திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி 22
மெரினா ராஜ் – வத்திக்கான்
இறப்பின் வாயிலுக்குப் பின்னால் இயேசுவில் நிலைவாழ்வு இருக்கின்றது. அது இறைவனுடனான முழுமையான ஒன்றிப்பு, அவரைப் பற்றிய எண்ணம், அவரது எல்லையற்ற அன்பில் பங்கேற்பது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கின்றது. எதிர்நோக்கில், நம்பிக்கையில் நாம் வாழும்போது வாழ்வின் எதார்த்தத்தை நாம் காண்கின்றோம். “இறைவா, நான் எப்போது உம்முடன் என்னையே ஒன்றிணைக்கின்றோனோ அப்போது எனக்கு துன்பமும் துயரமும் எங்கும் இருக்காது, மாறாக எனது வாழ்வு உண்மையான வாழ்வாக, உம்மால் நிறைக்கப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கும்” என்ற தூய அகுஸ்தீன் வார்த்தைகளுக்கேற்ப நமது வாழ்வு இருக்கவேண்டும். அத்தகைய முழுமையான ஒன்றிப்பின் சிறப்பியல்பு என்பது மகிழ்ச்சியாக இருப்பது. மகிழ்ச்சி என்பது மனிதனின் அழைப்பு. மனிதர்கள் அனைவரின் வாழ்வின் இலக்கு, குறிக்கோள்.
மகிழ்ச்சி என்றால் என்ன? நாம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறோம், விரும்புகிறோம்? நம்மைக் கடந்து செல்லும் ஒரு விரைவான மகிழ்ச்சி அல்ல, தற்காலிகமாக நிறைவு தரும் மகிழ்ச்சியும் அல்ல. ஏனெனில் தற்காலிக மகிழ்ச்சியை அடையும் மனித ஆன்மா ஒருபோதும் நிறைவடையாத பேராசையின் சுழலில் மேலும் மேலும் அந்த மகிழ்ச்சியை அடைய நினைக்கின்றது. நிறைவு அடைவதற்கு பதிலாக வெறுமையடைகின்றது. அன்பில் உறுதியாக நிறைவேறும் ஒரு மகிழ்ச்சி நமக்கு தேவைப்படுகின்றது. அப்போது தான் நம்மால் நான் அன்பு செய்யப்படுகின்றேன், ஏமாற்றமடையாத அவரது அன்பில் நாம் எப்போதும் நிலைத்திருக்கின்றேன் என்று நம்மால் கூற முடியும். திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை நாம் மீண்டும் நினைவுகூர்வோம். “சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்பும் நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை”. (உரோ:8: 38 -39)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்