தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு: புதுவாழ்வு பெறுவோம், புதுவாழ்வு தருவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I. எசா 43: 16-21 II. பிலி 3: 8-14 III. யோவா 8:1-11)
தவக்காலத்தின் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிகின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுள்தரும் புதுவாழ்வு குறித்துப் பேசுகின்றன. இப்போது நமது மறையுரைச் சிந்தனைகளை ஒரு கதையுடன் தொடங்குவோம். அது ஓர் அழகான கிராமம். அந்தக் கிராமத்திற்கு வெளியே உள்ள சிறிய காட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரின் குடிசைக்கு சற்றுத்தொலைவில் பெண் ஒருவர் பாலியல் தொழில் புரிந்துவந்தார். அந்தத் துறவி, ஒவ்வொரு நாளும் தன்னுடைய இறைவேண்டலின்போது, “கடவுளே, இந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது. இப்படிப்பட்ட பாவியான பெண்ணை தினமும் நான் பார்க்கும்படி செய்துவிட்டீரரே” என்று நாள்தோறும் புலம்பிக்கொண்டே இருப்பார். குறிப்பாக, ஒவ்வோர் ஆணும் அவளது வீட்டிற்குள் போகும்போதெல்லாம் ஒரு செங்கல்லை எடுத்து வைப்பார். இப்படியாக அவர் எடுத்துவைத்த செங்கற்கள் அனைத்தும் ஒரு வீடே கட்டுமளவிற்குக் குவிந்திருந்தன. சில ஆண்டுகள் கழித்து இருவருமே இறந்து கடவுளிடம் சென்றனர். அப்போது அந்தத் துறவிக்கு நரக வாழ்வும், பாலியல் புரிந்துவந்த அந்தப் பெண்ணுக்கு மோட்ச வாழ்வும் கிடைத்தது. அப்போது கொதித்தெழுந்த அந்தத் துறவி, "கடவுளே, என்ன அநியாயம் இது! காலம்முழுதும் உன்னையே நினைத்து வாழ்ந்த எனக்கு நரக வாழ்வும், காலம் முழுதும் பாலியல் தொழில் செய்து பெரும்பாவியாக வாழ்ந்த அவளுக்கு மோட்ச வாழ்வும் கொடுத்திருக்கிறீரே? இதுதான் உன்னுடைய நீதியா" என்று அவரிடம் முறையிட்டார். அதற்கு கடவுள், “எனக்காக உன்வாழ்வையே அர்ப்பணித்தேன் என்று சொல்லிக்கொண்டு, நீ என்னை நினைத்து வாழ்ந்ததைவிட, அப்பெண்ணையும், அவளது பாவ வாழ்வையும் நினைத்து பொருமிக்கொண்டே வாழ்ந்த காலங்கள்தாம் மிகவும் அதிகம். ஆனால் பாவ வாழ்வுக்குள் தள்ளப்பட்ட அப்பெண்ணோ, ஒவ்வொருநாளும் என்னை நோக்கி மனமுருகி அழுதாள். பெற்றோர் இன்றி அனாதையாக்கப்பட்ட தன்னை இந்த ஆணாதிக்க சமூகம் இப்படிப்பட்ட சூழலுக்குத் தள்ளியதை எண்ணி எண்ணி வேதனையடைந்து என்னிடம் மன்னிப்பு வேண்டி வந்தாள். அதுமட்டுமன்றி, அவள் அத்தகை பாவ வாழ்விலிருந்து மனம்மாறி எப்போதோ புதுவாழ்வுப் பெற்றுவிட்டாள். ஆனால் நீதான் அதனை அறிந்திராமல் அவள் பாவம் செய்வதாகவே நினைத்துக்கொண்டு உன்னைக் கறைப்படுத்திக்கொண்டாய். ஆகவே, என் பெயரைச் சொல்லிக்கொண்டு பெண்களை ஒடுக்குவோருக்கும், அவர்களைக் குறித்துத் தரம்தாழ்ந்த நிலையில் விமர்சிப்போருக்கும் நான் அளிக்கும் தண்டனைதான் இந்த நரக வாழ்வு” என்று மொழித்தாராம். இது ஒரு கற்பனையான கதைதான் என்றாலும், இது நமக்கு வாழ்வின் சில உண்மைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றது.
