ஹாங்காங் கர்தினால் : உணவை வீணாக்குவதை தவிர்ப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
விருந்துபசார விழாக்களில் உணவை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் உணவை வீணாக்குவது என்பது மனித உரிமைகளை மதிப்பதையும் இறைவனின் படைப்பின் மீதான அக்கறையையும் மீறுவதாகும் என உரைத்தார் ஹாங்காங் கர்தினால் Stephen Chow.
அண்மை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் தான் விருந்தினராக அழைக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் அவர்கள், அங்கு உணவு வீணாக்கப்பட்டதை கண்டது மிகுந்த வருத்தம் தருவதாக இருந்தது என்றுரைத்தார்.
பல இடங்களில் உணவு சுவைக்கப்படாமலேயே குப்பைக்குச் சென்றதை காண முடிந்தது என்றும், தேவைக்கதிகமாக உணவு பரிமாறப்பட்டதால் உணவுத் தட்டுகளிலேயே பெருமளவில் மிச்சமானதைக் கண்டு மனம் வருந்தியதாகவும் கூறினார் கர்தினால்.
நம்முடைய அனைத்துச் சலுகைகளும் கடமையுணர்வுடன் ஒன்றித்துள்ளன என்பதை உணர்ந்தவர்களாக இறைவனின் படைப்பு குறித்த அக்கறையுள்ளவர்களாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் கர்தினால் Stephen Chow.
நம்முடைய தனிப்பட்ட உரிமைகளுக்கு மட்டும் நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஏழைகளின் மனித மாண்பை நசுக்குபவர்களாக செயல்படும் நிலை உருவாகிவிடும் என்ற அச்சத்தையும் வெளியிட்டார் கர்தினால்.
எதையும் பொறுப்பற்றமுறையில் அனுபவிப்பது, அதிலும் குறிப்பாக உணவைப் பொறுத்தவரையில் நடத்துவது, நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பசுமை சூழல் மண்டலத்தையும் காயப்படுத்திவிடும் என மேலும் கூறினார் கர்தினால் ஸ்டீபன் சொவ்.
வருங்கால விருந்துகளில் நாம் பொறுப்புடன் செயல்பட்டு இறைவன் படைப்புக்கும், நம் உடன்வாழ் மனிதர்களுக்கும் உரிய மரியாதையை வழங்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் முன்வைத்தார் ஹங்காங் கர்தினால்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்