தவக்காலம் நான்காம் ஞாயிறு : இறைத்தந்தையின் இரக்கம்நிறை பேரன்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. யோசு 5: 9அ,10-12 II. 2 கொரி 5: 17-21 III. லூக் 15: 1-3, 11-32)
தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிகின்றோம். இன்றைய வாசகங்கள் இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பை நமக்கு எடுத்தியம்புகின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் லூக்கா நற்செய்தியிலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மட்டுமே வரும் இந்தக் காணாமற்போன மகன் உவமை மிகவும் புகழ்பெற்ற பெற்ற ஒன்று. இயேசு கூறும் இந்த உவமை, ஒரு தந்தை தன் மகனை இந்தளவுக்கு ஆழமாக அன்பு செய்ய முடியுமா என்றும், அவர் இத்தனைபெரிய நல்லவராக இருக்க முடியுமா என்றும் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த உவமைக் குறித்து நாம் சிந்திக்கும் அதேவேளை, யாரை முன்னிறுத்தி இயேசு இந்த உவமையைக் கூறுகிறார் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா, காணாமற்போன மகன் ஆகிய மூன்று உவமைகளை இயேசு அடுத்தடுத்துக் கூறுவதாக இந்நற்செய்தியின் 15-ஆம் பிரிவில் லூக்கா பதிவு செய்கின்றார். இம்மூன்றில், காணாமற்போன ஆடு பற்றிய உவமைக் குறித்து மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடுகின்றார் (காண்க. மத் 18:12-14). பரிசேயரையும், மறைநூல் அறிஞரையும் மையப்படுத்தியே, இயேசு இந்த மூன்று உவமைகளையும் கூறுகின்றார் என்பதை இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் காண்கின்றோம் (வச.15:1-3). ‘நீங்கள் உங்களையே மிகவும் மேலானவர்களாக நினைத்துக்கொண்டு மற்றவர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள். ஆனால், இவர்களைத்தான் இறைத்தந்தை தன் அன்பு மகனாகவும் மகளாகவும் ஏற்றுக்கொள்கிறார்’ என்பதை அவர்களுக்கு இந்த உவமைகள் வழிநின்று வெட்டவெளிச்சமாக்குகின்றார். இயேசு கூறும் இந்தக் காணாமற்போன மகன் உவமை, மனம் வருந்துதல், திரும்பி வருதல், விருந்தில் பங்குபெறுதல் ஆகிய மூன்று முக்கிய கருத்துக்களை உள்ளடக்கியிருக்கின்றது.
01. மனம் வருந்துதல்
முதலாவதாக, தன் பாவத்திற்காக மனம் வருந்துதல்: பாவங்களுக்காக மன்னிப்புப் பெறுவதற்கான முதல்நிலை இதுதான். ஏனென்றால் வருந்தாத மனம் திருந்தாது என்பார்கள். இளைய மகன் பன்றிகளை மேய்த்துக்கொண்டு அவை தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பியபோது, அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை என்ற நிலை வரும்போதுதான் அவர் தனது பாவ வழிகளை அறிந்துணர்கிறார். இந்நிலையில், ‘அவர் அறிவுத் தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! (15:17) என்று கூறி தன் பாவத்திற்காக மனம் வருந்துகிறார். இதற்கு வலுசேர்க்கும் விதமாக இதே நற்செய்தியில் இன்னும் இரண்டு நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. முதலாவது, சக்கேயுவின் மனமாற்றம். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று தன் இல்லத்திற்கு வரும் இயேசுவிடம் மனம் வருந்திக் கூறுகிறார் (லூக்19:8). இராண்டாவதாக, பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை. இதில், வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’” (லூக் 18:13). என்று கூறித் தன் பாவத்திற்காக மனம் வருந்துகிறார்.