புதிய செயல் புதிய வாழ்வு!
'கடலுக்குள் வழியை ஏற்படுத்தியர், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தார், தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவர், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவர்' (வச. 16-17) என்று இன்றைய முதல் வாசகம் கடவுளின் மேன்மைமிகு பண்புகளை வெளிப்படுத்துகிறது. இது இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வையும், பாரவோனின் படையினர் அக்கடலில் அமிழ்ந்து அழிந்ததையும் நமக்கு நினைவுபடுத்தும் அதேவேளை, நம் கடவுள் விடுதலையும் புதுவாழ்வும் அருள்பவர் என்பதையும் நமக்குப் புலப்படுத்துகின்றது. மேலும் "முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; முற்கால நிகழ்ச்சி பற்றிச் சிந்திக்காதிருங்கள்; இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது" (வச. 18-19) என்று ஆண்டவராம் கடவுள் மொழியும் வார்த்தைகள் நம்மைப் பாவ வாழ்விலிருந்து புதுவாழ்வுக்கு அழைக்கின்றன. இதனைத்தான் இன்றையத் திருப்பாடலும், "ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்" (திபா 126:3) என்று உரைக்கின்றது.
பவுலடியாரின் இலக்கு நோக்கிய ஓட்டம்
இன்றைய இரண்டாம் வாசகத்தில், "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்" (வச. 8-9) என்று இயேசுவைப் பற்றிய அறிவைப்பெற தான் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகக் கூறுகிறார் புனித பவுலடியார். இது பாவ வாழ்விலிருந்து அவர் பெற்ற புதுவாழ்வை நமக்கு நினைவுபடுத்துகிறது. இதன் காரணமாகத்தான், "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்" (வச. 13-14) என்று கூறி தனது பணிவாழ்விற்கான நோக்கத்தையும் எடுத்துக்காட்டுகின்றார். இதுதான் பவுலடியார் செய்த புதிய செயலும் அவர் பெற்றுக்கொண்ட புதுவாழ்வும் ஆகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
யோவான் நற்செய்தியில் 8-ஆம் அதிகாரத்தில் வரும் 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' குறித்த பகுதி, இன்று நமது சிந்தனைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒத்தமை நற்செய்தியாளர்கள் யாருமே இந்நிகழ்வு பற்றி குறிப்பிடவில்லை. ஆனாலும் இயேசு பரிசேயருள் ஒருவரின் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது அங்கே வரும் 'பாவியான' பெண் ஒருவர் அவரின் காலடிகளில் நறுமணத்தைலத்தை தேய்த்து தன் கூந்தலினால் துடைக்கிறாள் என்பதைப் பார்க்கின்றோம் (காண். மத் 26:6, மாற் 14:3-9, லூக் 7:36-50, யோவா 12:1-8). இந்தப் பெண்ணைப் பற்றிய கதையாடல் பின்னால் உருவாக்கப்பட்டு, விபச்சாரத்தில் பிடிபட்ட இப்பெண்தான் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டவர் என்று அவரை அடையாளப்படுத்துவதற்காக இந்நிகழ்வு யோவான் நற்செய்தியில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது சில விவிலியப் பேராசியர்களின் எண்ணங்களாகவும் வெளிப்படுகின்றன. மேலும் “வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்” (யோவா 7:24) என்ற இயேசுவின் போதனையின் விளக்கவுரையாகவும், "நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்" (8:15-16) என்ற அவரின் வார்த்தைகளின் சுருக்கமாகவும் இந்நிகழ்வு அமைத்துள்ளதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.
