தேடுதல்

படிப்பினைகள் வழங்கும் திருமுழுக்கு யோவான் படிப்பினைகள் வழங்கும் திருமுழுக்கு யோவான்  

திருவருகைக் காலம் 3-ஆம் ஞாயிறு : மகிழ்வை விதைக்கும் மனிதர்களாவோம்!

பயனற்ற பதர்களாக வாழாமல், பயன்தரும் நெல்மணிகளாக வாழ்ந்து நமது அர்ப்பணம் நிறைந்த பணிகளால் இச்சமூகத்தில் வாழும் அனைவருக்கும் மகிழ்வைத் தருவோம்.
திருவருகைக் காலம் 3-ஆம் ஞாயிறு : மகிழ்வை விதைக்கும் மனிதர்களாவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. செப் 3: 14-17;  II. பிலி 4: 4–7; III. லூக்கா 3: 10-18)

இச்சம்பவம் 2018-ஆம் ஆண்டு ஜூலை மதம் 11-ஆம் தேதி நிகழ்ந்தது. தக்கோத்தா நெல்சன் என்ற நபருக்கு 7 குழந்தைகள். கடைசி குழந்தை பிறந்த சில மாதங்களில் தக்கோத்தாவின் மனைவி மோட்டார் வண்டிகளைப் பழுதுபார்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இரண்டு மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்துபோனார். ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாய்த் தவித்த அவர், தனது குழந்தைகளைக் காப்பாற்ற குறைந்தது மூன்று வேலைகளையாவது செய்யவேண்டியிருந்தது.  

இத்தருணத்தில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பு சிலர் ஒன்றுகூடி வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அதாவது, ஏழு குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாக அவதியுற்று வந்த அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசளித்தனர். அவரின் குழந்தைகளைப் பேணிக் காக்கும்பொருட்டு, வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு 1000 டாலர் பணமும், அக்குழந்தைகளுக்குக் குளிர் உடைகள் வாங்குவதற்கு 1000 டாலர் பணமும், அத்துடன் அவருக்கு உதவும் வகையில் காசோலை ஒன்றும் கொடுக்கப்பட்டது. மேலும், தக்கோத்தா நெல்சனுக்கு உதவி புரிந்தவர்கள் சார்பாகப் பேசியவர், “மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார். இம்மாபெரும் உதவியை சற்றும் எதிர்பார்த்திராத தக்கோத்தா நெல்சன், உள்ளம் மகிழ்ந்தவராய் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்தப் பரிசுப் பொருள்களைப் பார்த்த அக்குழந்தைகளும் ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தனர்.  

திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றை மகிழ்ச்சியின் ஞாயிறாகக் கொண்டாடுகிறோம். கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி பிறக்கிறது. உண்மையாகக் கொடுப்பவர்களும் உவகைப் பொங்க கொடுப்பவர்களும் தாங்களும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கிறார்கள். கடவுள் தன்னை முழுவதுமாக இம்மனுக்குலத்திற்குக் கொடுத்தார். இந்தக் கொடுத்தலில்தான் அவர் மகிழ்ச்சி அடைந்தார். கடவுளின் கனிந்த அன்பைப் புறக்கணித்து பாவச் சேற்றில் மூழ்கியதால், இஸ்ரேல் மக்கள் அந்நிய நாடுகளுக்கு கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர் அங்கே அவர்கள் தங்களின் உரிமை வாழ்வை இழந்து அடிமைகளாக நடத்தப்பட்டனர். அப்போது தங்களின் பாவநிலையை உணர்த்த இஸ்ரயேல் மக்கள், தங்களின் மீட்புக்காகக் கடவுளை நோக்கிக் கண்ணீர்க் குரல் எழுப்பினர். அவர்களின் அழுகுரலைக் கேட்ட இறைவன், அவர்கள் மீது பரிவிரக்கம் கொண்டு அவர்களுக்கு விடுதலையும், என்றும் மகிழ்ச்சி தரும் புதுவாழ்வும் அளிப்பதாக வாக்களிக்கின்றார். இதுவே இன்றைய முதல் வாசகத்தின் பின்னணியாக அமைந்துள்ளது. இப்போது அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

“மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி. ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்; இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்”  அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.”

