தேடுதல்

திருக்குடும்பம் திருக்குடும்பம்  

திருக்குடும்பப் பெருவிழா : திருக்குடும்பம் எதிர்நோக்கின் அடையாளம்!

'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் யூபிலி ஆண்டைத் தொடங்கியிருக்கிற நாம், திருக்குடும்பம் பயணித்த அன்பு, ஒன்றிப்பு, இறைநம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பாதையிலே நமது குடும்பங்களையும் பயணிக்கச் செய்வோம்.
திருக்குடும்பப் பெருவிழா : திருக்குடும்பம் எதிர்நோக்கின் அடையாளம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்     I. 1 சாமு 1:20-22, 24-28      II. 1 யோவா 3:1-2,21-24     III. லூக் 2:41-52)

அன்னையாம் திருஅவை இன்று திருக்குடும்பபெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய வாசகங்கள் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும், அது பேணிக்காக்கவேண்டிய உன்னதமான மதிப்பீடுகளையும் நமக்கு எடுத்துகாட்டுகின்றன. இதன் அடிப்படையில் நமது சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

குடும்பத்தின் பொதுவான கூறுகள்

குடும்பம் தான் சமுதாயம் மற்றும் திருஅவையின் அடிப்படை அலகு. ஒரு நல்ல குடும்பம். சமூகத்தின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது குடும்பம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒரு குழந்தை பிறந்து அது வளர்ந்து, படித்து தனக்கான ஒரு துணையைத் தேடி, திருமணம் செய்து, திரும்பவும் குழந்தைகளைப் பெறுவது என அனைத்து செயல்பாட்டிலும் குடும்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து அழகிய குடும்பத்தை உருவாக்குகின்றனர். இதனைத் தொடர்ந்து உறவுகள் ஒன்றிணைந்து கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் என இரண்டு அலகுகளாகப் பிரிகிறது. கணவன் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் யாவரும் இணைந்து வாழ்வது கூட்டுக் குடும்பம். கணவனும் மனைவியும் தம் குழந்தைகளுடன் மட்டும் வாழ்வது தனிக்குடும்பம் எனப்படுகிறது. அனைத்துலக மனித உரிமைகள் ஆவணத்தின் 16(3)-வது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்றும், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது" என்று உரைக்கிறது. பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் பார்க்கும்போது, குடும்பத்தின் முக்கியமான பணிகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தப் பணி என்பது, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், நெறிமுறைசார் மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணிகாக்கப்படுகிறது. அதேவேளையில், புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே ஒரு குடும்பத்தின் முக்கியமான பணியாக இருந்துவிட முடியாது. மாறாக, இரு நபர்களுக்க்கு இடையே அதாவது, கணவன்-மனைவிக்கு இடையே  பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஓர் ஆக்கபூர்வமான அமைப்பை உருவாக்குவதும் அதன் கடமையாக அமைகின்றது. மேலும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பம் என்பது, குடும்ப அமைப்புக்கான ஓர் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பம் என்பது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது. திருஅவையில் திருக்குடும்ப விழா

நமது திருஅவையில் திருகுடும்பத் திருவிழா நீண்ட நெடியதொரு வரலாற்றைக் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவறச் சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893-ஆம் ஆண்டு, திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் இத்திருவிழா, திருஅவையின் வழிபாட்டுக் காலத்தில் இடம்பெற்றது. ஒரு சில ஆண்டுகளில், இவ்விழா திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921-ஆம் ஆண்டு திருத்தந்தை 11-ஆம் பயஸ் அவர்களால், இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர்தான் இவ்விணைப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 1918-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த முதல் உலகப்போரினால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிதைந்து போயின. கணவனையோ அல்லது மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்திலும் அவநம்பிக்கையிலும் மூழ்கின.  ஆகவே, அக்குடும்பங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி குடும்பங்களை கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது. அதனைத் தொடர்ந்து 1939-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரை கிட்லர் தலைமையில் இடம்பெற்ற இரண்டாம் உலகப் போரும் பல இலட்சம் குடும்பங்களை சிதைத்தழித்தது. அப்போதும் உடைந்த குடும்பங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை திருஅவைக்கு ஏற்பட்டது. இதனை மனதில் கொண்டு 1962-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை திருஅவை மீண்டும் புதுப்பித்தது. 1960-களில் நிலவிய உலகின் சூழல்தான் இதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்  போர்களில் கட்டிடங்களும் இயற்கை வளங்களும் சிதைக்கப்பட்டதைக் காட்டிலும் மனிதக் குடும்பங்கள்தாம் அதிகமாக சிதைந்தழிக்கப்பட்டன என்று கூறினால் அது மிகையாகாது.