02. திரும்பி வருதல்
இரண்டாவதாக, தந்தையிடம் திரும்புதல்: ‘திருந்தி வா, திரும்பி வா’ என்று கூறுவார்கள். முதல் படியிலேயே மனம்மாற்றம் நின்றுபோய்விடக் கூடாது. ‘நான் மாபெரும் தவறிழைத்துவிட்டேன், நான் அப்படியெல்லாம் செய்திருக்கவே கூடாது. அறிவற்ற தனமாக நான் நடந்துவிட்டேன், இனி என் வாழ்க்கையில் என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது? எப்படியோ வாழ்க்கையை நடத்த வேண்டியதுதான். நான் செய்த பாவத்திற்கான தண்டனைதான் இது” என்றெல்லாம் கூறி நம் மனமாற்றத்தின் உண்மைத்தன்மையை நாம் இழந்துவிடக்கூடாது. அதாவது, நமது மனமாற்றம் நம்மை நம்பிக்கையற்ற நிலைக்குள் தள்ளிவிடக்கூடாது. மாறாக, அது நம்மை நம்பிக்கை நிறைந்த அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர் (யோவே 2:12) என்றும், "இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்" (ஒசே 14:1-2) என்றும் ஆண்டவராம் கடவுள் உரைப்பதாகவும், “நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்” (யோபு 22:23) என்று யோபு கூறுவதாகவும் நாம் திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம்.
மேலும் ‘திரும்பி வருதல்’ என்பது எதோ ‘கடமைக்காக வருதல்’ என்று அர்த்தம் அல்ல. மாறாக, இறைத்தந்தையின் ஆழமான அன்பையும் அவருடைய நன்மைத்தனங்களையும் உணர்ந்து வருதல் என்று இது அர்த்தப்படுகிறது. ஆகவே, உண்மையில் மனம்வருந்தி திரும்பிவரும் இந்நிலைதான் மீண்டும் நம்மை பாவத்தில் விழாமல் காப்பாற்றும் என்பது திண்ணம். காணாமற்போன மகன் உவமையில், தனது தந்தையின் கனிந்த அன்பையும், இரக்கம்நிறை செயல்களையும் ஆழ்ந்துணர்ந்தவராக, உண்மையான மனமாற்றம் பெற்று தன் தந்தையிடம் திரும்பி வருகிறார் இளைய மகன். இதுமட்டுமன்றி, தன் தந்தையை மீண்டும் சந்திக்கும்போது அவரிடத்தில் என்ன சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றெல்லாம் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதையும் பார்க்கின்றோம். "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்" என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். (வச. 18-20).
03. விருந்தில் பங்குபெறுதல்
மூன்றாவதாக, மன்னிப்பின் கொண்டாட்டம்: மன்னிப்பின் அடையாளமாக அமைவது கொண்டாட்டம். எந்தவொரு மனம்திரும்புதல் நிகழ்வும் மகிழ்ச்சிநிறை கொண்டாட்டத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். காணாமற்போன மகன் உவமையில் இந்த இரண்டு விடயங்களும் காணப்படுகின்றன. தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ (வச. 22-24) என்று அவனின் தந்தை உரைக்கின்றார். மேலும் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவைக் கண்டு; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று அழைக்கின்றார் இயேசு. அவரும் உடனே எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றார். பின்பு, அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்கின்றனர் (காண்க மத் 9:9-10). இம்மாதிரியான நிகழ்வுதான் சக்கேயுவின் வீட்டிலும் நிகழ்கின்றது.