இன்றைய இரண்டாம் வாசகத்தில் “ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்” என்கிறார் புனித பவுலடியார். கொடுப்பதில்தான் நிறைவான மகிழ்ச்சி இருக்கின்றது என்று தொடக்கத்தில் கண்டோம். இறைவன் இம்மனுக்குலத்திற்காகத் தன்னைக் கொடுப்பதில் மகிழ்ந்தார். அன்னை மரியா அந்த மனுமகனைத் தன் கருவில் சுமப்பதிலே மகிழ்ந்தார். புனித வளனார் இறைத்திட்டத்திற்காக மரியாவையும் அந்த மனுமகனையும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதிலே மகிழ்ந்தார். திருமுழுக்கு யோவான், “நான் மெசியா அல்ல, அவரது வழிகளை ஆயத்தப்படுத்த வந்தவன்” என்று தன்னைத் தாழ்த்திக்கொள்வதிலே மகிழ்ந்தார். இவ்வாறு நிறைமகிழ்ச்சி என்பது, பிறருக்காகத் தன்னையே முழுமையாகக் கொடுப்பதிலும், தன் நிலையிலிருந்து விட்டுக்கொடுப்பதிலும், தாழ்ச்சிநிறை உள்ளத்தோடு தன்னை ஏற்றுக்கொவதிலும்தான் அடங்கியிருக்கின்றது.     

இன்றைய நற்செய்தியில் பொதுமக்கள், வரிதண்டுவோர், படைவீரரர் என மூன்று குழுவினர் திருமுழுக்கு யோவானைச் சந்திக்க வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகளை இப்போது வாசிக்கக் கேட்போம். அப்போது, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் மறுமொழியாக, “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” என்றார். வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” என்றார். படைவீரரும் அவரை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” என்றார்.

'திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்' என்ற பகுதி ஒத்தமை நற்செய்திகள் மூன்றிலும் வருகின்றது (காண்க மத் 3:1-12; மாற் 1:1-8; யோவா 1:19-28). இதனடிப்படையில் பார்க்கின்றபோது, இந்நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது. இப்பகுதியில், எளிமையும் நேர்மையும் கொண்டவர்களே கடவுளுக்கு ஏற்புடையோர், திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் மரபில் வந்த ஓர் இறைவாக்கினர், யோவானின் வாழ்வும் திருப்பணிகளும், இயேசுவின் வாழ்க்கை, திருப்பணிகள், பாடுகள், மரணம், மற்றும் உயிர்ப்பும் உலக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றவை என்ற மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைக்கின்றார் லூக்கா நற்செய்தியாளர். திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற வந்தவர்களை மக்கள் என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுகின்றார் லூக்கா. ஆனால் மக்களுடன் பரிசேயர், சதுசேயரில் பலர் அவரிடம் திருமுழுக்குப் பெற வந்ததாகக் கூறுகின்றார் மத்தேயு நற்செய்தியாளர் (மத் 3:7). யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர் என்று மாற்கு குறிப்பிடுகின்றார் (மாற் 1:5). ஆனால் திருமுழுக்கு யோவான் இதுகுறித்தெல்லாம் பேசாது அவர் மெசியாவா இல்லையா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளிப்பதாக உரைக்கின்றார் யோவான் நற்செய்தியாளர். ஆனால் ஒத்தமை நற்செய்தியாளர் மூவருமே திருமுழுக்கு யோவான் மக்களை மனமாற்றத்திற்கு அழைப்பதாக எடுத்துக்காட்டுகின்றனர். ஆனால் மத்தேயும் லூக்காவும் அவர் மனமாற்றத்திற்கு அழைப்பது மட்டுமன்றி இறுதிநாள் தீர்ப்புக் குறித்தும் பேசுகின்றனர். பொதுமக்கள், வரிதண்டுவோர், படைவீரரர் ஆகிய மூன்று பிரிவினர் திருமுழுக்கு யோவானிடம் கேள்வி எழுப்புவதாக கூறும் லூக்கா, பரிசேயர் சதுசேயர் ஆகியோர் அங்கே இருப்பதாகக் காட்டவில்லை.