இதுமட்டுமன்றி அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்றுவரும் உக்ரைன், இஸ்ரேல் மியான்மார் மற்றும் சிரியா உள்ளிட்ட பல்வேறு போர்களாலும், மோதல்களாலும், கலவரங்களாலும் இன்றும் குடும்பங்கள் தொடர்ந்து சிதைத்தழிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்றாம் உலகப்போர் ஆங்காங்கே பகுதிப் பகுதியாக நிகழ்ந்து வருவதாக அடிக்கடி தனது உரைகளில் குறிப்பிடுகின்றார். ஆகவே, இத்தருணத்தில் திருக்குடும்பத்தின் முன்மாதிரியை எடுத்துக்காட்டி நம்பிக்கையாலும், எதிர்நோக்காலும் கிறிஸ்தவக் குடும்பங்களைத் திருக்குடும்பங்களாக மாற்றவேண்டிய கடமையும் பொறுப்பும் நம் தாய்த்திருஅவைக்கு உள்ளது. காரணம், திருஅவைதான் அனைத்துக் குடும்பங்களுக்கும் தாய்க்குடும்பம்.

குடும்பமாக வாழும் மூவொரு கடவுள்

குடும்பம் என்ற கருத்து முதலில் மூவொரு கடவுளில் வெளிப்படுகின்றது. தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் ஒரு குடும்பமாக இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை கொண்ட குடும்பமாக இருக்கின்றது. அதனால்தான் மூவொரு கடவுளை எடுத்துக்காட்ட ஒன்றுக்கொன்று சமமாக இருக்கின்ற முக்கோணத்தை அடையாளப்படுத்துகிறோம். ஆக, தன்னிலே ஒரு குடும்பமாக வாழும் கடவுள் அதனைத் தனது படைப்பிலும் உருவாக்குகிறார். ஆதாம்-ஏவாள் குடும்பம், நோவா குடும்பம், அதனைத் தொடர்ந்து நமது முதுபெரும் தந்தையர்களான ஆபிராம், ஈசாக் மற்றும் யாக்கோபு குடும்பங்கள் என அதன் பட்டியல் நீள்கிறது. புதிய ஏற்பாட்டில் சக்கரியா குடும்பம் எடுத்துக்காட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து யோசேப்பு-மரியா-இயேசுவைக் கொண்ட திருக்குடும்பம். சிறப்பாக, மனித குலத்தை மீட்க மனுவுருவெடுக்கும் நிலையிலும் கூட யோசேப்பையும் மரியாவையும் இணைத்து அவர்களை ஒரு குடும்பமாக உருவாக்கி, அதில் பிறப்பெடுக்கின்றார் கடவுள். ஆகவே, கடவுளைப் பொறுத்தமட்டில், குடும்ப உறவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றார். குறிப்பாக, மீட்பின் வரலாற்றில் குடும்பம் என்ற கருத்து எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நற்செய்தியாளர்கள் மத்தேயுவும் (காண்க. மத் 1:1-17, லூக்காவும் (காண்க லூக் 3:23-38) கூறும் 'இயேசுவின் மூதாதையர் பட்டியல்' என்ற பகுதியிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்.

திருக்குடும்பம் தரும் பாடம்

இதன் பின்னணியில், யோசேப்பு-மரியா-இயேசு வாழ்ந்த திருகுடும்பத்தை நம் கண்முன் நிறுத்தி, அக்குடும்பம் எடுத்துக்காட்டும் வாழ்வியல் நெறிமுறைகளையும், விழுமியங்களையும், அறச்செயல்களையும் நாமும் பின்பற்றி வாழவேண்டுமென தாய்திருஅவை நமக்கு இந்நாளில் அறிவுறுத்துகின்றது. திருக்குடும்பம் எவ்வாறு இறைநம்பிக்கையிலும், இன்பத்திலும், துன்பத்திலும், சவால்களைச் சந்திப்பதிலும், அதனை வென்றுகாட்டுவதிலும் முன்மாதிரியாக இருக்கின்றது என்பதாலேயே அதனைப் பின்பற்ற நம்மையும் அழைக்கிறது திருஅவை.

