சிரியா கிறிஸ்தவர்கள் நாட்டிற்கு திரும்பிவர கர்தினால் அழைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அண்மையில் சிரியா நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றம் பல்வேறு அச்சங்களையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றபோதிலும், இம்மாற்றங்கள் ஒரு நம்பிக்கை சீர்குலைவாகத் தெரிவதாகவும், நாட்டைக் கட்டியெழுப்புவதில் சிரியா கிறிஸ்தவர்களும் அனைத்துலக சமுதாயமும் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார் கர்தினால் மாரியோ செனாரி.
சிரியாவின் அண்மை அரசியல் மாற்றங்கள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டிற்கான திருப்பீடத் தூதுவர் கர்தினால் செனாரி அவர்கள், 50 ஆண்டுகளான சர்வதிகார ஆட்சி, மற்றும் 13 ஆண்டுகளான இரத்தம் சிந்தும் உள்நாட்டுப்போர் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்டிருந்த சிரியா நாட்டில், புதிய ஆட்சியாளர்களால் புதிய நம்பிக்கைகளை விதைக்க முடியுமா என்ற அச்சத்துடன் கூடிய நம்பிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.
சிரியாவின் புதிய தலைவர் Ahmed al-Sharaa அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதியன்று சிரிய கிறிஸ்தவர்களைச் சந்தித்து உரையாடல் நடத்தியது குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார் கர்தினால் செனாரி.
அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து நல்ல புரிந்துகொள்ளுதலை பார்க்க முடிகின்றபோதிலும், எண்ணங்கள் செயலாக்கம் பெறுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும் என மேலும் கூறினார் கர்தினால்.
நாட்டிற்கு வெளியேயிருக்கும் சிரியா கிறிஸ்தவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிவந்து மனித உரிமைகள், சுதந்திரம், அனைவருக்குமான மதிப்பு என்ற மதிப்பீடுகளுக்கு ஊக்கமளித்து நாட்டை கட்டியெழுப்புவதில் உதவ வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் சிரியாவுக்கான திருப்பீடத்தூதுவர், கர்தினால் செனாரி.
கைதிகளின் விடுதலை, பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுதல், பொருளாதாரத்தையும் உள்கட்டமைப்புகளையும் கட்டியெழுப்புதல் போன்றவைகளையும் வலியுறுத்தினார் கர்தினால்.
சிரியாவிலிருந்து வரும் தகவல்களின்படி, அந்நாட்டில் 1கோடியே 20 இலட்சம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், மற்றும், 1 கோடியே 60 இலட்சம் பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்து உள்ளனர்.
சிரியாவிலிருந்து மக்கள் அகதிகளாக, இலெபனான், ஜோர்டன், துருக்கி, ஈராக், எகிப்து மற்றும் வட ஆப்ரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்