இம்மூன்று பிரிவினரும் மனமாற்றம் பெற வேண்டும் என்று திருமுழுக்கு யோவான் வலியுறுத்துவதாகக் குறிப்பிடும் லூக்கா, தான் மெசியா இல்லை என்று திருமுழுக்கு யோவான் உரைப்பதையும் எடுத்துக்காட்டுகின்றார். ‘அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால், என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்” என்றார் எனவும், மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்’ எனவும் இன்றைய நற்செய்தியில் எடுத்துக்காட்டுகிறார் லூக்கா.

மனமாற்றத்தைத் தொடர்ந்து இறுதித் தீர்ப்புக் குறித்து எச்சரிக்கும் திருமுழுக்கு யோவான், யாரெல்லாம் உண்மையான மெசியாவை ஏற்றுக்கொண்டு அவர் காட்டும் வழியில் வாழவில்லையோ, அவர்கள் அனைவரும் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள தகுதியற்றவர்கள் என எடுத்துக்காட்டுகின்றார். இங்கே பதர் என்றதொரு வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. பதர் என்பது என்ன? உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய், பயனின்மை என்று பல்வேறு பொருள்களில் அழைக்கப்படுகிறது. பதர் எப்படி உருவாகிறது என்பதை நாம் அறிவோம். அதாவது, வயலில் நாற்று நடப்பட்டவுடன் அது வளர்ந்து கதிராகிறது. அப்படி கதிராகும்போது அவற்றில் சில உள்ளே நெல்மணிகள் இல்லாமல் வளர்ச்சியுறும். இறுதியில் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு களத்தில் அடித்து குவிக்கப்படும், பின்னர் முரம்கொண்டு அவற்றைத் தூற்றும்போது பதர்கள் ஒருபுறமும், நெல்மணிகள் ஒருபுறமும் குவிந்துவிடும். இறுதியில் நெல்மணிகள் மூட்டைகளில் கட்டப்பட்டு வீட்டிற்குக் கொண்டுவரப்படும். பதர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டு எரிக்கப்படும். காரணம், அவற்றை மாடுகள்கூட தின்னாது. இதுதான் நெல் அறுவடையின்போது இயல்பாக நடப்பது. இதனடிப்படையில் பார்க்கின்றபோது, உலகத்தின் இறுதியில் நடைபெறும் அறுவடையின்போதும் (இறுதித் தீர்ப்பு) இப்படித்தான் நிகழும் என்பதை திருமுழுக்கு யோவான் எடுத்துக்காட்டுகின்றார். பதர் என்பது பயனற்றது என்பதுபோல, பதர்போன்ற மனிதரும் பயனற்றவன்; பயனற்றவள்; வெற்றாள்; வெட்டி, குற்றம் என்ற சொற்களால் அர்த்தப்படுத்தப்படுகின்றனர். அப்படியென்றால், கடவுளால் இந்த உலகம் என்னும் வயலில் விதைக்கப்படும் மனிதரும் நெற்கதிர்கதிகளைப் போல செழித்து வளர்ந்து நெல்மணிகளாகப் பயன்தர வேண்டும். இவர்கள்தாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வர். ஆனால் தீயவழியில் வளர்ந்து கடவுள் விரும்பாத பயனற்ற வாழ்வை வாழ்பவர்கள் இறுதியில் பதர்களாக கூட்டிச்சேர்க்கப்பட்டு அழியாத நரக வாழ்விற்குத் தள்ளப்படுவர். இதனை விளக்கும் விதமாகவே இந்தப் பதர் என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோம்.

