சோஃபியா அமைதி வழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய உரை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கிய செபத்தின் உதவியுடன் அமைதிக்காக நாம் வேண்டினோம். படைத்தவரும், அனைவரின் தந்தையுமாய் இருக்கிற இறைவனை, புனித பிரான்சிஸ் அதிகம் அன்புகூர்ந்தார். அந்த அன்பை, படைப்பு மீதும், உலகில் அவர் சந்தித்த, உடன் திருப்பயணிகளான மனிதர்கள் மீதும், அவர் காட்டினார்.
அமைதியை உருவாக்கும் 'கலைஞர்கள்'
புனித பிரான்சிஸ் கொண்டிருந்த இந்த அன்புதான், அவரை அமைதியை உருவாக்குபவராக மாற்றியது. அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நாம் ஒவ்வொருவரும் அமைதியை உருவாக்கும் 'கலைஞர்களாக' வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் உருவாக்கும் அமைதி, ஒரு சிலரது அற்பத்தனமான சுயநலன்களை நிறைவு செய்வதைக்காட்டிலும், ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மாண்பை அளிப்பதில் செயலாற்றுகிறது.
ஒருவரை ஒருவர் சரிநிகராக புரிந்துகொண்டு, உரையாடலை வளர்ப்பதில் இந்த அமைதி அடங்கியுள்ளது. நம்மிடையே வேற்றுமைகள் இருந்தாலும், நம்மை ஒருங்கிணைப்பது எது என்பதைத் தேடுவதில், இந்த அமைதி அடங்கியுள்ளது.
நமது குழந்தைகள் கொண்டுவந்த விளக்குகளின் முன், இம்மாலையில், நாம் கூடி செபிக்கிறோம். நம் உள்ளத்தில் பற்றியெரியும் அன்புக்கு அடையாளமாக விளங்கும் இவ்விளக்குகள், இரக்கத்திற்கும், அமைதிக்கும் அடையாளமாக அமையட்டும். போர், மற்றும் மோதல் ஆகிய பனிப்பாறைகளை, இந்த அன்புத் தீ கரைப்பதாக.
அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் இடம்
பல்கேரியாவின் இதயமாக விளங்கும் சோஃபியாவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த செர்திக்கா (Serdika) அரங்கத்தின் அழிவுகள் நடுவே நமது அமைதிக் கொண்டாட்டம் இடம்பெறுகிறது. இந்த அரங்கத்தைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களை நம்மால் காணமுடிகிறது. ஆர்த்தடாக்ஸ் சபையினரின் புனித நெடெல்யாவின் ஆலயம், கத்தோலிக்கர்களின் புனித யோசேப்பு ஆலயம், இன்னும், யூதர்கள் மற்றும் இஸ்லாமியரின் தொழுகைக்கூடங்கள், ஆர்மேனியர்களின் கோவில் ஆகிய அனைத்தையும் நாம் காணமுடிகிறது. அனைத்து மதங்களையும் ஒருங்கிணைப்பதுபோல் காணப்படும் இந்த இடம், அமைதிக்காக நாம் கொண்டிருக்கும் தாகத்தின் அடையாளமாக விளங்கட்டும்.
'உலகில் அமைதி'
நமது குரல்கள் அனைத்தும், அமைதிக்காக இணைந்து எழட்டும். உலகெங்கும் அமைதி நிலவட்டும்: நமது குடும்பங்களில், நமது இதயங்களில், அனைத்திற்கும் மேலாக, போரினால் குரல்கள் ஒதுக்கப்பட்டுள்ள பல நாடுகளில், அமைதி நிலவட்டும். நாம் ஒவ்வொருவரும், "அமைதியின் கருவியாக என்னை உருவாக்கும்" என்று சொல்வோமாக.
உலகில் என்றும் அமைதி நிலவவேண்டும் என்பதை கனவு கண்டு, 'உலகில் அமைதி' என்பதை விண்ணப்பித்தவர், புனித திருத்தந்தை 23ம் ஜான். அவரது கனவிலும், விண்ணப்பத்திலும் நாமும் இணைந்து, சொல்வோம்: இறைவனால் அன்புகூரப்படும் அனைவருக்கும் இவ்வுலகில் அமைதி உரித்தாகுக.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்