பகடைக்காயாகப் பயன்படுத்தபட்டப் பெண்
மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, “போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” (வச. 3-5) என்று கேட்டனர் என்று யோவான் பதிவு செய்கின்றார். அப்படியென்றால், இயேசுவிமீது குற்றம் காண வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெண் பகடைக்காயாகப் பயன்படுத்தபட்டிருக்கிறார் என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாகிறது. இங்கே அவர்கள் இயேசுவின்மீது இருவகையான குற்றங்களை சுமத்தும் நோக்கில்தான் இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர். முதலாவதாக, "இந்தப் பெண்ணை அவள் செய்த குற்றத்திற்காக, கல்லால் எறிந்து கொள்ளலாம் என்று இயேசு கூறினால், அவர் இரக்கமற்றவர் என்றும் உரோமைச் சட்டத்தை மீறியவர் என்றும் பழி சுமத்தலாம் என்று அவர்கள் எண்ணினர். காரணம், கொலை தண்டனைக்கு ஒருவரை ஆளாக்க யூதர் எவருக்கும் உரிமையில்லை. மேலும் அது உரோமை ஆட்சியாளர்களின் கரங்களில் இருந்தது. இரண்டாவதாக, இயேசு இந்தப் பெண்ணை கல்லால் எறிந்து கொல்லக்கூடாது என்று கூறினால், அவர் மறைநூலை மதிக்காதவர் என்றும், பாலியல் தொழில் புரியும் பெண்களுக்கு இரக்கம் காட்டி, அதனை அவர் ஊக்குவிக்கிறார் என்றும் அவர்மீது பழிபோடாலாம் என்று நினைத்தனர். இந்தமுறை எப்படியும் அவர் தங்களிடம் வசமாக சிக்கிக்கொள்வார் என்று பரிசேயரும் மறைநூல் அறிஞரும் தப்புக்கணக்குப் போட்டுக்கொண்டு, விடாமல் இந்தக் கேள்வியை அவரிடம் எழுப்புகின்றனர். ஆனால் இயேசு, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” (வச. 7) என்று கூறி மறைமுகமாக அவர்களின் செவிகளில் ஓங்கி அறைகிறார்.
பாலியல் ரீதியாக நிகழும் எந்தெந்தக் குற்றங்களுக்கும் ஓராணும் பெண்ணும் கல்லால் எறிந்துகொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து 'பாலுறவுத் தூய்மை பற்றிய சட்டங்கள்' என்ற தலைப்பில் இணைச்சட்ட நூலில் மிகவும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன (காண்க. இச 21:13-29). நாம் காணும் இந்நிகழ்வில் இயேசு சட்டத்தை மீறியவராகக் கூறமுடியாது. 'இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்’ என்று மோசேயின் சட்டத்தை எடுத்துக்காட்டி, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் 'இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது' (காண்க இச 17:6) என்றும், 'ஒருவனது எந்தக் குற்றத்தையும் எந்தப் பழிபாவச்செயலையும் உறுதி செய்ய, ஒரே சாட்சியின் வாக்குமூலம் போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே அது உறுதிசெய்யப்பட வேண்டும்' (காண்க. இச 19:15) என்றும் மோசேயின் சட்டம் சொல்கிறது. ஆனால் இங்கே சாட்சிகள் இல்லை. குற்றச்சாட்டு மட்டுமே இருக்கிறது. மேலும், மோசேயின் சட்டத்திலும், இயேசுவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த மிஷ்னாவின் சட்டத்திலும், விபச்சாரம் செய்யும் பெண்ணுடன் சம்மந்தப்பட்ட அந்த ஆணும் தண்டிக்கப்பட வேண்டும் (காண். லேவி 20:10, இச 22:22). ஆக, இயேசுவிடம் அந்தப் பெண்ணைக் கூட்டிவந்தவர்கள், அந்த ஆணைக் கொண்டு வரவில்லை. அவன் தப்பித்துப் போய்விட்டானா அல்லது தப்பிக்க விடப்பட்டனா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனதுப் பார்வைக்கு அவர்கள் அந்த ஆணைத் தப்பிக்க விட்டிருக்க வேண்டும். காரணம், வந்திருந்தவர்களில் மறைநூல் அறிஞரும் இருந்தனர் என்று பார்க்கின்றோம். அப்படியென்றால், இதுகுறித்த சட்டமெல்லாம் அவர்களுக்கு அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும். அப்படி இருந்தும் அந்த ஆணைத் தப்பிக்க விட்டுவிட்டுப் பெண்ணை மட்டுமே கூட்டி வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களின் தவறான நோக்கம் நமக்குப் புரிகிறது.