அன்பர்களே, இங்கே நான் ஒரு கற்பனை செய்து பார்க்கிறேன். நமது இந்தியச் சூழலில் ஒருவேளை திருமுழுக்கு யோவான் நம் மத்தியிலே தோன்றுகிறார் என வைத்துக்கொள்வோம். நாம் அவரிடத்திலே போய், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டால் அவருடைய பதில் என்னவாக இருக்கும்? “நீங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், இலஞ்சம் கொடுக்காதீர்கள், உங்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் மாய வலையில் வீழ்ந்துவிடாதீர்கள், விளம்பரங்களுக்கும் நுகர்வு எண்ணங்களுக்கும் அடிமையாகிவிடாதீர்கள், உங்கள் அண்டை வீட்டாரின் தேவைகளைக் கவனியுங்கள், மிதமிஞ்சிய செல்வப்பற்றிலிருந்து விடுபடுங்கள், உங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், உங்களின் வாழ்விடமாகிய இந்தப் பூமியை பாதுகாத்திடுங்கள்” என்று தொடங்கி இன்னும் என்னவெல்லாமோ சொல்லியிருப்பார். அவ்வாறே நமது ஆட்சியாளர்களைப் பார்த்து,  “GST வரி என்பதன் பெயரில் மக்களை ஒடுக்காதீர்கள், நாடு முழுவதும் எண்ணிலடங்கா சுங்கச் சாவடிகளை அமைத்து மக்களின் பணத்தைக் கொள்ளையடிகாதீர்கள், முதலில் நீங்கள் ஊழல் செய்வதை நிறுத்துங்கள், உங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மக்களை ஒடுக்காதீர்கள், உங்களின் சுயநலன்களுக்காக மதக்கலவரங்களைத் தூண்டி மக்களைப் பிரிக்காதீர்கள், மதத்தின் பெயரால் போர்களைத் தூண்டாதீர்கள், சமூகத்தில் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு முன்னுரிமைக் கொடுங்கள், சட்டத்தை எல்லாருக்கும் சமமாக்குங்கள்” என்று கூறியிருப்பார். அவ்வாறே படைவீரர்களும், காவலர்களும் அவரிடம் கேட்டிருந்தால், “வேலியே பயிரை மேய்ந்த கதையாக குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டிய நீங்களே குற்றச் செயல்களில் ஈடுபடாதீர்கள், மனித உரிமையை மதியுங்கள், கைதிகளை மாண்புடன் நடத்துங்கள், குறிப்பாக, பெண் கைதிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள்” என்று கண்டிப்பாகக் கூறியிருப்பார். குறிப்பாக, நமது நாட்டின் எதிர்காலமாக விளங்கும் நமது இளையோர் அவரிடம் கேட்டிருந்தால், “இலட்சியமுடன் வாழுங்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடாதீர்கள், அலைபேசியை அதிகம் பயன்படுத்தாதீரகள், உங்களுக்கான தலைவர்களை திரையுலகில் தேடாதீர்கள், இரசிகர் மன்றங்கள் அமைத்து உங்கள் பொன்னான வாழ்வை இழந்துவிடாதீர்கள், நிழலை நிஜமென்று நம்பாதீர்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குங்கள், பெற்றோரை எப்போதும் மதிக்கத் தவறாதீர்கள் என்று பல பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கியிருப்பார். ஆக, சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை நேரிய வழியில் செய்யும்போதுதான் தங்களையும், பிறரையும், ஒட்டுமொத்த இந்தச் சமூகத்தையும் மகிழ்வடையச் செய்ய முடியும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்காட்டி இருப்பார்.

ஆகவே, பயனற்ற பதர்களாக வாழாமல், பயன்தரும் நெல்மணிகளாக வாழ்ந்து நமது அர்ப்பணம் நிறைந்த பணிகளால் இச்சமூகத்தில் வாழும் அனைவருக்கும் மகிழ்வைத் தருவோம். இறுதித் தீர்ப்பின்போது, இறைவன் நமக்கு அருளவிருக்கும் நிலைவாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2024, 12:59