இஸ்ரேல் நடவடிக்கைக்கு CAFOD அமைப்பு கடும் எதிர்ப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான இஸ்ரேலின் அறிவிப்பிற்கு CAFOD எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்றும், இதில் பெரிய பகுதிகளைக் கைப்பற்றுவதும், அதிகமான பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்வதும் உள்ளடங்கும் என்றும் கூறியுள்ளது ICN எனப்படும் செய்தி நிறுவனம்.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள CAFOD அமைப்பின் மத்திய கிழக்கு திட்ட பிரதிநிதி எலிசபெத் ஃபன்னல் அவர்கள், இந்த நடவடிக்கைகள் அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை மீறுவதாக உள்ளதும் என்றும், அமைதி மற்றும் பாதுகாப்பை அடைய உரையாடல் மற்றும் பொறுப்புக்கூறலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அங்கு இடம்பெற்று வரும் வன்முறை ஏற்கனவே 1,40,000 மக்களை இடம்பெயரச் செய்துள்ளது என்றும், ஏற்கனவே மனிதாபிமான நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றும் CAFOD அமைப்பு கூறியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது அச்செய்தித் தொகுப்பு.
காசாவில் உள்ள CAFOD இன் துணைவர்கள், தீவிர வன்முறை, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வளர்ந்து வரும் உளவியல் அதிர்ச்சி உள்ளிட்ட பேரழிவு நிலைமைகள் குறித்துப் புகாரளித்து வருகின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
அத்துடன் எருசலேமில் உள்ள காரித்தாஸ் அமைப்பு தொடர்ந்து மனநல உதவிகளை வழங்கி வருகிறது என்றாலும், அதனின் மருத்துவ மையங்களுக்கு அருகில் நடைபெறும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக குறிப்பிடத்தக்க ஆபத்துகளை எதிர்கொள்கிறது என்றும், அங்கு உதவிப் பணிகள் அதிகரித்து அதிகரித்து வரும் அதேவேளையில் உதவிப் பணியாளர்களிடையே உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு மனிதாபிமான நெருக்கடி கடுமையாக உள்ளது என்றும், மனிதாமான உதவிகளுக்கு இஸ்ரேல் விதித்துள்ள ஒரு மாத கால தடை, உணவு, நலவாழ்வு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 50,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும், இதில் 30 விழுக்காடு குழந்தைகள் என்றும் தெரிவிக்கும் அச்செய்திக் குறிப்பு, CAFOD அமைப்பு அதன் வலையமைப்பு மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும், CAFOD (Catholic Agency for Overseas Development) எனப்படும் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு, போர், வறுமை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பல்வேறுப் பணிகளை ஆற்றி வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்