தடம் தந்த தகைமை – உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டை
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?... முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும். (மத் 7:3,5)
பெரும்பாலான மனிதருக்கும் ஒரு குணமுண்டு. என்ன தெரியுமா? தான் நினைப்பதும் சொல்வதும் செய்வதுமே சரி என்பது. 'ஒவ்வொருவரும் தன்னை யோக்கியர் எனக் கருதுவதைப் போன்ற பெரிய அயோக்கியத்தனம் வேறில்லை' என்பார் குருநானக். அதுவும் தனக்குப் பிடிக்காதவர் ஏதேனும் ஒரு சிறு தவறு செய்தால் அதை ஊருக்கும் உலகிற்கும் கொட்டமிட்டுக் குளிர்காயும் கூட்டத்திற்கு இச்சொல் ஒரு சவுக்கடி.
சட்டை என்றொரு குறுநாடகம். மாமாவும் மருமகனும் சந்திப்பு. மருமகன் மாமாவைப் பார்த்து நலம் விசாரித்து, குடும்பக் கதை பேசி, 'இப்போ வெள்ளையும் சொள்ளையுமா எங்கே கிளம்பிற்றீங்க' எனக் கேட்க, 'என் கூடால படிச்சவர் மக கல்யாணத்திற்குப் போறேன்' என மாமா சொன்னதும், சட்டைக் காலர் பக்கத்துல கடுகளவு உள்ள கரும்புள்ளியைச் சுட்டிக் காட்டி, 10 நிமிடமாகக் குடும்ப கவுரமெல்லாம் சொல்லி திரும்பிப் போகச் செய்கிறார் மருமகன். 'ஆமா… நீங்க எங்க?' என மாமா கேட்க, 'நான் என் நண்பர் திருமணத்திற்கு…' எனச் சொல்லித் திரும்புகையில் மருமகன் சட்டையின் பின்புறம் மேலிருந்து கீழாகக் கிழிந்தே கிடந்தது. தானும் குறையுள்ளவர் என்பதை உணர்ந்தவரே நன்மன மனிதர்.
இறைவா! எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஆய்ந்திடவும், என் தவறுகளை ஏற்கவும், அவற்றிலிருந்து விடுபட்டு வாழவும் வழிகாட்டும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்