ஒப்புரவு தரும் புதுவாழ்வு
காணாமல்போன மகன் திரும்பி வந்தபோது, அவனது தந்தை எவ்வித நிபந்தனையுமின்றி அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு அவனுக்குப் புதுவாழ்வு அளித்ததுபோல, இயேசுவும் நம் பாவங்களை மன்னித்து, நம்மை ஏற்றுக்கொண்டு நமக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார் என்பதுதான் இந்த உவமையின் மையப்பொருளாக அமைகின்றது. இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர் யோசுவாவிடம், ‘‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்று கூறுவதன் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராம் கடவுள் வழங்கவிருக்கும் புதுவாழ்வுக் குறித்துக் குறிப்பிடுகின்றார். இங்கே 'பழிச்சொல்' என்பது அவர்களின் பாவத்தின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கின்றது. அவ்வாறே இரண்டாம் வாசகத்தில், "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!" என்று உரைக்கின்றார் புனித பவுலடியார். அடுத்து முக்கிமாக, பாவிகளாகிய நாம் கடவுளுடன் ஒப்புரவாவதற்கு அவரே முதலில் தன்முயற்சி (initiative) எடுக்கின்றார் என்பதையும் பார்க்கின்றோம். அதாவது, நம் குற்றங்குறைகளை மன்னித்து நம்மை அவரது அன்பு மக்களாக ஏற்றுக்கொள்ள அவரே தன்முயற்சி எடுக்கின்றார். "தவறு செய்தவன் அவன்தானே. முதலில் அவன் வந்து என்னிடம் மன்னிப்புக் கேட்கட்டும்" என்றெண்ணி அவனது தந்தை இறுமாந்திருக்கவில்லை. இதைத்தான், 'தொலையில் வந்து கொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்' (வச. 20) என்று காண்கின்றோம். அதேவேளையில், நாமும் தன்முயற்சி எடுத்து அவருடன் ஒப்புரவு ஆக வேண்டும் என்று கடவுள் பேராவலுடன் காத்திருக்கிறார். இவ்வுவமையில், காணாமற்போன மகன் தன்முயற்சி (initiative) எடுப்பதைப் பார்க்கின்றோம் (வச. 18-19). புனித பவுலடியாரும், "கடவுளோடு ஒப்புரவாகுங்கள்" என்று கிறிஸ்துவின் சார்பில் நமக்கு வேண்டுகோள் விடுகின்றார் (வச. 20).
காணாமல் போன மகன் உவமையைப் போன்றே நாம் சிந்திக்கத் தக்க உவமையொன்று உள்ளது. அழகான கிராமம் ஒன்றில் வாழ்ந்த ஒரு தந்தைக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் பிறந்த சில நாள்களிலேயே அவரது மனைவி இறந்துபோனார். தனக்கு ஒரே மகன் என்பதால் அவனுக்கு அதிக அன்பும் பாசமும் ஊட்டி வளர்த்தார். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கிக் கொடுத்து அவனுக்குத் தாய் இல்லாத குறையைப் போக்கினார். அவன் வளர்ந்து வாலிபனானான். அவனுக்கு வேண்டிய அனைத்தும் கிடைத்ததால் அவன் விருப்படி வாழத் தொடங்கினான். அவனது வாழ்வு திசைமாறித் தொடங்கியது. பல தீய நண்பர்களோடுப் பழகி தீய நட்புறவை வளர்த்துக்கொண்டான். ஒருநாள் தனது தந்தை தனக்காக சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு தன் தீய நண்பர்களுடன் தொலைதூரத்திற்கு ஓடிப்போனான். அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவழித்தான். அவனிடமிருந்த பணமெல்லாம் தீர்ந்துபோனதும், அவனது நண்பர்கள் அனைவரும் அவனைவிட்டுவிட்டு ஓடிப்போயினர். அப்போது யாருமே இல்லாத ஆதரவற்றனாக அவன் மாறியபோதுதான், தனது தந்தையின் அளவிடமுடியாத அன்பையும் பரிவிரக்கத்தையும் உணர்ந்தான். இப்படிப்பட்ட தந்தைக்கு இவ்வளவுபெரிய துரோகத்தை இழைத்துவிட்டோமே என்றெண்ணி அவன் மனம்வெதும்பி அழுதான். உடனே தனது தந்தைக்குக் கடிதம் ஒன்றை எழுதினான். "அப்பா, உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் எதிராக நான் செய்த பாவத்திற்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகின்றேன். