பு நிகழ்ந்துகொண்டிருகிறது என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் போர் தொடங்கியதிலிருந்து நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமைதிக்காக ஒவ்வொரு நாளும் குரலெழுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் யாரும் அதற்குச் செவிகொடுத்ததுபோல் தெரிவில்லை. இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புதான் இன்று இயேசு பிறந்து வாழ்ந்த நாட்டில் நீதியும் அமைதியுமின்றி அங்கு வாழும் மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. 1948-ஆம் ஆண்டில் சிறிய அளவில் ஐக்கியநாடுகள் மற்றும் மேலை நாடுகளின் உதவியுடன் மேற்கு ஆசியாவில் தனது பூர்வ இடமான எருசலேமை மையமாகக் கொண்டு இடம் பிடித்த இஸ்ரேல், இன்று எந்தளவில் நில ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்பதை அந்த நாடு வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்த்திய நில ஆக்கிரமிப்பு மற்றும் எல்லை விரிவாக்கத்தின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம். இவ்வாறாகத் தன்னை விரிவுபடுத்திகொண்ட இஸ்ரேலின் ஏதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக ஈரானில் ஊக்குவிக்கப்பட்டதே “எதிர்ப்பின் அச்சு“ (Axis of Resistance) என்று அமைக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகளான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, மற்றும் ஹஸத் அல் ஷபி என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் யூதர்களின் தாயகமாகத் தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு மதரீதியான எதிர்ப்பை அண்டை அரபு நாடுகள் தெரிவித்தாலும், ஐ.நா. சபை மற்றும் அமெரிக்காவின் ஆதரவினாலும், ஏனைய உலகநாடுகளின் கள்ள மவுனத்தினாலும், அரபு நாடுகளுக்கிடையே நிலவிவரும் ஒற்றுமையின்மையாலும் இஸ்ரேல் இன்று விசுவரூபம் எடுத்திருக்கிறது என்றும் கடந்த கால வரலாறு கூறுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதியன்று ஹமாஸ் தனது நாட்டின் மீது நடத்திய தாக்குதலைச் சாக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்நாள் வரை 41,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்றுகுவித்திருக்கிறது. அண்மையில் லெபனோன் மீதான தாக்குதலில் கூட 4,000-க்கும் மேற்பட்ட அம்மக்களை பலி கொண்டது மட்டுமல்லாமல், அவர்களில் 12 இலட்சம் பேரை புலம்பெயர்ந்தோராக்கி இருக்கின்றது. இஸ்ரேலின் இந்த ஏதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்த ஐ.நா. சபை செயலர் - தலைவர் அன்டோனியோ குத்தேரஸ் அவர்களை தனது நாட்டுக்குள் நுழையத் தடை விதிக்கும் அளவுக்கு அதன் நடவடிக்கை இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நாடற்ற புலம்பெயர்ந்தோராக உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட யூத இனம், இரண்டாம் உலகப் போர் வரையிலும் சொல்லொணாத் துயரை அனுபவித்து இன்று உலக அரங்கில் தன்னை அனைத்துத் துறைகளிலும் பெரும் பங்களிப்பு செய்த இனமாக அடையாளப்படுத்தியிருக்கிறது. அத்தகையப் பெருமை கொண்ட யூத இனத்தைச் சேர்ந்த இஸ்ரேல் எல்லை விரிவாக்கம் என்ற பெயரில் இன அழிப்பை மேற்கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்றே உலக அரங்கில் கேள்வி எழுப்பபடுகிறது. ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தும், இலட்சக்கணக்கான மக்களைப் புலம் பெயரச் செய்தும் தொடரும் இந்தப் போர் முடிவுக்கு வரவேண்டும், அங்கே நீதியும் நீடித்த அமைதியும் நிலைபெற வேண்டும், அதற்கு உலக நாடுகள் தமது கள்ள மவுனத்தைக் களைந்துவிட்டு உதவ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. ‘நாங்கள் மட்டுமே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், மற்றவர்களெல்லாம் தீட்டானவர்கள்’ என்ற பழைய பல்லவியையே இன்னும் பாடிக்கொண்டிருக்கமால் God is inclusive, not exclusive! என்பதன் உண்மையை உணர்ந்துகொண்டு அந்நாடு செயல்பட வேண்டும். காரணம், இஸ்ரயேல் நாடு, 'இயேசு பிறந்த புனித பூமி' என்று அனைத்து நாட்டு மக்களாலும் மதித்துப்போற்றப்படும் வேளையில், அந்நாட்டின் தலைவர்களும் மக்களும் பன்முகத்தன்மை கொண்ட இயேசுவின் அணுமுறையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் யூத மக்கள் தங்களின் உயிராகப் போற்றும் ஒரே கடவுளாகிய யாவே கடவுளின் அணுகுமுறையும் இதுதான் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு செயல்படட்டும். தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அதேவேளையில், தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்பதன் பெயரில் ஒட்டுமொத்த மக்களையும் அழித்தொழிக்கும் கொடூரச் செயலை கடவுளே மன்னிக்க மாட்டார் என்பது திண்ணம்!
'எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்' (காண்க எசா 60:1-4) என்ற இறைவார்த்தைகளை ஆழமாகத் தியானித்துப் பார்த்தால் கடவுளின் மனப்பாங்கு என்னவென்பது நமக்குப் புரிந்துவிடும். ஒரு தோட்டத்தில் ஒரே வகையான மலர்கள் மட்டுமே மலர்வதில்லை. மாறாக அங்கே எல்லா வண்ணங்களிலும் மலர்கள் மலர்ந்திருக்கும். அத்தனை மலர்களும் மலர்ந்திருக்கும் அழகுமலர் தோட்டம்தான் ஆண்டவரின் தோட்டம். எந்தப் பூவும் நான்தான் உன்னைவிட அழகு என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. அனைத்தும் இணைந்த நிலையில்தான் இந்தப் பூமியை மகிழ்விக்கின்றன. ஆனால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மானிடர் மட்டும்தான், கடவுளுக்கு எதிராக வேற்றுமையை வளர்த்து, அதற்கு அவரையே தலைவராக்கி மனிதத்தைக் கூறுபோடுகின்றனர்
நமது இந்தியாவில் நடப்பதும் அதுதானே? இங்கே தினம் தினம் கட்டவிழ்த்துவிடப்படும் இந்து மத அடிப்படைவாதம் மானிடரை கூறுபோடத்தானே செய்கிறது? ஒருதாய்ப் பிள்ளைகளாக வாழும் நம்மைச் சிதைத்தழிக்கிறேதே! குஜராத்திலும், ஒடிசாவிலும், நடந்ததும், இன்று மணிப்பூரில் நடந்துகொண்டு இருப்பதும் இந்த வகையான பிரிவினைவாதம்தானே? மதத்தின் பெயரால் மனிதத்தை சாய்ப்பது எவ்விதத்தில் நியாயம். இதையெல்லாம் நாம் உணராத வரையிலும் நமது வழிபாடுகளும், ஆன்மிகச் செயல்பாடுகளும் வெறும் போலியானதாவே இருக்கும். ஆகவே சமுதாய வாழ்வில் மட்டுமல்ல, சமய வாழ்விலும் சமூக நீதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும். இதனை வாழ்ந்து காட்டியவர் நமதாண்டவர் இயேசு. அவரின் வழியில் வாழ்ந்து நாமும் நாம் வாழும் சமுதாயத்தில் சமூக நீதி, சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்வோம். ஒன்றே குலமென்று பாடுவோம்.. ஒருவனே தேவனென்று போற்றுவோம்...
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்