கமரூன் கத்தோலிக்கரின் அரசியல் கடமைகளை வலியுறுத்தும் ஆயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கமரூன் நாட்டில் வரும் அக்டோபரில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில், வாக்காளர்களின் அரசியல் கடமைகளை வலியுறுத்தி மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அரசுத்தலைவர் தேர்தலில் கமரூன் நாட்டு மக்கள் மனச்சான்றுடன் தங்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என விண்ணப்பிக்கும் ஆயர்கள், மக்களின் தேர்வு சுதந்திரமானதாக, பொறுப்புணர்வுடையதாக இருக்க வேண்டும் எனவும் தங்கள் சுற்றறிக்கையில் கூறியுள்ளனர்.
உண்மையான கிறிஸ்தவ விசுவாசமும் எதிர்நோக்கும் இறை அருளை வேண்டுவதில் மட்டும் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை, மாறாக, நீதிக்காகவும் அமைதிக்காகவும் உழைப்பதிலும் ஈடுபடத்தவேண்டும் என ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
அரசியலில் திருஅவையின் பங்கு என்பதை வலியுறுத்தியுள்ள ஆயர்கள், கிறிஸ்தவர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய குழுக்களின் போராட்டம், குடிபெயர்தல்கள், விலைவாசி உயர்வு, நகர்களில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு, இனங்களாக பிரிந்திருத்தல், வெறுப்புப் பேச்சுகளும் செயல்களும், இளையோர் பொறுப்பற்று நடத்தல், வேலைவாய்ப்பின்மைகள் போன்றவை இன்றைய கமரூன் நாடு எதிர்நோக்கிவரும் சவால்களாக மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.
இத்தகைய சவால்களோடு, நாட்டில் இலஞ்ச ஊழலும், சுரண்டலும், உரிமை மீறல்களும் நேர்மையற்ற முறைகளும் பரவி வரும் நிலையில் ஒவ்வொருவரும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளோம் என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என மக்களை நோக்கி அழைப்புவிடுத்துள்ளனர் கமரூன் ஆயர்கள்.
நாட்டில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறும் காலத்தில் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான அவை தன் கண்காணிப்பை நடத்தும் எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்