Baruipur மறைமாவட்டத்திற்கு வாரிசுரிமை ஆயர்
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் Baruipur மறைமாவட்டத்திற்கு, அருள்பணி Shyamal Bose அவர்களை, வாரிசுரிமை ஆயராக, மே 17, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள Baruipur மறைமாவட்டத்தின் Gosaba என்ற ஊரில் 1961ம் ஆண்டு பிறந்த, புதிய வாரிசுரிமை ஆயர் Shyamal Bose அவர்கள், 1991ம் ஆண்டு மே 5ம் தேதி அம்மறைமாவட்டத்திற்கென, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
பெங்களூரு புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரியில், விவிலியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள இவர், Baruipur மறைமாவட்டத்தின் சமுதாயநல மையத்தின் இயக்குனராகவும், அப்பகுதியின் சமுதாய முன்னேற்ற அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2016ம் ஆண்டு முதல், Baruipur மறைமாவட்டத்தின் பொருளாதார மற்றும் சான்சிலராகப் பணியாற்றி வருகிறார், புதிய வாரிசுரிமை ஆயர் Shyamal Bose.
Baruipur மறைமாவட்டம், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால், 1978ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மறைமாவட்டமாக உருவானது. 10, 568 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த மறைமாவட்டத்தில், 2011ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, 94,45,909 மக்களும், 2018ம் ஆண்டின் நிலவரப்படி, அம்மறைமாவட்டத்தில் 62,847 கத்தோலிக்கரும் உள்ளனர். பெங்காளி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் உட்பட வேறுபல மொழிகளும், இப்பகுதியில் பேசப்படுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்