விவிலியத் தேடல்: திருப்பாடல் 65-2, ஆண்டவரின் இடைக்கச்சை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளின் கோவில் தரும் நிறைவு!’ என்ற தலைப்பில் 65-வது திருப்பாடலில் 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 5 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த மனதுடன் வாசிப்போம். "அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே, உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே! வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர். கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் உம் அருஞ் செயல்களைக் கண்டு அஞ்சுவர்; கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக் களிகூரச் செய்கின்றீர்!" (வச. 1-4).
நமது தியானச் சிந்தனைகளை ஆழப்படுத்துவதற்கு முன்பாக, அருமையான வாழ்வியல் கதை ஒன்றுக்குச் செவிமடுப்போம். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து நமக்கெல்லாம் தெரியும். இவர் தன்னுடைய நிறுவனத்தை நிர்வகிக்க மிகச்சிறந்த நிர்வாகி ஒருவர் தேவையெனக் கருதினார். எனவே, தனக்கு அடுத்து தனது நிறுவனத்தை நல்ல முறையில் நடத்த தகுதியான ஆள் ஒருவரைத் தேடினார். அந்தத் தகுதியான நிர்வாகி ஒரு புகழ்பெற்ற குளிர்பான நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்தார். அவரது நிர்வாகம், திறமை என அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன்னுடைய நிறுவனத்தில் பணியில் சேருமாறு அவருக்கு அழைப்புவிடுத்தார். குளிர்பான நிறுவனத்திலேயே அதிகளவில் பெயரும் புகழும் பெற்று விளங்கிய ஸ்கல்லி என்ற அந்த நிர்வாகி புதிதாகத் தொடங்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்சின் ஆப்பிள் நிறுவனத்தில் இணைய மிகவும் தயங்கினார். காரணம், குளிர்பான நிறுவனத்திலேயே போதும் போதும் என்றளவுக்குப் பணமும், புகழும் கிடைத்திருக்கிறது. இதைவிட்டு விட்டுப் புதிய நிறுவனத்தில் சேருவதா? என யோசித்தார். எப்படியும் ஸ்கல்லி தனது அழைப்பை ஏற்க மாட்டார் என்பதை உணர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவரிடம், “ஸ்கல்லி, நீங்கள் காலம் முழுக்க இந்தக் குளிர்பான நிறுவனத்திலேயே இருந்து இந்தக் குளிர்பானங்களை விற்கப் போகிறீர்களா? அல்லது என்னுடன் இணைந்து இவ்வுலகத்திற்காக ஒரு புதிய மாற்றத்தை, சகாப்தத்தை உருவாக்கப் போகிறீர்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டார். ஸ்கல்லியின் மனதில் இந்த வார்த்தைகள் ஆழப் பதிந்துவிட்டன. ‘யார் வேண்டுமானாலும் குளிர்பானங்கள் தயாரித்து விற்கலாம். விற்பனையை அதிகரிக்க குளிர்பானங்களில் சுவையை கூட்டினாலே போதும். ஆனால் தனக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவிருக்கிறது, இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது’ என உணர்ந்து சட்டென அவரின் அழைப்பிற்கு சம்மதித்துவிட்டார். அத்துடன் அதற்கான பலனையும் ஓரிரிரு ஆண்டுகளிலேயே அடையத் தொடங்கிவிட்டார். உலகப்புகழ்ப் பெற்ற ஆப்பிள் கணினி நிறுவனத்தில் அட்டகாசமான நிர்வாகியாக, உழைப்பாளியாக செயல்பட்டு, நினைத்துப் பார்க்க முடியாத புகழின் உச்சிக்குச் சென்றுவிட்டார். ஆக, புதிய மாற்றங்களை மனதளவில் ஏற்று, துணிச்சலுடன் யார் போராடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகள் அனைத்தும் கடவுள் நமக்குத் தரும் நம்பிக்கையை மையப்படுத்தியுள்ளதால் இதன் அடிப்படையில் நமது தியானச் சிந்தனைகளைத் தொடர்வோம். "அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே, உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே! என்கின்றார் தாவீது. நமது அன்றாட வாழ்வில் நாம் பல காரியங்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சில வேளைகளில் பேரச்சம் உண்டாக்குகிறது. அவை