மாசிடோனியா வளாகத்தில் திருப்பலி
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
மாசிடோனியா வளாகத்தில், இச்செவ்வாய் உள்ளூர் நேரம், முற்பகல் 11.30 மணிக்கு, இந்த வளாகத்தில், பாஸ்கா கால மூன்றாம் வார, செவ்வாய் தின திருப்பலியை ஆரம்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். சரயோவோ பேராயர், கர்தினால் Vinko Puljic அவர்களும், திருத்தந்தையுடன் சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார். இலத்தீன் மற்றும் மாசிடோனிய மொழிகளில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில், திருத்தந்தை மறையுரை ஆற்றினார். திருப்பலியின் இறுதியில், Skopje ஆயர் Kiro Stojanov அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி சொன்னார்.
பயணத் தயாரிப்புகளுக்கு திருத்தந்தை நன்றி
திருத்தந்தையும், அன்புச் சகோதரர், சகோதரிகளே, இறுதி ஆசீரை வழங்குவதற்கு முன்னர், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை வெளிப்படுத்த கடமைப்பட்டுள்ளேன். இந்த நாளுக்காக, மிகுந்த அக்கறை எடுத்து தயார் செய்த Skopje ஆயருக்கு சிறப்பான நன்றி. இதற்கு, அவரோடு சேர்ந்து உதவிய அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலை விசுவாசிகள் அனைவருக்கும் நன்றி. இந்நாட்டின் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மற்றும் தன்னார்வலர்களுக்கும் நன்றி. சிறந்ததை அறிந்திருக்கும் கடவுள் உங்களுக்கு நிச்சயம் பலனளிப்பார். நானும் உங்களை என் செபத்தில் நினைவுகூர்கிறேன், நீங்களும் எனக்காகச் செபியுங்கள் என தாழ்மையுடன் கேட்கிறேன் என்று கூறினார். பின்னர், இத்திருப்பலியில் பங்குபெற்ற ஏறத்தாழ 15 ஆயிரம் விசுவாசிகளை ஆசீர்வதித்து, Skopje ஆயர் இல்லம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வும் எடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Skopje மேய்ப்புப்பணி மையம்
இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 3.45 மணிக்கு, Skopje மேய்ப்புப்பணி மையம் சென்ற திருத்தந்தையை, இரு இளையோர், ரொட்டியும் உப்பும் கொடுத்து வரவேற்றனர். கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய இளையோர் கூட்டம் பாடலுடன் ஆரம்பமானது. கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் கலப்புமண ஒரு தம்பதியர், ஒரு முஸ்லிம் இளைஞர், ஒரு கத்தோலிக்க இளைஞர் ஆகியோர் சான்று பகர்ந்தனர். ஒவ்வொரு பகிர்வுக்குப் பின்னும், பாடல் இசைக்கப்பட்டது. இறுதியில் இடம்பெற்ற நடனத்திற்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். இளையோரின் ஆடல் பாடல்களில் மகிழ்ந்து, இறுதியில், அவர்களுக்காக புனித அன்னை தெரேசாவிடம் செபித்து, இந்நிகழ்வை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாய் மாலை 5 மணிக்கு, இந்திய-இலங்கை நேரம் இரவு 8.30 மணிக்கு, Skopje, இயேசுவின் தூய இதய பேராலயத்தில் அருள்பணியாளர், குடும்பத்தினர் மற்றும் இருபால் துறவியரைச் சந்திக்கிறார் திருத்தந்தை. அதற்குப் பின்னர், Skopje விமானத்தளம் சென்று உரோம் நகருக்குப் புறப்படுகிறார். இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 29வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவு பெறும். வட மாசிடோனியாவில், 65 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள். 33 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஒரு விழுக்காட்டினர் கத்தோலிக்கர். மற்றும் ஒரு விழுக்காட்டினர் ஏனைய மதத்தவர். இவர்கள் எல்லாருமே நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் இந்நாட்டில், திருத்தந்தையின் இந்த ஒருநாள் பயணம், மேலும் ஊக்கமளிக்கும் என நம்புவோம்.
Jean Vanierவின் குழுமத்திற்கு திருத்தந்தை
இச்செவ்வாயன்று இறைவனடி எய்திய, L'Arche (1964) குழுவின் நிறுவனர், Jean Vanier அவர்களுக்காக, திருத்தந்தை செபிக்கின்றார் மற்றும் அக்குழுமத்தினருக்கு தனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறார் என, திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள் தெரிவித்தார். தனது 90வது வயதில் இயற்கை எய்திய Jean Vanier அவர்கள், துன்புறும் மக்களுக்காகத் தனது வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தவர். மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு ஆதரவாக இவர் ஆரம்பித்த L'Arche குழுமம், ஏறத்தாழ 150 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. புற்றுநோயால் துன்புற்ற Vanier அவர்கள், பாரிசிலுள்ள L’Arche குழுவில் பராமரிக்கப்பட்டு வந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்