மியான்மார் நாட்டிற்கு கத்தோலிக்க உதவி அமைப்புகளின் உதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
3085 மக்களின் உயிரிழப்புக்கும், 4700 பேர் காயமடைதலுக்கும், 341 பேர் காணாமல்போதலுக்கும் காரணமான மியான்மாரின் நில அதிர்ச்சியின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க அண்மை நாடுகளின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புகள் உதவி வருகின்றன.
மியான்மாரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென Macau காரித்தாஸ் அமைப்பும் நிதி திரட்டல்களை மேற்கொண்டுவருகிறது.
மக்களுக்குத் தேவையான உணவு, நல ஆதரவுத் திட்டங்கள் போன்றவைகளுக்கு உதவும் நோக்கத்தில் கத்தோலிக்கத் திருஅவை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக மக்காவுவின் கத்தோலிக்க வார இதழ் Jornal-O-Clarim என்பது அறிவித்துள்ளது.
மக்காவ் பகுதி மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் தராளமனம் மிகப்பெரியது என்ற இப்பத்திரிகை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வை வழங்க கத்தோலிக்க திருஅவை கை கோர்க்க எப்போதும் தயாராக உள்ளது என அறிவித்தது.
இப்பகுதியின் செஞ்சிலுவைச் சங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை உடனடியாக வழங்கியிருக்க, கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பான World Visionன் மக்காவ் கிளையும் நிதியுதவி வழங்குவதில் தீவிரம் காட்டிவருகிறது.
இதற்கிடையே, கத்தோலிக்கரை பெரும்பான்மையினராகக் கொண்ட கிழக்கு திமோர் நாடு, மியான்மார் நாட்டின் நில அதிர்வு பாதிப்புகளிலிருந்து வெளிவர உதவும் நோக்கத்தில் 5 இலட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க உறுதியளித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் காரித்தாஸ் அமைப்பும் மியான்மார் நாட்டு மக்களுக்கென நிதி திரட்டத் துவக்கியுள்ளதாக அறிவித்தது.
ஏற்கனவே, அவசரகால நிலையை எதிர்நோக்கிவரும் மியான்மார் நாட்டின் உடனடி மீட்புத் தேவைகளுக்கு உதவும் வகையில் துவக்கத் தவணையாக ஐந்து இலட்சம் யூரோக்களை இத்தாலியத் தலத்திருஅவை அனுப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் உதவிகளை வழங்கி வருவதுடன், கத்தோலிக்க நிதி திரட்டல்களையும் மியான்மார் நாட்டிற்கென துவக்கியுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்