ஆங்கிலத்தில் சொல்வதானால் திருக்குடும்பத்தில் நான்குவிதமான T இருக்கின்றன. அவை : Time, Trust, Togetherness and Touch. அதாவது, நேரம், நம்பகத்தன்மை, ஒன்றித்திருத்தல், தொடுதல் ஆகிய நான்கு தலையாயப் பண்புகள் அத்திருக்குடும்பத்தில் செழித்தோங்கின. நேரம் (Time) என்பது, குடும்பத்தில் உள்ள கணவன்-மனைவி, பிள்ளைகள் யாவரும் ஒருவரை ஒருவர் சொல்வதைக் கேட்கவும், உரையாடவும், உறவாடவும், பேசி சிரித்து மகிழவும் போதுமான அளவிற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும், உண்மை (Trust) என்பது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கம் உள்ளவர்களாகவும், பிள்ளைகள் பெற்றோருக்கு உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், ஒன்றித்திருத்தல் (Togetherness) என்பது இன்பத்திலும் துன்பத்திலும், உடல்நலத்தில் நோயிலும், வாழ்வின் எல்லாச் சூழ்நிலையும் பெற்றோர்கள் பிள்ளைகளோடும், பிள்ளைகள் பெற்றோரோடும் ஒன்றித்திருக்க வேண்டும் என்பதையும், இறுதியாக தொடுதல் (Touch) என்பது, ‘உனக்காக நான் இருக்கிறேன், எனக்காக நீ இருக்கிறாய், நமக்காகப் பிள்ளைகள் இருக்கின்றனர், பிள்ளைகளுக்காக நாம் இருக்கின்றோம்’ என்று உணவுப்பூர்வமாக ஒன்றித்திருப்பதைக் குறிக்கின்றது. ஆக, இந்த நான்கு பண்புகளும் ஓர் உறுதியான மற்றும் இனிமையான குடும்பத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

இவைகள் இல்லாத குடும்பங்கள்தாம் இன்று சிறு சிறு பிரச்னைகளுக்காகக் கூட விவகாரத்துக் கேட்டு நீதிமன்றங்களின் படியேறி நிற்கின்றன. ஆக, வெளியில் நடக்கும் போர்கள் மற்றும் மோதல்களால் மட்டுமல்ல, ஒவ்வொருவர் உள்ளத்திலும் நடக்கும் சுயநலப் போர்கள் மற்றும் மோதல்களாலும் நமது குடும்பங்கள் சிதைந்தழிகின்றன என்பதையும் நம் மனதில் நிறுத்துவோம். குறிப்பாக பேராசை, மிதமிஞ்சிய செல்வப்பற்று, நம்பகத்தன்மையின்மை, ஒப்பிட்டுப் பார்த்தல், புரிந்துகொள்ளாமை, ஏற்றுக்கொள்ளாமை, விட்டுக்கொடாமை, ஒருவர் ஒருவர்மீது வீண்பழி சுமத்துவது, மறுதலிப்பது, காட்டிக்கொடுப்பது, திருமணத்திற்குப் புறம்பான உறவுகளை மேற்கொள்வது (கள்ளக்காதல்) ஆகியவை இன்றைய நம் குடும்பங்களை அழித்தொழிக்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன. ஆனால் அதேவேளையில், இந்தத் தீயகுணங்களை எல்லாம் அழித்து அழகானதொரு திருக்குடும்பத்தைக் கட்டியெழுப்பும் வலிமை ஒன்றுக்குத்தான் இருக்கின்றது. அதுதான் ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் தூய அன்பு. அதனால்தான், "அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்" (காண்க 1 கொரி 13: 5-7) என்று புனித பவுலடியார் அன்பின் வலிமையைக் குறித்துக் குறிப்பிடுகின்றார்.

