புனித பூமி கிறிஸ்தவர்களின் வாழ்க்கை குறித்த ரோசிங் மையத்தின் அறிக்கை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2024-ஆம் ஆண்டில் புனித பூமி கிறிஸ்தவர்கள் மீது 111 தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், இவற்றில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் துறவு மடங்கள் மீதான நாசவேலைகளும் அடங்கும் என்று கூறியுள்ளது ரோசிங் மையத்தின் அறிக்கை.
இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவை மத-தேசியவாதக் குழுக்களைச் சேர்ந்த இளம் தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களால் நடத்தப்பட்டவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது இம்மையத்தின் அறிக்கை.
இஸ்ரேலிய அரசியலில் மத-தேசியவாதத் தீவிரவாதத்தின் தாக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ள இந்த அறிக்கை, இது கிறிஸ்தவர்களுக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தல் சூழலை உருவாக்கியுள்ளது என்பதையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
மேலும் அதிகரித்து வரும் பாகுபாடு மற்றும் வன்முறை காரணமாக, இளம் கிறிஸ்தவர்களில் 48 விழுக்காட்டினர் இப்பகுதியை விட்டு வெளியேறுவது குறித்து யோசித்து வருவதாக ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளதையும் எடுத்துக்காட்டியுள்ளது இம்மையத்தின் அறிக்கை.
இஸ்ரேலில், கிறிஸ்தவர்கள் 1,80,000 பேர் மட்டுமே உள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் அரபு கிறிஸ்தவர்கள் என்றும் கூறும் இவ்வறிக்கை, எருசலேமில், கிறிஸ்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 4 விழுக்காடு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் யூத மக்கள் தொகை மற்றும் கிழக்கு எருசலேமில் புதிய யூதக் குடியேற்றங்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள இவ்வறிக்கை, இது நகரத்தின் "யூதமயமாக்கலுக்கு" பங்களிக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலை யூத மக்களின் தேசிய நாடாக அறிவிக்கும் 2018-ஆம் ஆண்டின் அடிப்படைச் சட்டம், மதங்களுக்கு இடையிலான உறவுகளை மிகவும் கடினமாக்கியுள்ளது என்றும், வடக்குப் பகுதிகளில் சொத்துரிமைகள், வரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களிலிருந்து வன்முறை பரவுதல் போன்ற சவால்களை கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்