உத்தரகாண்ட் அரசின் நடவடிக்கையால் சிறுபான்மையினர் கலக்கம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட், மத அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை மாற்றியமைத்து, பொது சிவில் (உரிமையியல்) சட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அவர்கள், ஜனவரி 27, இத்திங்களன்று, ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரேமாதிரியான பொது சிவில் சட்டம் (UCC), அனைத்துக் குடிமக்களுக்கும் அவர்களின் மதப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகளை உறுதி செய்யும் என்று கூறியதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
இந்நிலையில், பெரும்பான்மை அடிப்படையிலான மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டத்தை நியாயமானதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது ஒருதலைச் சார்பானது என்றும், டெல்லி உயர்மறைமாவட்டத்தின் கத்தோலிக்கச் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் ஏ.சி.மைக்கேல் அவர்கள் அம்மாநில அரசின் இச்செயல் குறித்து இச்செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுபான்மையினரின் மத மற்றும் கலாச்சாரக் குறியீடுகளை மீறும் ஒரு சட்டம் சமம் என்று அழைக்கப்பட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள மைக்கேல் அவர்கள், உத்தரகாண்ட் மாநில அரசால் விதிக்கப்பட்ட இந்தச் சட்டத்தை நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் எனவும், இது விரைவில் நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான மையத்தின் தலைவர் முஹம்மது ஆரிப் அவர்களும், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய சொந்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறது என்றும், இச்சட்டத்தின் வழி அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது கடினம் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்