குடும்பத்தில் நமது செயல்பாடுகள்

காதலித்து திருமணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போடுவதுண்டு பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு. அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு. சந்ததி இருக்கும் குடும்பங்கள் உணவின்றி வறுமையில் வாடுவதும் உண்டு. பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை. ஆக, அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் தாம் மட்டும் தான் துயரப்படுவது போலவும் எண்ணும் எண்ணம் வேண்டாம். கணவர் வீட்டுக்கு வரும்போதே பிரச்சனையோடு வரக் கூடாது. மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வரவேற்க கூடாது. கணவர் எதையும் அடித்துச் சொல்லக் கூடாது, மனைவி எதையும் இடித்துப் பேசக் கூடாது. “நீங்க வாங்கின காய்கறி 'படு மோசம்' “என்று மனைவி சொன்னால்..”எந்த நாய் சொன்னது?” என்று கணவன் பதில் சொன்னால் தான் அங்குப் பிரச்சனையே! அதற்குப் பதிலாக, தன் தவறை ஏற்றுக்கொண்டு, ”சரி என்மேலதான் தப்பு... இனி பார்த்து வாங்குகிறேன்” என்று சொல்லிவிட்டால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். “நீ செய்த சாப்பாடு சகிக்கலை” என்று கணவன் சொன்னால், “எனக்கு தெரிந்த இலட்சணம் இவ்ளோதான்... வேணுன்னா நீங்க உங்க அம்மா வீட்டுக்குப் போய் சாப்பிடுங்க” என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் வெடிக்கும். மாறாக, ”எனக்கு இன்றைக்கு உடம்பு முடில.. அதனால நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்” என்று சொன்னால் அன்பு அங்கு வெள்ளமென பாய்ந்தோடும். அவ்வாறே, மனைவி புது புடவை உடுத்தினால், ”இந்தப் புடவை உனக்கு நல்லா இருக்கும்மா.. இன்றைக்கு ரொம்பவும் நீ அழகா இருக்கே” என்று சொல்லும்போது, அது விலைகுறைந்த புடவையாக இருந்தாலும் அந்த அன்புச் சொல்லால் அது விலை உயர்ந்ததாக மாறுகிறது. மேலும் கணவன் வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பும்போது. “ஏன் இப்படி வியர்த்திருக்கிறது... ரொம்ப வேலையா...” என்று அக்கறையோடு மனைவி விசாரிக்கும்போது அங்கே, வியர்வைத்துளிகள் முத்துக்களாக மாறுகின்றன.

இதுமட்டுமன்றி, மனைவியைக் கணவன் “அம்மா” என்று அழைக்கும்போதும், கணவனை மனைவி “அப்பா” என்று அழைக்கும்போதும் அவர்களுக்குள் புனித உறவு ஊற்றெடுக்கிறது. கணவனும் மனைவியும் தம் மாமனார் மாமியாரைத் தங்களின் சொந்தப் பெற்றோரைப் போன்று அன்புகூர்ந்து மதித்துப் போற்றும்போது, அக்குடும்பம் நிச்சயம் மகிழ்ச்சியில் திளைக்கும். குறிப்பாக, கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் மனக்கசப்புகளை அன்று தூங்கப் போவதற்கு முன்பாகவே சரிசெய்துவிட வேண்டும். அதனை அடுத்த நாளும் வளரவிடக் கூடாது. மிகவும் குறிப்பாக, ஒருவர் ஒருவருக்கிடையே மனத்தாங்கலோ அல்லது வேறு பிரச்சனைகளோ ஏற்படும்போது, இருவரும் வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். ஏனென்றால் வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் பின்னால் அவற்றை அள்ள முடியாது. அதுமட்டுமன்றி, அவைகள் இருவர் மனங்களையும் அளவுக்கு அதிகமாகக் காயப்படுத்திவிடும். மேலும் குடும்பத்தை குலைக்கும் காரணிகளில் கோபமும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதுதான் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்த தூண்டும். ஆகவே, ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும். "என் மனைவிதானே சொன்னாள்... சொல்லிட்டுப் போகட்டும்" என்று கணவனும், "என் கணவன்தானே சொன்னார்.. சொல்லிட்டுப் போகட்டும்" என்று மனைவியும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். குடும்பத்தில் ஒருவர் செய்த தவற்றை இன்னொருவர் மன்னித்து ஏற்றுக்கொள்ளும்போது அந்தக் குடும்பத்தில் பேரன்பும் பெருமகிழ்வும் பொங்கிப்பாயும் என்பது உறுதி. நமது யோசேப்பும் அன்னை மரியாவும் உள்ளும் புறமும் குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு பயணித்த அத்தனை வேளைகளிலும் நம் மேற்சொன்ன அனைத்தையும் கடந்து வந்தவர்கள்தாம். அதனால்தான் அவர்களை திருக்குடும்பத்தின் தலைவர்களாகப் போற்றுகின்றோம். அவர்கள் வளர்த்த குடும்பம் அன்பு, ஒன்றிப்பு, இறைநம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் திருக்குடும்பமாக விளங்கியது.

ஆகவே, 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் யூபிலி ஆண்டைத் தொடங்கியிருக்கிற நாம், திருக்குடும்பம் பயணித்த அன்பு, ஒன்றிப்பு, இறைநம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பாதையிலே நமது குடும்பங்களையும் பயணிக்கச் செய்வோம். அதற்கான இறையருளைப் பெற்று மகிழ இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 December 2024, 14:05