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்களா? உங்களைக் காண வேண்டும் என்று என் மனம் பேராவல் கொள்கின்றது. உங்களைச் சந்தித்து, உங்கள் கால்களைப் பற்றிக்கொண்டு நான் செய்த பாவங்களுக்காகக் கதறி அழ வேண்டும் என்று எனது மனம் துடிக்கின்றது. என்னை அனுமதிப்பீர்களா அப்பா? இந்தக் கடிதம் உங்கள் கரங்களில் கிடைத்த ஓரிருநாள்களில் உங்களைக் காண வருவேன். நீங்கள் என்னை உண்மையிலேயே மன்னித்து ஏற்பதாக இருந்தால், அதன் அடையாளமாக நமது வீட்டிற்கு முன்புறம் உள்ள ஆலமரத்தின் மேல் ஒரு வெள்ளைநிறக் கொடியை கட்டி வையுங்கள். நான் உங்களிடம் திரும்பி வரும்போது, ஒருவேளை அந்த மரத்தில் வெள்ளைக்கொடியை நான் காணவில்லையெனில், நீங்கள் என்னை மன்னித்து ஏற்கவிரும்பவில்லை என்பதைப் புரிந்துகொண்டு உங்களிடமிருந்து நான் நிரந்தரமாக விலகிவிடுவேன்" என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தான். அவன் கடிதத்தில் கூறியதுபடியே ஓரிருநாள்கள் கழித்து தன் தந்தையைக் காண புறப்பட்டு வந்தான். அவன் வீட்டை நெருங்கியதும் அந்த ஆலமரத்தில் வெள்ளைநிறக் கொடி தெரிகிறதா என்று அண்ணாந்து பார்த்த அவன் வியப்பில் ஆழ்ந்துபோனான். காரணம் அந்த ஆலமரம் முழுவதும் அவனது தந்தை எண்ணற்ற வெள்ளைநிறக் கொடிகளைக் கட்டி வைத்திருந்தார். தன் மகனின் வருகைக்காக பேராவலோடுக் காத்திருந்த அந்தத் தந்தை அவன் வீட்டை நெருங்கி வருவதைக் கண்டதும் ஓடோடிச் சென்று அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டார். ஆம், அவர் மரத்தில் கட்டியிருந்த ஒவ்வொரு வெள்ளைநிறக் கொடியும் தன் மகன்மீது அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பையும், பரிவிரக்கத்தியும், பாசத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தியது. அந்த நாள் அவனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது. மேலும் தன் மகன் திரும்பி வந்ததால் பெருமகிழ்வடைந்த அவனது தந்தை, அவ்வூர் மக்கள் அனைவருக்கும் மாபெரும் விருந்தொன்றைப் படைத்து மகிழ்ந்தார் என்று அக்கதை நிறைவடைகிறது.
இரக்கம்நிறை மனதுடன் மன்னிப்போம்
ஆக, இம்மண்ணுலகத் தந்தையே பாவியான தன்மகன்மீது இந்தளவுக்கு அன்பு காட்டுகிறார் என்றால், விண்ணுலகத் தந்தை பாவிகளாகிய நம்மீது எந்தளவுக்கு அன்பு காட்டுவார் என்பதை எடுத்துக்காட்டவே காணாமற்போன மகன் உவமையைக் கையாள்கிறார் இயேசு. அதேவேளையில், இளைய மகனை மன்னித்து ஏற்க மறுத்த மூத்த மகனின் மனநிலையை நாம் கொண்டிருக்கக் கூடாது என்பதையும் இவ்வுவமையின் வழியாக இயேசு நமக்கு அறிவுறுத்துகின்றார் என்பதையும் உணர்வோம். இத்தருணம் முதல் நம் இறைத்தந்தையைப் போன்று நாமும் இரக்கம்நிறை மனதுடன் பிறரை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்று அன்பு செய்து வாழக் கற்றுக்கொள்வோம். மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவர் மனம் திருந்தி வாழ்வார், மன்னிப்புக் கொடுக்கத் தெரிந்தவர் மனம் மகிழ்ந்து வாழ்வார். மன்னிப்புக் கேட்பதற்கும், மன்னிப்புக் கொடுப்பதற்கும், இதன்வழி பிறருடன் ஒப்புரவாவதற்கும் நாம் கற்றுக்கொண்டால் நமது வாழ்வு கிறிஸ்துவுக்கு ஏற்றதாக அமையும் என்பது திண்ணம் அன்றோ? ஆகவே, இறைத்தந்தையைப் போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசு நமக்கு அருள வேண்டும் என்று இந்நாளில் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்