தேடுதல்

சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 080720 சாந்தா மார்த்தா திருப்பலியின்போது - 080720  (AFP or licensors)

மறையுரை : நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் திருஅவையின் தலைமைப் பணியையேற்ற நான்கு மாதங்களிலேயே லாம்பதூசா தீவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோரை, சென்று சந்தித்தது, புலம்பெயர்ந்தோரை ஒரு பெருஞ்சுமையாக நோக்கும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு, திருத்தந்தையாக, கர்தினால்களால் தேர்வு செய்யப்பட்டு, அசிசியின் புனித பிரான்சிசின் பெயரை எடுத்துக்கொண்டதன் வழியாக, தன் பாப்பிறை பணிக்கால நோக்கத்தை வெளிப்படுத்திய நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது, அதே ஆண்டு ஜூலை 8ம் தேதி அவர், மேற்கொண்ட லாம்பதூசா பயணமாகும். ஐரோப்பாவிற்குள் அடைக்கலம் தேடிவந்து, லாம்பதூசா தீவில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோரை சந்தித்து, அவர்களுடன் தன் ஒருமைப்பாட்டை திருத்தந்தை அறிவித்தது, அனைவருக்கும், குறிப்பாக, புலம்பெயர்ந்தோரை ஒரு பெருஞ்சுமையாக நோக்கும் சமுதாயத்திற்கு நல்ல வழிகளைக் காட்டும் ஒரு பாடமாக அமைந்தது. இந்த லாம்பதூசா சந்திப்பின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் 8ம் தேதி, புலம்பெயர்ந்தோருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, கொரோனா தொற்றுநோய் கட்டுப்பாடுகள் இருப்பதை முன்னிட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் புலம்பெயர்ந்தோருக்குரிய பிரிவைச் சேர்ந்த சில அதிகாரிகளுடன் இணைந்து, உரோம் நேரம் காலை 11 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பகல் 2.30 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.
மறையுரை
அன்பு சகோதரரே, சகோதரிகளே,
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை
இடையறாது நாடுங்கள்!(தி.பா.105)
என்று இந்நாள் திருப்பலியின் பதிலுரைப்பாடல் நம்மை அழைக்கிறது. இறைவனை சந்திப்பதையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள விசுவாசிகளின் வாழ்வுக்கு இது அடிப்பைப்படையாக உள்ளது. நமக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகிய வானுலக வாழ்வை நோக்கிய நம் பயணத்தில், இறைவனின் முகமே நமக்கு வழிகாட்டும் விண்மீனாக உள்ளது. இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில் (ஒசேயா 10,1-3.7-8.12), நாம் கேட்டதுபோல், செல்வ செழிப்பில், இறைவனையும், வாக்களிக்கப்பட்ட பூமியையும் மறந்து, தூர விலகிப்போன மக்கள், பொய்மையாலும், அநீதியாலும் நிறைந்தவர்களாக வாழ்ந்தனர். அவர்கள் செய்த அதே பாவத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல. நம் சுகங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நாம், மற்றவர்களின் தேவைகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருந்து வருகிறோம். அக்கறையற்றநிலை என்பதே உலகமயமானதாக மாறி, மற்றவர்களின் துன்பம் நம்மைப் பாதிக்காமல், அதைக் குறித்து கவலைப்படாமல் இருக்க பழகிக்கொண்டோம். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஒசேயா அவர்கள், நம் மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கிறார் (ஒசேயா10, 12). இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்.10,1-7), இயேசு தம் பன்னிரு சீடர்களையும் அழைத்து, அவர்களை நற்செய்தி அறிவிப்பு பணிக்கு அனுப்புவதைக் காண்கிறோம். அவர் தன் சீடர்களை அனுப்பும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள், என்று அவர்களிடம் கூறுகிறார் இயேசு. அன்று சீடர்கள் இயேசுவை முகம் முகமாகச் சந்தித்ததுபோல், நம்மாலும் இன்றும் இயேசுவை சந்திக்க முடியும். ஆம். நாம் வழியில் சந்திக்கும் ஏழைகள், நோயுற்றோர், கைவிடப்பட்டடோர், அயலார் என அனைவரின் முகத்திலும் நாம் இயேசுவைச் சந்திக்க முடியும். ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று (மத்.25,40) இயேசுவே கூறியுள்ளார். 'நீங்கள் செய்ததையெல்லாம்' என்ற வார்த்தையை உற்று நோக்குவோம். நன்மையோ தீமையோ, எது செய்தாலும் அது இறைவனுக்குச் செய்ததாகும், இந்த வார்த்தைகளைக் கொண்டு, நம் மனச்சான்றை தினமும் ஆய்வுசெய்வோம். இந்நேரத்தில் லிபியா நாட்டின் தடுப்பு முகாம்களை நினைத்துப் பார்க்கிறேன். நம்பிக்கைகளைத் தாங்கி பயணம் மேற்கொண்ட புலம்பெயர்ந்தோர், உரிமை மீறல்களையும், வன்முறைகளையும் எதிர்நோக்கும் நிலைகளை எண்ணிப் பார்க்கிறேன். 'நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்' என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.
இவ்வாறு, தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகை இன்னும் துன்புறுத்தும் அநீதிகளிலிருந்து அடைக்கலம் தேடி ஓடும் நம் சகோதர சகோதரிகளின் முகங்களில் இயேசுவைக் கண்டுகொள்ள, 'புலம்பெயர்ந்தோரின் ஆறுதலாகிய அன்னைமரியா' உதவுவாராக என வேண்டி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2020, 12:40
அனைத்தையும் படிக்கவும் >