வானில் தோன்றும் பல்வேறு அறிகுறிகளாக இருக்கலாம், கடலில் ஏற்படும் பல மாற்றங்களாக இருக்கலாம், நிலத்தில் ஏற்படும் பேரிடர்களாக இருக்கலாம். ஆனாலும் இவற்றைக் காட்டிலும் மானிடருக்கு ஏற்படும் பேராபத்துகள் கடவுளின் அஞ்சத்தகு செயல்களைப் பறைசாற்றுகின்றன. குறிப்பாக, கொரோனா என்ற பெருந்தொற்று ஏற்பட்டு மனிதர்களைக் கொன்று குவித்தபோது அது நமக்குள் பேரச்சத்தை ஏற்படுத்தியது. அத்தகைய சூழலின்போது, மனித வாழ்வு நிலையற்றது என்றும், கடவுளே என்றும் நிலையானவர் என்றும் நமக்கு நினைக்கத் தோன்றியது அல்லவா? அதேவேளையில், போர்கள், மோதல்கள், கலவரங்கள், இயற்கைப் பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் போன்றவற்றால் நாம் சிக்கித் தவிக்கும் சூழலில், கடவுள் நமக்குப் பாதுகாப்பும் மீட்பும் வழங்குகின்றார் என்பதையும் நாம் மறந்திட இயலாது. குறிப்பாக, ‘ஐய்யோ! என்னிடமிருந்த எல்லாமே போய்விட்டதே! இனி நான் என்ன செய்யப்போகிறேன், என் வாழ்வு எப்படி அமையப்போகின்றது!’ என்று நாம் கலங்கித் தவித்து நம்பிக்கை இழக்கும் வேளையில், நம் கடவுள் நமக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கின்றார்.
"அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன்" (எசா 41:10) என்றும், “மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்” (எசா 54:10) என்றும், ஆண்டவராம் கடவுள் கூறியுள்ளபடி அவர் நமக்கு நம்பிக்கை அளித்து நம்மைத் தேற்றுகிறார் என்பதை மனதில் கொள்வோம். ஆனால் அதேவேளையில், கடவுள் வழங்கும் நம்பிக்கை மற்றும் உதவி என்பது அனைவருக்குமானது என்பதை எடுத்துக்காட்டவே, “உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!” என்று உரைக்கின்றார் தாவீது.
அடுத்து, "வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்" என்கின்றார் தாவீது அரசர். இங்கே இடைக்கச்சை என்ற வார்த்தையின் முக்கியத்துவம் குறித்துப் பார்ப்போம். இடைக்கச்சை என்பது நேர்மை மற்றும் வல்லமையின் அடையாளமாகக் காட்டப்படுகிறது. இறைவாக்கினர் எலியா இடைக்கச்சையை அணிந்திருந்தார். அவர் கடவுளின் இறைவார்த்தைகளை உள்ளது உள்ளவாறு துணிவுடன் எடுத்துரைத்தவர். கடவுள் அவருக்கு வழங்கிய வல்லமை அதில் வெளிப்பட்டது. தனது உண்மை மற்றும் நேர்மையான செயல்களால் அவர் பாகாலின் பொய்வாக்கினர்களை எல்லாம் கொன்றொழித்தார் (1 அர 18:40) என்பதைப் பார்க்கின்றோம். அவ்வாறே மெசியா குறித்து இறைவாக்குரைக்கும் இறைவாக்கினர் எசாயா, ‘நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை’ (எசா 11:5) என்கின்றார். புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவானின் உடலமைப்பைக் குறித்துக் குறிப்பிடும் மத்தேயு நற்செய்தியாளர், 'இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்' (மத் 3:4). என்று எடுத்துக்காட்டுகின்றார். திருமுழுக்கு யோவானிடம் விளங்கிய உண்மை, நேர்மை, துணிவு இவற்றைக் கொண்டே அவர் அணிந்திருந்த இடைக்கச்சையின் வல்லமை குறித்து நாம் அறிந்துகொள்கின்றோம். இறுதியாக, பன்னிரு திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும் இயேசு அவர்களிடம், “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்" (மாற் 6:8) என்று அறிவுறுத்துகின்றார். ஆக, இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இடைக்கச்சை என்ற வார்த்தை, உண்மை, நீதி, நேர்மை, துணிவு, வலிமை, வல்லமை, ஆற்றல், ஆகிய நற்பண்புகளை வெளிப்படுத்தக் கூடியதொன்றாக இருக்கின்றது. இதன் பொருளை நன்கு உணர்த்தவராகத்தான், "வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்" என்கின்றார் தாவீது. இங்கே 'மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்' என்பது, கடவுள் தங்கி இருக்கும் இருப்பிடத்தைக் குறிப்பிடுகின்றது.
