தேடுதல்

மியான்மார் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5,864 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக இராணுவம் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி மியான்மார் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5,864 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக இராணுவம் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி   (ANSA)

2025-ஆம் ஆண்டு மியான்மாரில் அமைதி மலரும் ஆண்டாக இருக்கும்!

மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் போ அவர்கள், ஏறக்குறைய நான்கு ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நாட்டில் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகலாவியத் திருஅவை எதிர்நோக்கின் யூபிலியைத் தொடங்கியுள்ள இவ்வேளை, மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் சார்லஸ் மவுங் போ அவர்கள், ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் அழிக்கப்பட்டுள்ள நாட்டில், பிறந்துள்ள புத்தாண்டு அமைதியைக் கொண்டுவரும் என்று தனது இதயப்பூர்வமான நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

யூக்கான் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செய்தி ஒன்றில், கடந்த ஆண்டுகளில் நல்லிணக்கத்திற்காக பலமுறை வேண்டுகோள் விடுத்த கர்தினால் போ அவர்கள், மியான்மாரின் மாண்பையும் நம்பிக்கையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு பார்வையையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும் வன்முறைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளைஞர்கள் ‘அமைதியின் சிற்பிகள்’ என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், நாடு அவர்களுக்கு வாய்ப்புகளையும் கல்வியையும் வழங்குவதற்கான அவசரத் தேவையையும்  வலியுறுத்தியுள்ள அதேவேளை, அவ்வாறு செய்வதன் வழியாக, அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, நமது நாட்டின் ஆன்மாவையும் மீண்டும் கட்டியெழுப்ப அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

அமைதிக்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை பரிந்துரை செய்துள்ள அவர், நல்லிணக்கம் என்பது ஒரு செயல்முறை மட்டுமல்ல; அது ஒரு தேர்வு-வலிக்கு அப்பால் அன்புகூர்வது, அழிவுக்கு அப்பால் கட்டமைப்பது என்றும் விளக்கமளித்துள்ளார்.

நீதி மற்றும் மனித மாண்பை நிலைநாட்டுவதும் அமைதிக்கு வழிவகுக்கும், என்றும், உண்மையான அமைதி என்பது போரற்றச் சூழல், இது அனைவருக்குமான நீதி, பாதுகாப்பு மற்றும் மாண்பின் இருப்பை உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்துள்ள கர்தினால், இந்த அமைதி நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது, இரக்கத்தால் வளர்க்கப்படுகிறது மற்றும் நம்பிக்கையால் நிலைத்திருக்கிறது என்றும் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2025, 13:56