தேடுதல்

யோர்தான் நதி யோர்தான் நதி  (ANSA)

இயேசுவின் திருமுழுக்கு ஆலயம் ஜனவரி 10ஆம் தேதி ஜோர்டனில் திறப்பு

இயேசுவின் திருமுழுக்கு ஆலயம் கட்டப்பட்டுள்ள பகுதியில் இயேசுவின் திருமுழுக்கு இடம்பெற்ற இரண்டாயிரமாம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2030ல் இடம்பெற உள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புனித திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு திருமுழுக்குப்பெற்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஆலயம் ஜனவரி 10ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தலைமையில் திறக்கப்பட உள்ள இந்த ஆலயம் Wadi al-Kharrar என்ற இடத்தில் யோர்தான் நதிக்கரையில் மன்னர் இரண்டாம் அப்துல்லா நன்கொடையாக வழங்கிய இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பிரதிநிதியாக திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் கலந்துகொள்ளும் இந்த ஆலயத் திறப்புவிழா நிகழ்ச்சியில் புனித பூமியிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 7000க்கும் மேற்பட்ட திருப்பயணிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயேசு திருமுழுக்குப் பெற்ற இடத்தில் கட்டப்பட்ட சிறிய ஆலயங்களை பிரான்சிஸ்கன் துறவுசபை சகோதரர் Michele Piccirillo அவர்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இவ்வாலயம் எழுப்பப்பட்டுள்ளது.

மதங்களிடையே இணக்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் ஜோர்டன் அரசகுடும்பத்தின் முயற்சியின் பேரில் ஜோர்டன் மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் தங்களுக்கென தனித்தனி கோவில்களை கட்டவுள்ளன.

இயேசு கிறிஸ்து திருமுழுக்குப் பெற்ற இந்த இடத்தை இரண்டாயிரமாம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் சென்று பார்வையிட்டார். கத்தோலிக்க ஆலயத்தின் அடிக்கல்லை 2009ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஆசீர்வதித்து நாட்ட, 2014ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகளைச் சென்றுப் பார்வையிட்டார்.

இந்த ஆலயம் கட்டியுள்ள பகுதியில் இயேசுவின் திருமுழுக்கு இடம்பெற்ற இரண்டாயிரமாம் ஆண்டு 2030ல் சிறப்பிக்கப்பட உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2025, 15:17