நேர்காணல் – திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் திருநற்கருணை ஆராதனைக்கு நாம் நம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமைதியான ஆராதனையில், கடவுளின் வார்த்தையானது நமது வார்த்தைகளை விட மேலோங்கி இருக்கும். இயேசுவின் ஒளி நிறைந்த முகத்தை எப்போதும் நமது கண்களுக்கு நேராக வைத்திருக்க வேண்டும். அன்பு, இரக்கம், நம்பிக்கை நிறைந்த அவரது ஒளி நிறைந்த முகத்தை எல்லா நேரங்களிலும் தேடுபவர்களாக வாழ வேண்டும். இந்த எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டில் ‟தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே” என்று அல்லும் பகலும் இடையறாது இறைப்புகழ் பாடும் வானதூதர்கள் போல நாம் இறைப்புகழ் பாடி அவரது மகிமையைப் பறைசாற்ற அழைக்கப்படுகின்றோம். மார்ச் 28, வெள்ளிக்கிழமையாகிய இன்று உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்கள் திருநற்கருணையின் மேன்மையை உணரும் வகையில் திருஅவையில் 24 மணி நேர ஆராதனையானது சிறப்பிக்கப்படுகின்றது.
எனவே இன்றைய நம் நேர்காணலில் திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைப்பவர் அருள்பணி கிறிஸ்து ராஜ். புனித பிரான்சிஸ் சலேசியார் மறைப்பரப்புப் பணியாளர்கள் சபையைச் சேர்ந்த அருள்பணி. A கிறிஸ்து ராஜ் அவர்கள் இளையோர் பணியில் முதுகலைக்கல்வியையும் (MTh) ‘‘சமூக ஊடகங்கள் மற்றும் இளையோர்‘‘ என்ற தலைப்பில் சமூகவியியலில் (Sociology) முனைவர் பட்டமும் பெற்றவர். தென்கிழக்கு இந்தியாவின் பிரான்சேலியன் இளையோர் அமைப்பின் இயக்குநர், பங்குபணியாளராகப் பணியாற்றியுள்ளார். சிறார், இளையோர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்க்கு ஆலோசனைகளையும் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்குகளையும் தியான சிந்தனைகளையும் வழங்கிக் கொண்டிருப்பவர். தற்போது அருள்பணி. A கிறிஸ்து ராஜ் அவர்கள் தர்மபுரி மறைமாவட்டத்தில் உள்ள, நலம் போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தந்தை அவர்களை திருநற்கருணை ஆராதனையின் முக்கியத்துவம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்