மேலும் "கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்!" என்ற தாவீதின் வார்த்தைகள் நம் சிந்தனைக்கு உரியதாக இருக்கின்றன. இங்கே இரண்டு முக்கியமான கடவுளின் செயல்களை நாம் நினைவுகூர்வோம். முதலாவது, செங்கடலை இரண்டாகப் பிரித்து அதில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய கடவுளின் மாபெரும் செயலை நாம் அறிகின்றோம். 'மோசே தம் கையைக் கடல்மேல் நீட்டவே, ஆண்டவர் கீழைக் காற்றை இரவு முழுவதும் வன்மையாக வீசச்செய்து கடலைப் பின்வாங்க வைத்து உலர்ந்த தரையாக்கினார். நீர்த்திரள் பிரிக்கப்பட்டது. வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரள் அவர்களுக்குச் சுவராக விளங்க இஸ்ரயேல் மக்கள் கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்' (விப 14:21) என்ற இறைவார்த்தைகள் கடவுள் கடலில் நிகழ்த்திய மாபெரும் அற்புதச்செயலை எடுத்துக்காட்டுகிறது. இரண்டாவதாக, கடவுளின் ஒரே திருமகனாகிய நமதாண்டவர் இயேசு, காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்வைப் பார்க்கின்றோம் (மாற் 4:35-41). இந்த இரண்டு நிகழ்வுகளிலும் கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் அடக்கும் வல்லமை கொண்டவர் நம் கடவுள் என்பதை பார்க்க முடிகிறது. ஆனால் இங்கே, 'மக்களினங்களின் அமளியையும் ஆண்டவர் அடக்குகின்றார்' என்றதொரு கருத்தையும் தாவீது உட்புபுகுத்துகின்றார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்னவாக இருக்கும்? ஒருவேளை, மனிதரும் கடலைப்போல சிலவேளைகளில் தன்னிலை அறியாது ஆணவத்தால் ஆட்டம்போடும்போது, அவர்களும் கடவுளால் அடக்கப்படுவார்கள் என்பதன் அர்த்தத்தில்தான் தாவீது இவ்வாறு கூறியிருக்க வேண்டும். காரணம், இப்படிக் கடலைப்போல பதவி வெறியாலும், அதிகாரத்தாலும், ஆணவத்தாலும் ஆட்டம்போட்ட பலர் எப்படி கடவுளால் அடக்கப்பட்டார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள் என்பதை தாவீது தனது வாழ்வில் நேரிடையாகக் கண்டுள்ளார். இதனை மனதில் கொண்டும் அவர் இப்படி கூறியிருக்கலாம். ஆகவே, ஆண்டவர் தனது வல்லமையையும், நீதியையும், நேர்மையையும் தனது இடைக்கச்சையாக அணிந்திருந்ததுபோல நாமும் அவற்றை அணிந்துகொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்