இயேசுவின் புதிய சட்டம்
“உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்றும், “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றும் கூறி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார் இயேசு. அவரின் இந்தப் புதிய சட்டம், அன்பு, மனிதாபிமானம், மனிதமாண்பு, புரிந்துகொள்ளல், ஏற்றுக்கொள்ளல், புதிய செயலை செய்தல், புதுவாழ்வு அளித்தல் ஆகிய பல்வேறு சிறப்புக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால்தான், தனது சீடர்களின் பாதங்களைக் கழுவிய பின்பு, "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்று கூறும் இயேசு, "நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றும் கூறி இப்புதிய கட்டளையை வாழ்ந்துகாட்டவும் அவர்களுக்கு அழைப்புவிடுகிறார்.
இயேசுவின் புதிய படைப்பு
புதிய செயல், புதிய பெயர் (எசா 62:2), புதிய உடன்படிக்கை (எரே 31:31), புதிய இதயம் (எசே 36:26), புதிய வாழ்வு (செப் 3:17) என்ற இறைத்தந்தையின் செயல்பாடுகளை முதல் ஏற்பாட்டு நூல்களில் காண்கின்றோம். அவ்வாறே, புதிய உறவு (யோவா 1:13), புதிய திராட்சை இரசம் (யோவா 2:1-12), புதிய கோவில் (யோவா 2:19), புதிய பிறப்பு (யோவா 3:3), புதிய வழிபாடு (யோவா 4:23-24), புதிய உணவு மற்றும் தண்ணீர் (யோவா 6:34), புதிய வாழ்வு (யோவா 11:43), புதிய பார்வை (யோவா 9:7), புதிய தலைமை (யோவா 10:11), புதிய கட்டளை (யோவா 13:34), புதிய விடுதலை (யோவா 12:12-19) என்று இயேசுவின் பணிவாழ்வு முழுதும் அவர் புதிய செயல்களைச் செய்பவராகவும் புதியவற்றைப் படைபவராகவும் வெளிக்காட்டுகிறார் யோவான் நற்செய்தியாளர். மேலும் இவர் எழுதியதாகக் கருதப்படும் திருவெளிப்பாட்டு நூலிலும் புதிய விண்ணகம், புதிய மண்ணகம் (திவெ 21:1) என நம் கடவுள் புதியவற்றைப் படைப்பவராக இருக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.
நமக்கானப் படிப்பினைகள்
இன்றைய மூன்று வாசகங்களும், நாம் பழைய பாவ வாழ்வைக் கடந்து புதிய வாழ்விற்குள் நுழைய வேண்டும் என்ற புதியதொரு படிப்பினையை நமக்கு வழங்குகின்றன. ஆகவே, நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று கருதும் புதிய மனநிலையைப் பெற்றுக்கொள்வோம். அதேவேளையில், சட்டங்களையும், சடங்குகளையும், செம்பெருந்தாயங்களையும் (சம்பிரதாயங்கள்), பெண்களை இழிநிலைக்கு உள்ளாக்கும் பழமொழிகளையும் மனதில் கொண்டு பெண்களை ஒடுக்குவதையும் அவர்களுக்கு எதிராக அநியாயமாகத் தீர்ப்பிடுவதையும் இன்றே விட்டொழிப்போம். இயேசுவைப் போல, பிறரை அநியாயமாகத் தீர்ப்பிடாமல், அவர்களின் சூழலைப் புரிந்துகொண்டு, முழு மனதுடன் அவர்களை மன்னித்து ஏற்கக் கற்றுக்கொள்வோம். கடவுளிடமிருந்து புதுவாழ்வு பெறுவோம், பெற்ற புதுவாழ்வைப் பிறருக்கும் கொடுப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்